மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 10

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 10
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 10

டி.நாராயண ரெட்டி, செக்ஸாலஜிஸ்ட்

பெண்கள் சரியாக செக்ஸில் ஈடுபட முடியாததற்கு, உடல்ரீதியான காரணங்களைவிட, முட்டுக்கட்டை போடும் மூடநம்பிக்கைகளே அதிகம். சில வருடங்களுக்கு முன்னர், வட மாநிலத்தைச் சேர்ந்த  தம்பதியர் என்னைச் சந்திக்க  வந்தார்கள். புதிதாகத் திருமணமானவர்கள். `டாக்டர், என் மனைவி உறவில் ஈடுபட மறுக்கிறாள். கட்டிப்பிடிக்கும்போது, முத்தம் கொடுக்கும்போது, உறவுக்கு முன்னர் ஃபோர்ப்ளேயில் ஈடுபடும்போதெல்லாம் ஆர்வத்தோடு நன்றாக ஒத்துழைக்கிறாள். ஆனால், செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது, பதற்றமடைகிறாள்; பெருமூச்சுவிடுகிறாள்; பற்களை நறநறவெனக் கடிக்கிறாள்; பயப்படுவதுபோல் தலையணையைக் கட்டிப்பிடித்துக்கொள்கிறாள்; இரு தொடைகளையும் பிணைத்துக்கொண்டு உறவில் ஈடுபட முடியாதபடிச் செய்கிறாள். ஏன் இப்படி நடந்துகொள்கிறாள் என்பது புரியவில்லை. ஏதாவது வழி சொல்லுங்கள்...’ என்றார்.

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 10

கவலையோடு கேட்ட கணவரிடம்,  `இந்தப் பிரச்னைக்குப் பெயர் `வஜைனிஸ்மஸ்’ (Vaginismus). உறவில் ஈடுபடும்போது, வலிப்பதாலோ, வலிக்குமோ என்ற பயத்திலோ சில பெண்கள் இப்படி நடந்துகொள்வார்கள். இதை அவர்கள் உணர்ந்து செய்வதில்லை, தன்னை அறியாமலேயே செய்வார்கள்’ என்று சொல்லி, அவர்களின் பிரச்னைக்குச் சிகிச்சையளித்தேன். `வஜைனிஸ்மஸ்’… புதிதாகத் திருமணமான பெண்களுக்கு மட்டுமல்ல, திருமணமாகிச் சில வருடங்கள் கழித்தும்கூட ஏற்படலாம். இந்த பயம் வருவதற்கான முக்கியக் காரணங்கள்… `முதலிரவின்போது, பெண்ணுறுப்பின் கன்னித்திரை கிழிந்து கடுமையான வலி இருக்கும், ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும்’ என்று சுற்றியுள்ளவர்கள் பேசுவது; சினிமாக்களில் இதுபோன்ற காட்சிகளைப் பார்த்து, அதை நம்புவது. சிறு வயதில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களுக்கும் இந்தப் பிரச்னை ஏற்படலாம். `செக்ஸ் என்பது குழந்தை பெற்றுக்கொள்ள மட்டும்தான். இன்பத்துக்காக உறவுகொள்ளக் கூடாது. அது தவறு, பாவம்’ என்ற மூடநம்பிக்கையாலும் ஏற்படலாம்.

சொல்லித் தெரிவதே மன்மதக் கலை! - 10

திருமணத்துக்குப் பிறகு இந்தப் பிரச்னை ஏற்பட வேறு காரணங்கள் இருக்கின்றன. பெண்ணுறுப்பில் நோய்த்தொற்று, காயம், கர்ப்பப்பை அறுவைசிகிச்சையைச் சரியாகச் செய்யாமல் போவது, இடுப்பெலும்பின் இணைப்புகளில் வலி போன்றவை. இந்த பாதிப்பு ஏற்பட்டால், மனைவி வேண்டுமென்றே இப்படிச் செய்கிறாள் என்று நினைத்துக்கொண்டு, கோபத்தில் காயப்படுத்தும்விதமாகப் பேசுவார் கணவர். சில ஆண்கள் வேறு பெண்களிடம் உறவு வைத்துக்கொள்வார்கள். `நீ  உணர்ச்சியற்ற ஜடம்’ என்ற திட்டு விழும். இதனால் கணவன்-மனைவி உறவில் விரிசல் ஏற்படும்.

மனரீதியாக இது ஏற்பட்டால், செக்ஸ் தெரபி (Sex Therapy) மூலம், கொஞ்சம் கொஞ்சமாகப் பெண்ணுக்குப் புரியவைத்துச் சரிசெய்துவிடலாம். உடல்ரீதியான காரணங்களாக இருந்தால், அவற்றுக்கு ஏற்ற சிகிச்சையை மேற்கொள்ளலாம். இந்தப் பிரச்னை குறித்து ஆணுக்கு எடுத்துச்சொல்லிப் புரியவைக்கவேண்டியது அவசியம். இதற்கு  நல்ல மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. இதைக் காரணமாகக் காட்டி, ஒருவர் மேல் குற்றம் சுமத்தக் கூடாது.  தீர்வைக் கண்டறியுங்கள். இல்லறத்தில் திகட்டாத இன்பம் பெறுங்கள்!

(இன்னும் கற்றுத் தருகிறேன்...)

தொகுப்பு: மு.இளவரசன்