
எஸ்.கோகுலகிருஷ்ணன், இயற்கை மருத்துவ நிபுணர்
பழங்களைவிட ஜூஸ் சாப்பிடுவதையே குழந்தைகள் விரும்புவார்கள். ஏன், பெரியவர்களும் அப்படித்தான். ஆனால், ஜூஸாக அருந்துவது நல்லதா? பழமாகச் சாப்பிடுவது நல்லதா? என்பது தொடர்ந்து விவாதத்துக்குரிய ஒன்றாகவே இருந்து வருகிறது. பொதுவாக, பழங்களை அப்படியே சாப்பிடுவதுதான் நம் மரபு. காலப்போக்கில் அரைத்து ஜூஸாகக் குடிக்கப் பழகினோம். சிலர் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் ஜூஸ் குடிப்பார்கள். சிலருக்கு ஜூஸ்தான் உணவே. வெறும் வயிற்றில் ஜூஸ் குடிக்கலாமா? யாருக்கு, எந்த ஜூஸ் சரியானது? இப்படி ஜூஸ் குடிப்பது தொடர்பான பல கேள்விகளுக்கும் பதில்கள் தருகிறார் சென்னை அரும்பாக்கம் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உதவிப் பேராசிரியர் டாக்டர் எஸ்.கோகுலகிருஷ்ணன்.

``காலையில் வெறும் வயிற்றில் தாராளமாக ஜூஸ் குடிக்கலாம். பழங்களில் மட்டுமல்லாமல் காய்கறி, கீரைகளிலும்கூட ஜூஸ் எடுத்துக் குடிப்பது நல்லது. காய்கறி, பழங்களை ஜூஸாக்கிக் குடிப்பதால் சத்துகள் முழுமையாகக் கிடைக்கும். உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளும் வெளியேறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் அவரவர் தேவைக்கேற்ப தினமும் ஏதாவது ஒரு ஜூஸை அருந்தலாம். நோயாளிகள், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ஜூஸ் அருந்த வேண்டும்.

காய், பழங்களை ஃப்ரெஷ்ஷாகப் பயன்படுத்தினால்தான் முழுச் சத்துகளையும் பெறமுடியும். ஜூஸ் செய்வதற்குமுன், உப்புக் கலந்த வெதுவெதுப்பான நீரில் பழங்களைப் போட்டு, பிறகு சுத்தமான நீரில் கழுவிப் பயன்படுத்த வேண்டும். பெரும்பாலான பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோலில் வைட்டமின் ஏ, சி போன்ற பல்வேறு அத்தியாவசியச் சத்துகள் உள்ளன. எனவே தோலுடன் சேர்த்து அரைத்து அருந்துவது நல்லது. உதாரணமாக, ஆப்பிள், திராட்சை, மாம்பழம் போன்ற பழங்களையும், கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகளையும் தோலுடன் சேர்த்து அரைக்கலாம்.
பழங்களின் சதைப்பகுதியில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள், பைட்டோநியூட்ரியன்ட்டுகள் (Phytonutrients) நிறைந்துள்ளன. இந்தச் சத்துகளை முழுமையாகப்பெற அதிக நேரம் அரைப்பதைத் தவிர்க்க வேண்டும். நறுக்கி வைத்து மிகவும் தாமதமாக ஜூஸ் எடுத்துக் குடித்தால் சத்துகளை இழக்க நேரிடும்.’’
ஜூஸ் குடிப்பது ஆரோக்கியமான பழக்கமா? பழச்சாறுகளில் பால் சேர்த்துக் குடிக்கலாமா? உணவுடன் சேர்த்து ஜூஸ் குடிக்கலாமா? விளக்குகிறார் பொது மருத்துவர் அமுதநிலவன்.

``6 மாதக் குழந்தை முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் குடிக்கத் தகுந்தது, சாத்துக்குடி ஜூஸ். இதில் ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளன. இரண்டு பழங்களில் ஒருவருக்குத் தேவையான ஜூஸ் எடுக்கலாம். இதனுடன் தேன் அல்லது நாட்டுச்சர்க்கரை கலந்து அருந்துவது நல்லது.
கோடை வெயிலில் உடலில் ஏற்படும் நீர் வறட்சியை நீக்க தர்பூசணி பழச்சாறு நல்லது. இதில் 90 சதவிகிதம் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இதன் ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மை புற்றுநோயைத் தடுக்கும். `சிட்ருலைன்’ (Citrulline) உடற்பயிற்சிக்குப் பிறகு ஏற்படும் தசைத் தளர்ச்சியைப் போக்கக்கூடியது.
வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் சரும பாதிப்புகளுக்கு ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த மாதுளம்பழச்சாறு மிகவும் நல்லது. இதில் இரும்புச் சத்து உள்ளதால் கர்ப்பிணிகளுக்கு நல்லது. இதிலுள்ள சில ஆல்கலாய்டுகள் கர்ப்ப காலத்தில் வரும் தூக்கமின்மையை நீக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த ஸ்ட்ராபெர்ரி பழச்சாறு புற்றுநோயைத் தடுக்கும். இதிலுள்ள வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் போன்றவை உடலில் உள்ள மிதமிஞ்சிய சோடியத்தை வெளியேற்றி ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். பழச்சாறுகளில் பால் சேர்ப்பதற்குப் பதில் தேங்காய்ப்பால் சேர்த்துச் சாப்பிடலாம். வாழை, மா, கொய்யா, சப்போட்டா, ஆப்பிள் போன்ற பழச்சாறுகளுடன் தேங்காய்ப்பால் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. 200 மி.லி பழச்சாறுடன் 25 முதல் 30 மி.லி தேங்காய்ப்பால் சேர்த்துக் கொள்ளலாம். இனிப்புச்சுவையுள்ள வாழை, ஆப்பிள் போன்வற்றில் பால் சேர்க்கலாம். எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களுடனோ, தர்பூசணி, பப்பாளி, கிர்ணி போன்ற மெலன் பழங்களுடனோ பால் சேர்க்கக்கூடாது. இதேபோல் மாதுளம்பழத்துடன் பால் சேர்த்து மில்க்ஷேக்காகக் குடிக்கக்கூடாது.
பழ ஜூஸ் விற்கப்படும் கடைகளில் காய்ச்சாத பாலைச் சேர்க்கிறார்கள். பெரும்பாலும் பாக்கெட் பால்தான் பயன்படுத்தப்படுகிறது. பாக்கெட் பாலில் உள்ள பாக்டீரியாக்களைக் கட்டுப்படுத்த முடியாது; காய்ச்சாத பால் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தலாம் என்பதால் அதை தவிர்க்கவும். உணவு உண்ணும் நேரத்துக்கும் ஜூஸ் அருந்தும் நேரத்துக்கும் 30 நிமிட இடைவெளியாவது இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.’’


இன்ஃபோகிராபிக்ஸ்: எஸ்.ஆரிப் முகம்மது
ஜூஸ் தயாரிக்கும்போது பின்பற்ற வேண்டியவை முதல் அடிக்கடி ஜூஸ் குடிக்கும் பழக்கமுள்ளோர் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் வரை விளக்குகிறார் உணவியல் நிபுணர் யசோதரை.
``நம் தட்பவெப்பத்துக்கு, கொய்யா, மாதுளை, திராட்சை போன்ற நாட்டுப் பழங்களின் ஜூஸ் மிகவும் ஏற்றது. ஆனால், பழங்களில் இயற்கையான சர்க்கரைச் சத்து இருக்கிறது. வெள்ளைச்சர்க்கரைக்குப் பதில் நாட்டுச்சர்க்கரை, பனங்கற்கண்டு சேர்த்துக் குடிப்பது நல்லது.

கர்ப்பிணிகள், அல்சர் உள்ளவர்கள் தாராளமாக ஜூஸ் அருந்தலாம். கோடை காலங்களில் ஜூஸ் அருந்துவது மிகவும் நல்லது. பல்வேறு கோடை நோய்களுக்குப் பழச்சாற்றில் தீர்வு இருக்கிறது. சர்க்கரை நோயாளிகள், உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் ஜூஸ்களைத் தவிர்ப்பது நல்லது. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் எலுமிச்சை ஜூஸ், புதினா ஜூஸ் போன்றவற்றை உப்பு சேர்க்காமல் அருந்துவது நல்லது. பழ ஜூஸைவிட ஸ்மூத்தி கெட்டியாக இருப்பதால், அது செரிமானமாக நேரமாகும். அதனால் ரத்த சர்க்கரையின் அளவு உடனடியாக அதிகரிக்காது. அதனால், பழச்சாற்றுக்குப் பதிலாக ஸ்மூத்தி சாப்பிடுவது நல்லது. சாதாரண ஜூஸைவிட ஸ்மூத்தியில் பழக்கலவையின் அளவு சற்று அதிகமாக இருக்கும். ஸ்மூத்தி அருந்துவதால் ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின்கள், நார்ச்சத்து போன்றவை கிடைக்கும்.
சிலர் மொத்தமாக ஜூஸ் செய்து ஃப்ரிட்ஜில் வைத்துக் குடிப்பார்கள். இப்படிச் செய்வதால் உடலுக்குப் போதுமான சத்துகள் கிடைக்காமல் போவதுடன் நோய்கள் உருவாகவும் வாய்ப்புள்ளது. அதேபோல் சாலையோரங்களில் பல்வேறு பழங்களை மொத்தமாக அரைத்து ஜூஸாக்கி வைத்திருப்பார்கள். காலையில் தயாரித்த அந்தப் பழ ஜூஸை மதியம்வரை வைத்து விற்பார்கள். அதை வாங்கிக் குடிப்பதால் பாக்டீரியாக்கள் உற்பத்தியாகி நோய்களே கிடைக்கும். இளநீரை எப்படி கண் முன்னால் சீவி உடனடியாகக் குடிக்கிறோமோ அதேபோல்தான் காய்கறி மற்றும் பழங்களில் ஜூஸ் செய்து குடிக்க வேண்டும்.
எது சரியான கலவை?
ஒருநாளைக்கு ஒருவர் 200 மி.லி அளவு ஜூஸ் குடிக்கலாம். ஆப்பிள் ஜூஸாக இருந்தால் அரை ஆப்பிள் பழத்துடன் 100 மி.லி பால், 50 மி.லி நீர் சேர்த்துக் கொள்ளலாம். வாழை மற்றும் மாம்பழங்களில் ஜூஸ் செய்யும்போது அரைப்பழத்துடன் 100 மி.லி நீர், 75 மி.லி பால் சேர்க்கலாம். இனிப்புக்கு நாட்டுச்சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். நீருக்குப் பதில் இளநீர் சேர்த்துக் கொள்ளலாம். ஜூஸில் தயிர் மற்றும் சாக்லேட் சிரப் சேர்ப்பது மிகவும் தவறு.
காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சைச் சாறு கலந்து குடிப்பது உடல்நலத்துக்கு நல்லது என்று சொல்லி அதைப் பின்பற்றுகின்றனர். இதில் உள்ள சிட்ரிக் அமிலம் பிரச்னையை ஏற்படுத்தும் என்பதால் காபி, டீ குடித்த பிறகு சுமார் ஒரு மணி நேரம் கழித்து வேண்டுமானால் ஜூஸ் குடிக்கலாம். அதேபோல் காலை உணவுடனோ அல்லது 10-ல் இருந்து 10.30 மணிக்குள் வேண்டுமானால் ஜூஸ் குடிக்கலாம். அதிகாலை மற்றும் இரவு வேளைகளில் ஜூஸ் அருந்துவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
அசைவ உணவு சாப்பிட்டால் எலுமிச்சை ஜூஸ் அருந்தலாம். வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு, அதன் பிறகு ஜூஸ் குடிப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
- எம்.மரிய பெல்சின்