
டி.நாராயண ரெட்டி, செக்ஸாலஜிஸ்ட்ஹெல்த்
உங்களுக்குத் தெரியுமா...?ஆண்களுக்கு விந்து சுரப்பதில் விடுமுறை என்பதே கிடையாது. ஒரு தந்தை, தன் 20 வயது மகனை அழைத்து வந்தார். ``இவனுக்குத் தூக்கத்தில் விந்து வெளியேறுகிறது. ஏதாவது பிரச்னையாக இருக்குமா டாக்டர்?’’ என்று கேட்டார். அவர்களுக்கு இது குறித்து விளக்கி, `பயப்பட வேண்டாம்’ என்று சொல்லி அனுப்பிவைத்தேன்.

ஆண்கள் 13, 14 வயதில் பருவமடைவார்கள் (Puberty). அப்போது சுரக்கத் தொடங்கும் விந்து மரணம்வரை சுரக்கும். விந்து சுரக்காமல் போக மூன்று காரணங்கள் இருக்கின்றன. அவை பிறவிக் கோளாறு, நோயால் சுரக்காமல் போவது, பிறப்புறுப்பில் அடிபட்டு பாதிக்கப்படுவது. புட்டாளம்மை நோயால் தாக்கப்பட்டவர்களுக்கும் சுரக்காமல் போக வாய்ப்பிருக்கிறது. விந்து சுரக்க, நம் உடலில் மூன்று உறுப்புகள் செயல்படுகின்றன, `விதைப்பை (Testis), `புராஸ்டேட் சுரப்பி’ (Prostate Gland), `செமினல் வெசிகிள்’ (Seminal Vesicle). இவை மூன்றும் சரியாகச் செயல்பட்டால் விந்து சுரந்து கொண்டேயிருக்கும். ஆனால், உடலால் குறிப்பிட்ட அளவு விந்தணுக்களை மட்டுமே சேமிக்க முடியும். அந்த அளவைத் தாண்டினால், அது தானாகவே வெளியேறத்தான் செய்யும். பெரும்பாலானவர்கள் செக்ஸில் ஈடுபட்டோ, சுயஇன்பம் செய்தோ விந்தை வெளியேற்றிவிடுகிறார்கள். இல்லையென்றால் தூக்கத்தில் விந்து தானாக வெளியேறிவிடும். இது பிரச்னையோ, நோயோ அல்ல. இயல்பான ஒன்று.

இப்போது ஆண்கள் பருவமடைந்தவுடன் திருமணம் செய்துகொள்வதில்லை. பள்ளி, கல்லூரிப் படிப்பு முடிந்து, வேலைக்குப் போய், வருமானம் ஈட்டத் தொடங்கிய பின்னரே திருமணம் செய்துகொள்கிறார்கள். இப்போதிருக்கும் சமூகச் சூழலில் 25 வயதிலிருந்து 30 வயதுக்குள்தான் ஆண்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள். அதற்காக விந்து சுரக்காமல் இருக்குமா? அது, அதன் கடமையைச் செய்துகொண்டுதான் இருக்கும். பாக்கெட்டில் பணம் இல்லையென்று, நமக்குப் பசி எடுக்காமல் இருக்குமா?

விந்து சுரப்பது இனப்பெருக்கத்துக்கு மட்டும்தான். உடல் ஆரோக்கியமாக இருந்து, விந்து சரியாகச் சுரந்துகொண்டே இருந்தால், குழந்தை பெற்றுக்கொள்வதில் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. விந்து வெளியேறினால் உடல் ஆரோக்கியம் இழக்கும்; உடலில் சத்து குறைந்துவிடும்; உடல் எடை குறைந்துவிடும் என்று சொல்வதெல்லாம் பொய்யான தகவல்கள். இவற்றுக்கும் விந்து வெளியேறுவதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. மூடநம்பிக்கை, அறியாமையால், போலி மருத்துவர்களின் விளம்பரங்கள், அவர்கள் சொல்லும் தவறான தகவல்களால் இளைஞர்கள் பயந்துவிடுகிறார்கள். தூக்கத்தில் விந்து வெளியேறுவதை ஆங்கிலத்தில் `வெட் ட்ரீம் நைட் ஃபால்’ (Wet Dream Night Fall) என்று சொல்வார்கள். இது எல்லா ஆண்களுக்கும் நிகழும் ஒன்றுதான். யாரும் பயப்பட வேண்டாம்!
(இன்னும் கற்றுத் தருகிறேன்...)
- மு.இளவரசன்