
உயிர் திரவம்
மனித உடலில் 60 சதவிகிதத்துக்கும் மேல் தண்ணீர் நிரம்பியிருக்கிறது. ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கும் காரணியாகவும் தண்ணீர் விளங்குகிறது. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தண்ணீரை நாம் போதுமான அளவுக்குக் குடிக்கிறோமா? வெயில் காலத்தில், ஏசி அறையில் இருந்தாலும்கூடப் போதிய அளவுக்குத் தண்ணீர் குடிக்கவில்லையென்றால் உடலில் நீர்ச்சத்துக் குறைந்துவிடும். கோடை காலத்தில் பல்வேறு உடல்நலக் கோளாறுகளிலிருந்து நம்மைக் காப்பது தண்ணீர் தான்!


பையில் எப்போதும் இருக்கட்டும் பாட்டில்!
வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது பையில் எப்போதும் தண்ணீர் பாட்டில் வைத்திருப்பது நல்லது. இந்தப் பழக்கம், அடிக்கடி தண்ணீர் குடிக்கும் எண்ணத்தை நமக்கு உருவாக்கும்.

ஜூஸ் ஓ.கே!
தண்ணீரை மட்டுமே குடித்துக்கொண்டிருப்பது, சலிப்பை ஏற்படுத்துகிறதா? தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சை, உப்பு சேர்த்து ஜூஸாகக் குடிக்கலாம். பழச்சாறுகளையும் குடிக்கலாம்.

பழங்கள், காய்கறிகளில் நீர்ச்சத்து!
நீர்ச்சத்து அதிகமிருக்கும் தர்பூசணி, திராட்சை, ஆரஞ்சு, ஆப்பிள், வெண்பூசணி, சுரைக்காய், வெள்ளரி, தக்காளி போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தண்ணீர் கணக்கீடு!
தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள் என்று ஒரு வாரத்திற்குக் கணக்கிடுங்கள். சராசரி அளவைவிடக் குறைவாகக் குடித்தால், அளவை அதிகப்படுத்துங்கள்.

கூடுதல் தண்ணீர் கூடுதல் எனர்ஜி!
கோடை வெயிலின் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க, தண்ணீரின் அளவையும் அதிகப்படுத்துங்கள். கூடுதல் தண்ணீர், கூடுதல் எனர்ஜியைத் தரும், வியர்வையால் நீர்ச்சத்து குறைவது தடுக்கப்படும்.
- ராகினி ஆத்ம வெண்டி.மு