ஹெல்த்
Published:Updated:

நிலம் முதல் ஆகாயம் வரை... உபவாச சிகிச்சை

நிலம் முதல் ஆகாயம் வரை... உபவாச சிகிச்சை
பிரீமியம் ஸ்டோரி
News
நிலம் முதல் ஆகாயம் வரை... உபவாச சிகிச்சை

யோ.தீபா, இயற்கை மருத்துவ துணைப் பேராசிரியர்

யற்கை மருத்துவத்தில் ஆகாயத்தை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுவது உபவாச சிகிச்சை. ஆகாயம் எப்படி வெற்றிடமாக உள்ளதோ, அதைப்போல, உபவாச சிகிச்சையின்போது வயிறு, குடல் மற்றும் செரிமான மண்டலப் பகுதிகள் வெற்றிடமாக இருக்கும்.

நிலம் முதல் ஆகாயம் வரை... உபவாச சிகிச்சை

உபவாசம் என்பது இயற்கை வழியிலான, மிகவும் பழைமையான சிகிச்சை முறை. இது இயற்கை மருத்துவத்தின் முக்கிய யுத்தியாகச் சொல்லப்படுகிறது. இந்த சிகிச்சை முறை, நம் முன்னோரின் வாழ்க்கைமுறைகளில் ஒன்றாகவே இருந்திருக்கிறது. அமாவாசை, ஏகாதசி போன்ற முக்கிய நாள்களில் ஒருவேளையோ, நாள் முழுவதுமோ அவரவர் உடல்நிலைக்கேற்ப உணவு, நீர் உட்கொள்ளாமல் இருப்பார்கள். கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும்கூட 40 நாள்கள் உபவாசத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். காலங்காலமாகப் பல்வேறு வடிவங்களில் இந்த உபவாசம் பின்பற்றப்பட்டு வருவதற்குக் காரணம் அதில் உள்ள அறிவியலே.  `லங்கணம் பரம ஔஷதம்’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். வடமொழிச் சொல்லான இதன் பொருள் `பட்டினி கிடத்தலே மிகச்சிறந்த மருந்து’ என்பதாகும். அந்த அடிப்படையில்`உபவாசம்’ என்பது எந்த உணவையும் எடுத்துக் கொள்ளாமல் இருப்பதே. இதனால் நோய்கள் குணமாவதுடன் வயிறு, குடல் மற்றும் செரிமான மண்டலத்தில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்பட்டு சுத்தமாக்கப்படும்.

நிலம் முதல் ஆகாயம் வரை... உபவாச சிகிச்சை

இரண்டு நாள்கள் முதல் 40 நாள்கள் வரை மேற்கொள்ளப்படும் இந்த சிகிச்சை முறையில், எதையுமே உண்ணாமல் இருப்பது, வெறும் நீரை மட்டுமே அருந்தி உபவாசம் இருப்பது, பழம் அல்லது காய்கறிகளை மட்டுமே உண்டு உபவாசம் இருப்பது எனப் பலவகைகள் உண்டு. சர்க்கரை நோயாளிகள் நீண்ட நேரம் உணவு உண்ணாமல் இருப்பது அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், பிரத்யேகமாக அவர்களுக்குச் சில மாற்றங்களுடன் உபவாச சிகிச்சை அளிக்கப்படும்.

உபவாசம் இருக்கும்போது, உடலில் இருக்கும் சக்தியானது செரிமான மண்டலம் மற்றும் வளர்சிதை மாற்றத்தின் (மெட்டபாலிசம்) செயல்பாடுகளை மாற்றி உடலில் இருக்கும் கழிவுகளைச் சருமம், நுரையீரல் போன்ற உறுப்புகளின் வழியாக வெளியேற்றிவிடும். இயற்கையான முறையில் கழிவுகள் அகற்றப்படுவதால் பல நோய்கள் குணமாகும்.  உபவாச சிகிச்சை எடுப்பதற்கு முன், முதலில் மனரீதியாக நம்மைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அதன்பிறகு, அதற்குண்டான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். நோய்களைப் பொறுத்துத் தொடர்ச்சியாகவோ, விட்டுவிட்டோ உபவாசம் இருக்க வேண்டியிருக்கும் என்பதால், இயற்கை மருத்துவர் ஒருவரின் ஆலோசனையின்பேரில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

உபவாச சிகிச்சை காலத்தில் குறைந்தது 3 லிட்டராவது தண்ணீர் அருந்த வேண்டும். உடல் கழிவுகளை மட்டுமல்லாமல் கெட்ட கொழுப்புகளையும் அந்தத் தண்ணீர் கரைத்து வெளியேற்றிவிடும். இதன்மூலம் உடல்பருமன் குறையும். உபவாச சிகிச்சையின்போது ஓய்வு அவசியம். மிகவும் களைப்பாக இருக்கும். தூக்கமும் வராது. அலைச்சல்கள் தவிர்த்து முழு ஓய்வில் இருப்பது நல்லது.  ஜூஸ் மட்டும் அருந்தி உபவாச சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது அவசியம் ‘எனிமா’ எடுக்க வேண்டும். இந்த சிகிச்சைமுறையில் குடலில் உள்ள கழிவுகள் மிக எளிதாக வெளியேறும். உபவாச சிகிச்சையின்போதே, முழு உடல் அல்லது குறிப்பிட்ட உடல் உறுப்புகளுக்கு மண் சிகிச்சை அளிக்கப்படும். இதனால் உடல் சூடு குறைந்து இயற்கையான முறையில் பசி தூண்டப்படும்.

உபவாச சிகிச்சையின்போது சூரியக் குளியல் எடுத்துக்கொள்வதும் கழிவுகளை வெளியேற்ற உதவும். சூரியன் உதிக்கும்போதும் மறையும்போதும் இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம். சிகிச்சைக் காலத்தில், உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும். உபவாச சிகிச்சையால், நாக்கில் வெள்ளை நிறம் படிவதும், வாய் துர்நாற்றமும் நீங்கும்; கண்களுக்குப் போதிய எனர்ஜி கிடைக்கும். சருமம் பொலிவு பெறும்; நன்றாகப் பசி எடுக்கும்; மன அழுத்தம் நீங்கும்.  உபவாச சிகிச்சையை முடித்ததும் உடனடியாக வழக்கமான உணவைத் தொடரக்கூடாது. காரமில்லாத, எளிதில் செரிமானமாகும் உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.

அடுத்த இதழில் சூரிய சிகிச்சை பற்றிப் பார்ப்போம்!

- எம்.மரியபெல்சின்