ஹெல்த்
Published:Updated:

ஜீரோ ஹவர்! - 8

ஜீரோ ஹவர்! - 8
பிரீமியம் ஸ்டோரி
News
ஜீரோ ஹவர்! - 8

ஜீரோ ஹவர்! - 8

காதலில் முதல் வாரம்... மிக அழகானது. மனம் முழுக்கப் பட்டாம்பூச்சிகள் பறக்கும். `புதிதாக ஏதாவது செய்ய வேண்டும்’ என நெஞ்சம் துடிக்கும். `உலகிலேயே நாம்தான் பெஸ்ட்’ எனக் காட்டிவிட வேண்டும் என்கிற உந்துதல் பிறக்கும். புதிதாகக் காதலிப்பவர்களுக்கு மட்டுமல்ல, உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் இது பொருந்தும். முதல் வாரப் பரபரப்பைக் கடப்பது அத்தனை எளிதானதல்ல. இதை வெற்றிகரமாக,  பொறுமையாகக் கடப்பவர்கள்தான் காதலிலும் சரி, உடற்பயிற்சியிலும் சரி... நீடித்த, நிலையான உறவோடு இருப்பார்கள்.

ஜீரோ ஹவர்! - 8

நண்பர் ஒருவர் யோகா கற்றுக்கொள்ள ஏதாவது இடமிருக்கிறதா என விசாரித்தார். நானும் ஓர் இலவச மையம் குறித்த தகவலைச் சொல்லி அனுப்பிவைத்தேன். ஒரு வாரம் உற்சாகமாகப் போய்க்கொண்டிருந்தவர், திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விசாரித்தபோதுதான் தெரிந்தது, எல்லோரும், கைகூப்பிப் பின்னோக்கி வளைகிறார்கள் என்று அவரும் வானவில்லைப்போல வளைந்திருக்கிறார். முதுகுத்தசை பிடித்துக்கொள்ள, குனிந்த நண்பரால் நிமிரவே முடியவில்லை. இதுதான் ஆர்வக் கோளாறால் உண்டாகும் ஆபத்து. இதை எப்போதும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஜீரோ ஹவர்! - 8

பின்பக்கமாக முதுகை வளைப்பது நல்ல யோகா முறையாக இருக்கலாம். ஆனால், பல ஆண்டுகள் பயிற்சி செய்தவர்கள் வளைப்பதற்கும், பிறந்ததிலிருந்து முதுகெலும்பை வளைத்தே பழகிடாத நாம் வளைப்பதற்குமான வேறுபாடு என்ன என்கிற தெளிவு வேண்டும்.  நாமும் ஒருநாள் நிச்சயமாக 90 டிகிரியில் வளைகிற வாய்ப்புகள் உள்ளன. ஆனால் யோகா செய்கிறவர்களிடம் கேட்டால், `அதற்கெல்லாம் நான்காண்டு பயிற்சி வேண்டும்’ என்பார்கள்! அதை உணர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். நடைப்பயிற்சி போனால் ஆரம்பத்தில் ஒரு கிலோமீட்டர், ஒன்றரை, இரண்டு, இரண்டரை எனக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் தூரத்தை அதிகரிக்க வேண்டும். ஆரம்பத்தில், ‘கால் ஒண்ணும் வலிக்கலையே...’ என்று ஒரே நாளில் பத்து கிலோமீட்டர் நடந்தால் மூட்டுவலி வந்து, அடுத்த ஒரு மாதத்துக்கு ஓய்வெடுக்க வேண்டியிருக்கும். ‘சைக்கிளிங்’ செய்பவர்கள் இதே மாதிரி ஆர்வக்கோளாறில் அதிகம் சிக்கிக்கொண்டு, எடுத்த எடுப்பிலேயே 40 கிலோமீட்டர் ரைடுக்கெல்லாம் கிளம்பி முட்டியை உடைத்துக்கொள்வார்கள்!
ஆரம்பத்திலேயே அதிகமாகச் செய்வதால், மூச்சுத்திணறல், மயக்கம், தசைப்பிடிப்பு எனப் பல்வேறு பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். பாதிப்புகள் அந்த உடற்பயிற்சிகளை இரண்டாவது வாரத்திலேயே கைவிடச்செய்யும். ‘உங்களுக்கு ரன்னிங்கும் வேண்டாம், ஜாகிங்கும் வேண்டாம்... கம்முனு கிடங்க’ என்று மனைவி திட்டுவார்.

பள்ளி நாள்களுக்குப் பிறகு உடற்பயிற்சியே கண்டிராத உடலை, பழைய நினைப்பிலேயே கையாள்வது ஆபத்தானது. பள்ளிக்காலத்தில் நாம் உசேன் போல்ட்போல 100 மீட்டரை பத்து விநாடிகளில் கடக்கிற அசகாய சூரராக இருந்திருக்கலாம். ஆனால், இப்போது நாம் அந்த உடலுள்ள ஆசாமி இல்லை. நம் நுரையீரலும் கால் தசைகளும் அதே மாதிரியானவை அல்ல என்பதை மறந்துவிடக் கூடாது. பாட்மின்டன் விளையாடச் சென்றால் ஆரம்பத்தில் அரை மணி நேரம் ஆடலாம். போகப் போக அந்த நேரத்தை அதிகரிக்கலாம். பறந்தும் பாய்ந்தும் அடிக்கிற வித்தியாசமான ஷாட்களையெல்லாம் நாள்படச் செய்து பார்க்கலாம். முதல் வாரத்திலேயே ‘ஜம்ப்பிங் ஜபாக்’குகளைச் செய்து பார்த்தால் பின்விளைவுகள் கடுமையாக இருக்கும்.

முதல் வாரத்தில் இந்த விஷயங்களை எப்போதும் மறந்துவிடாதீர்கள்!

* நாம் இனி வாழ்நாளெல்லாம் இந்தப் பயிற்சியை மேற்கொள்ளப் போகிறோம்.

நாம் ஒரு குழந்தையைப்போல இப்போதுதான் கற்கத் தொடங்கியிருக்கிறோம்.

மற்றவர்கள் செய்கிறார்கள் என அளவுக்கதிமாகச் செய்யக் கூடாது.

உடற்பயிற்சியின் அளவை மெள்ள மெள்ள அதிகரிக்க வேண்டும்.

நேரம் ஒதுக்குவோம்...

- வினோ