
டி.நாராயண ரெட்டி, செக்ஸாலஜிஸ்ட்
கபிலர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டில் ஒரு பாடல் உண்டு. `வேரல் வேலி வேர்கோட் படவின்...’ எனத் தொடங்கும் அந்தப் பாடலில் தலைவியின் தோழி, தலைவனிடம் சொல்கிறாள்... `தலைவியின் காதல் நோய் மிகப் பெரியது. அவளால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை...’ காதலை, `நோய்’ எனச் சொல்கிறார் கபிலர். என்னிடம் ஆலோசனைக்கு வந்திருந்தார் ஒருவர். 50 வயது. ``எனக்கு சர்க்கரைநோய் இருக்கு. புகைபிடிப்பேன். கடந்த சில வாரங்களாக விரைப்புத் தன்மை சரியாக இல்லை. என் நண்பர் ஒருத்தர்கிட்ட `டாக்டரைப் பார்க்கலாமா?’னு கேட்டேன். `இதுக்குப் போய் ஏன் வீணா செலவு செய்யறே? 50 வயசாகிடுச்சு. ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. இனிமே உனக்கு எதுக்கு செக்ஸ்?’ என்று சொன்னார். மனசு கேட்காம உங்ககிட்ட வந்திருக்கேன்...’’ என்றார்.

நான் அவருக்கு விரைப்புத்தன்மை பிரச்னைக்கான சோதனைகளுடன், இதயத்துக்கான சோதனைகளையும் செய்யச் சொல்லி எழுதிக் கொடுத்தேன். அதில், அவருக்கு இதயத்திலிருக்கும் ரத்தக்குழாயில் பிரச்னை இருப்பது தெரியவந்தது. விரைப்புத்தன்மைக் கோளாறு இருந்தால், இதயத்தில் பிரச்னை இருக்கலாம்.
உடலின் ஒவ்வோர் உறுப்பும் சரியாகச் செயல்பட, ஆக்சிஜனும், ஊட்டச்சத்துகளும் தேவை. இவை ரத்தத்தின் மூலமாகத்தான் ஆணுறுப்பு உள்பட அனைத்து உறுப்புகளுக்கும் சென்றடைகின்றன. ரத்தம் சரியாகச் சென்றடைய, ரத்தக்குழாய் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ரத்தக்குழாயில் மொத்தம் மூன்று அடுக்குகள் இருக்கின்றன. அவற்றின், உள்ளேயிருக்கும் அடுக்கின் பெயர் `எண்டோதீலியம்’ (Inner layer - Endothelium). அதிக ரத்தம் தேவைப்படும்போது, இது விரிந்து கொடுக்கும்; மற்ற நேரங்களில் இயல்பாக இருக்கும். அதேபோல, உடலின் கழிவுகளும், கார்பன் டை ஆக்ஸைடும் வெளியேறுவதற்கு இந்த அடுக்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இந்த அடுக்கில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், ரத்தக்குழாய்க்கு சுருங்கி, விரியும் தன்மை இல்லாமல் போய்விடும்; சில நேரங்களில் ரத்தக்குழாய் அடைப்பும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
ஆணுறுப்புக்கு ரத்தம் சரியாகச் சென்றால்தான் விரைப்புத்தன்மை ஏற்படும். மூளையின் தூண்டுதலால் செக்ஸ் உணர்வு வரும்போது, ஆணுறுப்பில் ரத்த ஓட்டம் அதிகமாகி, விரைப்புத்தன்மை ஏற்படும். எண்டோதீலிய அடுக்கில் பிரச்னை ஏற்பட்டு, ரத்த ஓட்டம் தடைபட்டால் விரைப்புத்தன்மை ஏற்படாது. இதேபோல, இதயத்திலிருக்கும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால், நெஞ்சுவலி ஏற்படும். எண்டோதீலியத்தில் பாதிப்பு உண்டாக ஆரம்பித்துவிட்டால், அது உடலிலிருக்கும் அனைத்து ரத்தக்குழாய்களிலும் ஏற்படும்.

ஆணுறுப்பிலிருக்கும் ரத்தக்குழாயின் விட்டம் 1-2 மில்லிமீட்டர் இருக்கும். இதயத்திலிருக்கும் ரத்தக்குழாயின் விட்டம் 3-4 மில்லிமீட்டர் இருக்கும். ஆணுறுப்பில் இருக்கும் ரத்தக்குழாய் சிறியது என்பதால், அடைப்பு சீக்கிரத்தில் வெளியே தெரிந்துவிடும். ஆனால், இதயத்திலிருக்கும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால், மெதுவாகத்தான் தெரியும். `ஓர் ஆணுக்கு உடல்ரீதியான பிரச்னைகளால் விரைப்புத்தன்மைக் கோளாறு ஏற்பட்டால், ஏழு ஆண்டுகள் கழித்து இதயத்தில் கோளாறு ஏற்படும்’ என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கட்டுப்பாடில்லாத சர்க்கரைநோய், கொழுப்புச்சத்து, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், புகைபிடித்தல், புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவது, உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கைமுறை போன்றவையே இதற்குக் காரணங்கள். உடலின் மற்ற உறுப்புகளில் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது என்பதன் அறிகுறிதான் விரைப்புத்தன்மை கோளாறு. இந்தப் பிரச்னை ஏற்பட்டால், அலட்சியம் செய்யாமல் மருத்துவரைப் பார்க்கவேண்டியது அவசியம்.
(இன்னும் கற்றுத் தருகிறேன்...)
- மு.இளவரசன்