
முதல் நாள் முதலே... - ஆனந்தம் விளையாடும் வீடு - 1
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை மட்டுமல்ல... அது ஓர் அறிவியலும்கூட. முன்பெல்லாம் இந்த இனிய கலையை, அழகு அறிவியலைக் கற்றுக்கொடுக்கவும் கைகொடுக்கவும் வீடு நிறைய மூத்த பெண்கள் இருந்தார்கள். இன்றோ, கர்ப்பகாலச் சந்தேகங்கள் முதல் குழந்தை வளர்ப்புச் சிக்கல்கள் வரை ஆலோசனை வழங்க ஆள்களே இல்லை. இணையம் மட்டுமே ஒரே துணை. அவை கொட்டிக்கொடுக்கும் தகவல்களோ உறுதிப்படுத்தப்படாதவையாகவும், முன்னுக்குப் பின் முரணானவையாகவும் உள்ளன. இந்தச் சூழ்நிலையில், அவர்களுக்குத் தெளிவான வழிகாட்டல் அவசியமாகிறது. அதற்காகவே இந்தப் பகுதி.

இதில் குழந்தை வளர்ப்பு பற்றியும், குழந்தைகளுக்கு வருகிற பிரச்னைகள், அவற்றின் அறிகுறிகள் மற்றும் தீர்வுகளைப் பற்றியும் விளக்கமாகப் பேசவிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் தனசேகர் கேசவலு. மருத்துவத் துறையில் 18 வருடங்கள் அனுபவம் கொண்டவர், குறிப்பாகக் குழந்தைகளுக்கு ஏற்படுகிற வயிறு சார்ந்த வாயுக் கோளாறுகளைத் தீர்ப்பதில் நிபுணர் இவர்.
``ஒரு குழந்தையை வளர்ப்பது என்பது, அக்குழந்தை பிறந்த பிறகு மட்டுமே செய்கிற விஷயமில்லை. ஒரு துளிக் கருவாக அது தன் தாயின் கருவறையில் உருவான முதல் நாள் முதலே அந்தப் பொறுப்பு தொடங்கிவிடுகிறது. எனவே, நாமும் கருத்தரித்த நாளில் இருந்தே நம் பயணத்தைத் தொடங்குவோம். 16 வயது வரை, ஒரு குழந்தையை வளர்த்தெடுக்கும் பேரன்ட்டிங் வழிமுறைகளை உணர்வுப்பூர்வமாகவும் அறிவுப்பூர்வமாகவும் முழுமையாகப் பேசுவோம்’’ என்று சொல்லும் டாக்டர் தனசேகர் கேசவலு, கர்ப்பகாலத்தில் கருவின் வளர்ச்சி பற்றி விளக்கத் தொடங்குகிறார்.
கர்ப்பிணிகளின் கவனத்துக்கு
கருவில் முதுகுத்தண்டு வளரத் தொடங்குகிற முதல் மாதத்தில் அதற்குத் தேவையான ஃபோலிக் ஆசிட் சத்து, தாயின் உடலில் இருந்து கிடைக்க வேண்டும். கர்ப்பிணிக்கு அந்தச் சத்துக் குறைபாடு இருந்தால், கருவுக்கு அந்தச் சத்து கிடைக்காமல் போய்விடும். அதனால்தான், கருத்தரித்தல் உறுதிசெய்யப்பட்ட உடனேயே மருத்துவர் ஃபோலிக் ஆசிட் மாத்திரையைப் பரிந்துரைப்பார். உடனடியாகக் குழந்தை பெற்றுக்கொள்ளும் முடிவில் இருந்தால், மருத்துவ ஆலோசனையுடன் திருமணம் முடிந்ததில் இருந்தே ஃபோலிக் ஆசிட் மாத்திரை எடுத்துக்கொள்ள ஆரம்பித்துவிடலாம். ஓர் இடைவெளிக்குப் பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுக்கும் சூழலிலும், கருத்தரிப்பதற்கு முன்னரே மருத்துவ ஆலோசனையுடன் ஃபோலிக் ஆசிட் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.
இன்று நடப்பது என்ன? மாதவிடாய் ஏற்படுவது தாமதமானால், ‘ஒருவேளைக் கருவுற்றிருக்கிறோமா’ என ஐயம்கொள்ளாமல், ‘பீரியட்ஸ் லேட்டா வரும்போல’ என நினைத்துக்கொள்கிறார்கள். அதோடு, அதை மறந்தும் விடுகிறார்கள். ஆபீஸ், வீடு என்று ஓடுகிற ஓட்டத்தில் ஒரு கரு உருவாகி 40 அல்லது 45 நாள்கள் கழித்துத்தான், ‘கர்ப்பமா இருக்குமோ’ என்று யோசிக்கத் தொடங்கி, சிறுநீர் பரிசோதனை செய்துபார்க்கிறார்கள். கிராமப்புறப் பெண்களுக்கோ, சிறுநீர் பரிசோதனை விஷயமும் தெரிவதில்லை. இப்படி, கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகே கருவுற்றிருப்பது உறுதிசெய்யப்படும் சூழலில், அதற்குப் பிறகே ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள் மருத்துவரால் பரிந்துரைக்கப் படுகின்றன.

கருவும் தாம்பத்யமும்
கருவுற்ற முதல் மூன்று மாதங்கள் தாம்பத்யத்தைத் தவிர்க்க வேண்டும். முதல் ட்ரைமெஸ்டர் என்பது, ஒரு விதையைப் பதியம்போடுகிற காலகட்டம் போன்றது. அந்த நேரத்தில் உறவுகொண்டால், வயிற்றின்மீது அழுத்தும் கனம் காரணமாக ரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சில பெண்களுக்கு, கருவின் நஞ்சுக்கொடி, கருப்பை வாயின் பின்பக்கமே இருக்கும். இவர்கள் உறவுகொள்ளும் போது ரத்தப்போக்கு ஏற்படுவதற்கு அதிக சாத்தியங்கள் இருக்கின்றன.
கருவும் ஓய்வும்
கருத்தரித்தல் என்பது ஆரோக்கியமான விஷயம்தானே? இதற்கு எதற்கு ஓய்வு? அசெளகர்யமாக உணரும் வேலைகளையும், வயிற்றை அழுத்தும்படியான வேலைகளையும் மட்டும் தவிர்த்தால் போதுமானது. மற்றபடி படிகளில் ஏறலாம், குனிந்து நிமிர்ந்து எல்லா வேலைகளையும் செய்யலாம். குறிப்பாக, கர்ப்பமாவதற்கு முன் நன்கு வேலைபார்த்த பெண்கள், கருத்தரித்தவுடன் உடல் இயக்கங் களைத் தவிர்த்துவிட்டு ஓய்வெடுத்தால், தசைகள் தளர்வாகி எடை அதிகரித்துவிடும். பிரசவத்துக்குப் பிறகு அதிகரிக்கிற எடைக்கு, கர்ப்ப காலத்தில் எடுக்கிற அதிகப்படியான ஓய்வும் ஒரு காரணம்.

கருவும் தாயின் வயதும்
முப்பதுகளின் ஆரம்பத்தில் திருமணம் செய்துகொண்டு, முப்பதுகளின் மத்தியில் கருத்தரிக்கிற பெண்களை, ‘ஹை ரிஸ்க் கேட்டகரி’யில் வகைப்படுத்தலாம். இவர்கள் கர்ப்பமாவதற்கு முன்னரே ரத்த அழுத்தம், நீரிழிவு, தைராய்டு, சத்துக்குறைபாடு போன்ற பிரச்னைகள் இருக்கின்றனவா என்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும். அச்சம் கொள்ள வேண்டாம். இது முன்னெச்சரிக்கை மட்டுமே. 38 வயதில் சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்றுக்கொண்ட ஐஸ்வர்யா ராய் வாழும் உதாரணமாக நம்முடன் இருக்கிறார். எனவே, பதற்றம் வேண்டாம்.
கருவும் உணவும்
கர்ப்ப காலத்தில் அன்னாசி சாப்பிடக்கூடாது, பப்பாளி சாப்பிடக்கூடாது, எள் சாப்பிடக்கூடாது என்று ஏகப்பட்ட நிரூபிக்கப்படாத கட்டுக்கதைகள் இருக்கின்றன. இவற்றில் உண்மை இல்லை. கர்ப்ப காலத்தில் உண்மையில் சாப்பிடக் கூடாத உணவுகள் என்னென்ன?
* காய்ச்சாத பச்சைப் பாலில் கிருமிகள் இருக்கும் என்பதால் அருந்தக்கூடாது.
* முன் தினம் சமைத்த உணவை மறுநாள் சாப்பிடக்கூடாது.
* அசைவ உணவுகளை, சமைத்த 4 மணி நேரத்துக்குப் பின்னர் சாப்பிடக்கூடாது.
* ஃப்ரிட்ஜில் வைத்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
* புளித்த தயிரை உணவில் சேர்க்கக் கூடாது.
நிச்சயம் சாப்பிட வேண்டியவை
* சத்துகள் நிரம்பிய முளைக்கட்டிய தானியங்கள்
* தைராய்டு பிரச்னையைத் தடுக்கும் சோடியம் சேர்க்கப்பட்ட உப்பு
கருவும் மன அமைதியும்
கர்ப்பிணிகளுக்கு மன அமைதி முக்கியத் தேவை. கர்ப்பிணியைச் சுற்றியிருப்பவர்கள்தாம் அமைதியான, மகிழ்ச்சியான சூழ்நிலையை அவர்களுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும்.
கருவும் தடுப்பூசிகளும்
கருத்தரித்த முதல் 6 மாதங்களில், கருவின் உடல் பாகங்கள் உருவாகும். இந்த நேரத்தில் தாய்க்கு ஏதேனும் நோய் தாக்கினால், கருவின் உடல் உறுப்புகளின் வளர்ச்சியே பாதிக்கப் பட்டுவிடும். அதனால்தான், கருத்தரித்த உடனே தடுப்பூசி போடப்பட்டு விடுகிறது.
கருவும் ஃபோர்செப்ஸும்
சுகப்பிரசவத்தின்போது குழந்தையின் தலை சற்றுப் பெரிதாக இருந்தாலோ, தாயின் ஜனனப் பாதை சிறிதாக இருந்தாலோ ஃபோர்செப்ஸ் பயன்படுத்திக் குழந்தை வெளியே எடுக்கப்படும். இதனால் குழந்தையின் மூளைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்று சிலர் அச்சம்கொள்வார்கள். கவலை வேண்டாம்.ஃபோர்செப்ஸை மிகவும் மென்மையாகத்தான் கையாள்வார்கள். பிரசவமாகி வெளியே வர வேண்டிய நேரத்தில், தொடர்ந்து கருப்பையிலேயே இருந்தால், குழந்தைக்கு மூச்சடைத்துவிடும். இதைத் தவிர்ப்பதற்காகவே ஃபோர்செப்ஸ் பயன்படுத்தப்படுகிறது.
கருவும் சிசேரியனும்
இன்று பத்தில் ஆறு பெண்களுக்கு சிசேரியன் பிரசவம் நிகழ்கிறது. நஞ்சுக்கொடி கருப்பையின் வாய்க்குப் பின்புறத்திலேயே இருப்பது, அம்மாவின் இடுப்பு எலும்பு சிறியதாக இருப்பது, செயற்கை முறையில் கருத்தரித்த குழந்தைகளைப் பத்திரமாக வெளியில் எடுக்கவேண்டிய தேவை, தாய்க்கு நீரிழிவு இருப்பது, குழந்தையின் இதயத்துடிப்பு திடீரென குறைந்துபோவது அல்லது அதிகரிப்பது... இதுபோன்ற மருத்துவக் காரணங்களால் சிசேரியன் என முடிவெடுக்கப் படுகிறது. தாய், சேய் உயிர்களின் பாதுகாப்பே முதன்மையானது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.
அடுத்த இதழில், குழந்தை பிறந்ததும் ஏற்படக்கூடிய பிரச்னைகள், அவற்றின் அறிகுறிகள், தீர்வுகள் பற்றிப் பேசுவோம்.
(வளர்த்தெடுப்போம்!)
- ஆ.சாந்தி கணேஷ்
படம்: வீ.நாகமணி

ஒட்டுண்ணி... உஷார்!
கர்ப்பிணிகளின் கைகளில் எலி, பூனையின் மலம் தெரியாமல்பட்டு, அதில் இருக்கிற ஒட்டுண்ணி, கைவழியாக அவர்கள் சாப்பிடுகிற உணவுடன் கலந்து உடலுக்குள் சென்றுவிட்டால் நிச்சயமாக இன்ஃபெக்ஷன் ஏற்படும். அது கருவின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய அளவுக்கு ஆபத்தானது. ஆகவே, கவனம் தேவை.

காபி, டீ சாப்பிடலாமா?
கர்ப்பிணிகள் டீ, காபி அருந்தினால், உடலால் இரும்புச்சத்தைக் கிரகித்துக்கொள்ள முடியாது என்று சொல்லப்படுவதில் உண்மையில்லை. ஒரு நாளில் ஒரு கப் காபியோ, டீயோ குடிப்பதால் ரத்தச்சோகை ஏற்பட்டுவிடாது. கர்ப்பிணிகளை ‘இதைச் சாப்பிடாதே, அதைச் சாப்பிடாதே’ என்று எச்சரித்துக்கொண்டே இருப்பது, அவர்கள் மனதில் தேவையற்ற பயத்தை உண்டாக்கும்.