
போப்பு, மருத்துவ எழுத்தாளர்
பெண், பருவமடைந்ததை அடுத்து அவளுக்குச் செய்யும் சடங்கு சம்பிரதாயங்களில் உள்ள அக்கறையை, அவளது உடல் ஆரோக்கியத்தில் நாம் யாரும் காட்டுவதில்லை. உடல் நல அம்சத்தில் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றி வந்த பல்வேறு பழக்கங்கள் தற்காலத்தில் முந்தைய தலைமுறையிடமிருந்து அடுத்தத் தலைமுறைக்குக் கடத்தப் படுவதில்லை. அவற்றைப் பத்தாம் பசலித்தனம் என்று பரவலாகக் கருதுகின்றனர்.
பொருளாதாரத் தேவையும் வாழ்வதற்கான போட்டியும் உடல் நலன்மீது காட்டும் அக்கறையைப் புறந்தள்ளச் சொல்கிறது. `அந்த நாளுக்காகக் கனவுகளை ஒத்திவைக்க முடியாது; சாடிக் குதித்து ஓட வேண்டும்’ என்கிறது `நாப்கின்’ விளம்பரம் ஒன்று. பழங்கால வழக்கப்படி மூன்று நாள்கள் மூலையில் முடங்கிக் கிடக்க வேண்டும் என்ற வாதத்தை ஒதுக்கி விடுவோம்.

ஆனால் அந்த நாள்களை எளிதாகக் கடந்து செல்லும்விதமாக மற்ற நாள்களில் உடலை முறையாகப் பேண வேண்டும். ஏறத்தாழ 50 சதவிகிதப் பெண்களுக்கு அந்த மூன்று நாள்கள் மட்டுமல்ல, அதற்கு முன்னும் பின்னும் எனச் சுமார் ஒருவார காலம் உடல் வலி, பிரசவ வேதனையை நினைவூட்டும் அளவுக்கு இருக்கிறது. மன அழுத்தமும் இளம் வயதுக்குரிய துடுக்குத்தனத்தையே முடக்கிப் போடும் சுமையாக இறங்கிக் கொண்டிருக்கிறது.
உண்மையில் குழந்தை பெற்றெடுப்பது சிறுநீர் கழித்தல் போல, காலைக்கடன் கழித்தல் போல மிகவும் எளிதாக நடந்து முடியக் கூடிய ஒன்றே. சொல்லப்போனால் காலமெல்லாம் நினைத்து, நினைத்துப் பெருமிதங்கொள்ள வேண்டிய சுகானுபவம். ஆனால் மாதவிடாயின்போது ஏற்படும் ரத்தப்போக்கு அதிகத் துன்பம் தரக்கூடியதாக மாறி விட்டது. ஒரே சீரான இடைவெளியில் நிகழ்வதும் குறைந்து கொண்டே வருகிறது.

ரத்தப்போக்கு தாமதம், குழந்தைப் பேறின்மை, குழந்தை பெறும் காலத்தில் ஏற்படும் நெருக்கடி, சிசேரியனுக்குப் பிறகு நிரந்தர மூட்டு வலி, குதிகால் வலி, முதுகு வலி எனப் பெண்களுக்கு வாழ்நாள் தொல்லைகளாக நீடிக்கின்றன. இதற்குத் தற்கால வாழ்க்கை முறையும் உணவு முறையுமே அடிப்படையான, முக்கியமான காரணங்கள்.
ஒரு பெண்ணின் உடல் நலம் என்பது அவளது அழகு, திறன் ஆகியவற்றுடன் மட்டுமே முடிந்து விடுவதல்ல. மாறாக, குடும்பத்தினரின் உடல் நலத்தோடும், ஒட்டுமொத்தக் குடும்பத்தின் மேம்பாட்டுடனும் தொடர்புடையது. வளரும் நாடுகளில் பெரும்பாலான பெண்களுக்கு வாழ்நாள் முழுவதும் குடும்பத்தில் மற்றவர்களைக் காட்டிலும் மோசமான உணவே கிடைக்கிறது.
மிகவும் சிறிய நகரங்களில்கூட அழகு நிலையங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால் அவர்களது உடல் நலம் குறித்த அக்கறை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது. குழந்தைகளைத் திடகாத்திரமாக வளர்க்கலாம் என்று சொல்லும் விளம்பரங்களை நம்பி உணவுப் பொருள்களை வாங்கித் திணிக்கிறோம். விளைவு, குழந்தைகளின் உடல் எடையை எக்கச்சக்கமாகப் பெருக்குகிறோமே தவிர அவர்களின் உள்ளுறுப்புகளின் ஆற்றல், அவர்களது உடல் நலன் குறித்த கவனம் நமக்குக் கிடையாது.
குறிப்பாகப் புரதச்சத்து அதிகமுள்ள இறைச்சி, பருப்பு வகைகள் மற்றும் பால் பொருள்களைச் சாப்பிடும் பெண்கள் மிக இளம்வயதிலேயே அதாவது 12, 13 வயதிலேயே பருவமடைந்து விடுகிறார்கள். பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நொறுக்குத்தீனிகளே இளம் வயதில் பருவமடைவதற்கு முக்கியக் காரணமாகும். சத்தில்லாத, அதிக ரசாயனம் கலந்த நொறுக்குத் தீனிகளை ஜீரணிக்க வழக்கத்துக்கு மாறாகச் சுரப்பிகள் சுரப்பதால் முன்னதாகவே பருவமாற்றம் நிகழ்கிறது. சில பெண்கள் 14 வயதான நிலையில் பருவமடையாமல் இருப்பதை ஒரு குறைபாடாகக் கருதுமளவுக்கு நிலைமை மாறி விட்டது. பெண் பருவடைய 14 முதல் 16 வயதே பொருத்தமான காலமாகும்.
சுரப்பிகளின் தடுமாற்றத்தால் முன்கூட்டியே பருவமடைவதுடன் தைராய்டு கூடுதலாகவோ, குறைவாகவோ சுரந்து நிரந்தரச் சிக்கலை ஏற்படுத்திவிடும். தைராய்டு சுரப்பதைக் கட்டுப்படுத்தச் சாப்பிடும் மருந்துகளால் உடல் பருமனும் ரத்தப்போக்கும் முன்னுக்குப் பின் முரணாகவும் அதிகமாகவும் நடக்கிறது.
பெண் பருவமடையும்போது ஏற்படும் ரத்தப்போக்கால் உண்டாகும் பலவீனத்தை ஈடுசெய்ய முட்டையில் நல்லெண்ணெய் ஊற்றிக் குடிப்பது குறித்துக் கடந்த இதழில் பார்த்தோம். அது இன்றைய பெண்களின் உடலுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை. அதற்குப் பதிலாக எள்ளுப் பொடி, எள்ளுத் துவையல் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது சாத்தியமே.
பாதிக்குப் பாதி எள், துவரம் பருப்பு சேர்த்து லேசான சூடாகும்விதமாக வறுத்து, குறைந்த அளவு மிளகு, காய்ந்த மிளகாய், சீரகம், உப்பு சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளலாம். இந்தப் பொடியை சுடுசாதத்துடன் நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட அத்தனைச் சுவையாக இருக்கும். இதே பொடியை இட்லி, தோசைக்கும் தொட்டுச் சாப்பிடலாம். எள், உளுந்து இரண்டையும் பாதிக்குப் பாதி எடுத்துப் பச்சை வாசனை போகுமளவு எண்ணெய் விட்டு வறுக்க வேண்டும். அதனுடன் சிறிது தேங்காய், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைத்தால் எள்ளுத் துவையல் ரெடி. இதனுடன் சிறிதளவு புளியும் சேர்த்து அரைத்துக் கொண்டால் எளிதில் கெடாது. இந்தச் சட்னியை இட்லி, தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம். அரிசிக் கஞ்சிக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
முன்பெல்லாம் விவசாயக் குடும்பங்களில் தீபாவளி, பொங்கலுக்கு மட்டுமே இட்லி, தோசை பலகாரங்கள் செய்யப்பட்டன. ஆனால், இன்றைக்கு பாதிக்கும் மேலான நடுத்தரக் குடும்பங்களில் ஒருநாளைக்கு இரண்டு வேளை உணவாகிவிட்டது. மற்ற பயறு வகைகளைக் காட்டிலும் உளுந்து அடர்த்தியான புரதத்தைத் தரும் என்பதால், அரிசியுடன் ஒன்றுக்குக் கால் என்ற விகிதத்தில் கலந்து சாப்பிடுவது நல்ல பலனைத் தரும் என்பது உண்மையே. ஆனால் இன்றைக்கு நாம் பயன்படுத்தும் உளுந்தில் அதன் சத்துகள் அனைத்தும் நீக்கப்படுகின்றன என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பயறு வகைகளின் பாதுகாப்புக் கவசமான தோலானது, தனக்கும் பருப்புக்கும் இடைப்பட்ட படுகையில் உள்ள சத்துகளைப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தோலில் உள்ள நார்ச்சத்துதான் பருப்பைச் செரிக்கும் கடினத் தன்மையை இலகுவாக்குகிறது.
இன்றைய தலைமுறையினர் எந்தப் பயறையாவது அதன் மேல் தோலுடன் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே. தோல் நீக்கிய பருப்பையே தொடர்ந்து பயன்படுத்தி வருவதால்தான் மிகவும் இளம் வயதிலேயே வாய்வுக்கோளாறுகளுக்கு ஆளாக நேரிடுகிறது. பயறு பற்றிப் பிறகு தனியாகப் பார்க்கலாம். இளம்பெண்கள் தங்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கின் வழியாக இழப்பதாகத் தோன்றும் ஆற்றலைச் சரிகட்ட உளுந்தை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இன்றைக்கும் கிராமங்களில் குழந்தை பிரசவித்த பெண்களுக்கு ஆரம்ப நாள்களில் உளுந்தங்களி செய்து கொடுப்பார்கள்.
உளுந்தங்களி எப்படிச் செய்வது என்பதையும் தெரிந்து கொள்வோமா? ஒரு பங்கு அரிசி, மூன்று பங்கு தோலுடன் கூடிய உளுந்து இரண்டையும் இளம்வறுப்பாக வறுத்து சிறிதளவு சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம் சேர்த்து ரவைப் பதத்தில் அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த உளுந்துப் பொடியில் ஒன்றுக்கு மூன்று பங்கு நீர் சேர்த்துக் கொதிக்க வைத்து, தணலைக் குறைத்து மாவைக் கொட்டிக் கெட்டிப்படாமல் கிளற வேண்டும். களி கிளறுவதற்குச் சிரமமாக இருந்தால் சிறிதளவு நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்துக் கொள்ளலாம். இந்தக் களிக்குப் பொடித்த வெல்லத்தைத் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். சுக்கு, மிளகு, சீரகம் அரைத்துச் சேர்த்து வெல்லப்பாகு கலந்தும் செய்வார்கள்.

வெல்லம், சுக்கு சேர்த்துச் சாப்பிடும்போது செரிமானமாகக் கொஞ்சம் கடினமான உளுந்து எளிதில் செரிமானமாகும். அத்துடன் சுக்கினால் ஏற்படும் மலக்கட்டை வெல்லம் இளக்கிக் கொடுக்கும். இன்றைக்குக் களி என்பது மிகவும் அரிதான உணவுப் பண்டமாகி விட்டது. சமைக்கவும் எளிது, உண்பதும் எளிது. அதன் துணைப் பண்டத்தைப் பொறுத்து நிதானமாகவோ, விரைவாகவோ செரிக்கும். குறிப்பாகக் காலையில் அனைவரும் கிளம்பும் அவசரத்தில் களி மிகவும் நல்ல உணவு.
உளுந்தங்களியைப் போலவே உளுந்தங்கஞ்சியும் நல்ல சத்தான உணவு. ஒன்றுக்கு மூன்று என்ற அளவில் தோல் நீக்காத முழு உளுந்து அல்லது உடைத்த உளுந்து, புழுங்கல் அரிசி எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை லேசாக வறுத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ள வேண்டும். அதில் ஒன்றுக்கு ஐந்து பங்கு நீர் விட்டு ஒரு மண் பாத்திரத்தில் வேக விட வேண்டும்.
முக்கால் பங்கு வெந்ததும் அதனுடன் ஐந்தாறு பூண்டுப் பல், துருவிய இஞ்சி ஒரு டீஸ்பூன், விரும்பினால் ஒரு பெரிய வெங்காயம் சேர்த்துக் குழைய வேக விட வேண்டும். அடுப்பிலிருந்து கீழே இறக்கும்போது ஒரு டீஸ்பூன் இடித்த மிளகு, சீரகத்தை நெய்யில் தாளித்துக் கொட்டிச் சூடு ஆறியதும் சாப்பிட்டால் நாவில் அமிர்தமாக இறங்கும். வயிற்றில் இதமாகத் தவழும்.
கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, தேங்காய், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைத்த துவையலை இதற்குத் தொட்டுக் கொள்ளலாம். இந்தக் கூட்டணி ஒன்றுக்கொன்று இணக்கமாக இருப்பதால் வழக்கமான காலை உணவுக்குப் பிறகு ஏற்படக்கூடிய மந்தத்தன்மை நீங்கி உடல் சுறுசுறுப்பாகும். மேலே சொன்ன கஞ்சி, களி எதுவாக இருந்தாலும் சத்தானவை என்றாலும், வயிற்றுக்குத் தொல்லை தராதவை. மிகவும் எளிதாகச் செரிமானமாவதால் பெண்களின் இடுப்புப் பகுதி பருமனாகாது. இடுப்புப் பகுதி பருக்காமல் இருந்தாலே குழந்தைப்பேறு மிகவும் இலகுவாக இருக்கும்.
உடல் வனப்பைப் பேண மேலும் சில உணவு வகைகள் குறித்துத் தொடர்ந்து பார்ப்போம்!
நிலாச்சோறு ஊட்டுவோம்...
படம்: மதன்சுந்தர்