மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பிறந்த குழந்தைக்கும் மதிப்பெண் உண்டு! - ஆனந்தம் விளையாடும் வீடு - 2

பிறந்த குழந்தைக்கும் மதிப்பெண் உண்டு! - ஆனந்தம் விளையாடும் வீடு - 2
பிரீமியம் ஸ்டோரி
News
பிறந்த குழந்தைக்கும் மதிப்பெண் உண்டு! - ஆனந்தம் விளையாடும் வீடு - 2

தனசேகர் கேசவலு, குழந்தைகள்நல மருத்துவர்

ரு குழந்தை பிறந்தவுடனேயே அதற்கு ஏதாவது உடல்நலக் கோளாறு என்றால், அது பிரசவித்த பிறகுதான் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று அவசியமில்லை. குழந்தை, தாயின் வயிற்றில் இருக்கும்போதேகூட வந்திருக்கலாம். அதாவது, குழந்தை வயிற்றில் இருக்கும்போதே அதற்கு இதயக்கோளாறு, குடலிறக்கம், அதிக எடை, எடைக் குறைவு போன்ற பிரச்னைகள் வரலாம். அடுத்து, அம்மாவுக்கு டயாபடீஸ், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் இருந்தால் அது குழந்தையின் ஆரோக்கியத்திலும் எதிரொலிக்கும். இவை தவிர, குழந்தை, தாயின் வயிற்றில் இருந்து வெளியே வருகிற நேரத்தில் நஞ்சுக்கொடி பிரிதல், குழந்தைக்கு இதயத்துடிப்பு அதிகமாதல்/குறைதல் போன்ற பிரச்னைகள் வரலாம். இத்தனை பிரச்னைகளிலிருந்தும் அந்த சிசுவைக் காப்பாற்றுவதற்காகத்தான், பிரசவ நேரத்தில் பச்சிளம் குழந்தை நிபுணர் ஒருவரும் உடன் இருப்பார்.

பிறந்த குழந்தைக்கும் மதிப்பெண் உண்டு! - ஆனந்தம் விளையாடும் வீடு - 2

குழந்தை பிறந்தவுடன் மருத்துவர் செக் செய்கிற விஷயங்கள்!

* குழந்தையின் தலை உச்சி நன்றாக மூடியிருக்கிறதா?

* சிசுவின் கண்களில் சிவப்பு நிறம் இல்லாமல் இருக்கிறதா?

* இதயத்துடிப்பு சரியாக இருக்கிறதா?

* கை மற்றும் கால்களில் நாடித்துடிப்பு இருக்கிறதா?

* ஆணோ, பெண்ணோ... பாலின உறுப்பு சரியாக இருக்கிறதா?

* மலத்துவாரம் இருக்கிறதா?

* இடுப்பெலும்பு, கால்மூட்டு, பாதம், தொப்புள், முதுகெலும்பு, தோள்பட்டை எலும்பு போன்றவை சரியாக இருக்கின்றனவா?

மஞ்சள்காமாலை வந்துவிட்டதா?

பிறந்த குழந்தைக்கு மஞ்சள்காமாலை வருவது நார்மலான விஷயம்தான். இது சராசரியாக ஒரு வாரம் வரை இருந்துவிட்டுச் சரியாகிவிடும். ஒரு குழந்தை பிறந்த பிறகு 24 மணி நேரத்திலிருந்து 48 மணி நேரத்துக்குள் உடல், கண்கள் மஞ்சளாக இருந்தால் அதை வேறு ஏதோ பிரச்னைக்கான அறிகுறியாக எடுத்துக் கவனம் கொடுக்க வேண்டும். 48 மணி நேரம் கழித்து மஞ்சள்காமாலை ஏற்பட்டால் பயப்படத் தேவையில்லை.

பிறந்த குழந்தைக்கும் மதிப்பெண் உண்டு! - ஆனந்தம் விளையாடும் வீடு - 2

சிசேரியன் பிரசவம் மூலம் பிறந்த பாப்பா!

சிசேரியன் பிரசவம் மூலம் பிறக்கிற குழந்தைகளில் ஒரு சிலருக்கு, நுரையீரலில் நீர் தேங்கி, மூச்சுவிடச் சிரமப்படுவார்கள். பாப்பா, அம்மாவின் வஜைனா வழியாகப் போராடி வெளியே வரும்போது நுரையீரலில் இப்படி நீர் தேங்காது. இப்படிப் போராடாமல் சிசேரியன் மூலம் ஈஸியாக வெளியே வந்துவிட்டார்கள் என்றால், இப்படியொரு கஷ்டம் வரலாம். ஆனால், இது 24 மணி நேரத்தில் இருந்து 48 மணி நேரத்துக்குள் சரியாகிவிடும். இதை மருத்துவர்கள் பார்த்துக்கொள்வோம். பயப்படத் தேவையில்லை.

பிறந்த குழந்தைக்கும் மதிப்பெண் உண்டு! - ஆனந்தம் விளையாடும் வீடு - 2


மேலே சொன்னவற்றில் ஒரு சில பிரச்னைகள் உங்கள் குழந்தைக்கு ஏற்படும்பட்சத்தில், அச்சம்கொள்ளாமல் இருக்கவும், ‘இது சரியாகிவிடும்’ என்று புரிந்துகொண்டு நீங்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் இருப்பதற்கும்தான் இவ்வளவையும் சொல்லியிருக்கிறேன். நீங்கள் பச்சிளம் குழந்தை விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. அவை...

* பிறந்த குழந்தையின் உச்சந்தலை வழியாக வெப்பம் வெளியேறும் என்பதால் பிள்ளையின் தலையையும், கூடவே பாதத்தையும் மூடியே வைக்கவேண்டும்.

* பிறந்த 48 மணி நேரத்துக்குள் குழந்தை கறுப்பாக, முதல் மலம் கழிக்க வேண்டும். இது குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது என்பதற்கான அறிகுறி. அப்படிப் போகவில்லையென்றால், மலத்துவாரத்தை செக் செய்ய வேண்டும்.

* தாயின் உடல் சூட்டிலேயே குழந்தையை வைத்திருக்க வேண்டும்.

* சீம்பால் கொடுப்பதைத் தவறவிடவே கூடாது.

அடுத்த இதழில், டிஸ்சார்ஜாகி வீட்டுக்குச் சென்ற பின் பச்சிளம் குழந்தை விஷயத்தில் எப்படியெல்லாம் கவனமாக இருக்க வேண்டுமென்று சொல்கிறேன்.

(வளர்த்தெடுப்போம்!)

- ஆ.சாந்திகணேஷ்

இது மருத்துவ ஜாதகம்!

ஒரு குழந்தை பிறந்தவுடனேயே அதன் சருமத்தின் நிறம், இதயத்துடிப்பு, அழுகை, கை கால்களை நன்கு உதைப்பது, மூச்சுவிடுவது என இந்த ஐந்து விஷயங்களும் நார்மலாக இருக்கின்றனவா என்று சரிபார்த்து, ஒரு விஷயத்துக்கு 2 மார்க் வீதம் 10 மார்க் வழங்குவார்கள் மருத்துவர்கள். இந்த மார்க்கை எதன் அடிப்படையில் வழங்குவோம்  என்பதைச் சொல்கிறேன்.

* சருமத்தின் நிறம் பிங்க்காக இருந்தால் 2 மார்க். உடல் முழுக்க பிங்க் நிறம், ஆனால் கை கால்களில் மட்டும் நீல நிறம் இருந்தால் 1 மார்க். உடல் முழுக்க நீல நிறம் இருந்தால் 0 மார்க்.

* ஒரு நிமிடத்துக்கு 100 இதயத்துடிப்புகளுக்கு மேலே இருந்தால் 2 மார்க், 100-க்குக் குறைவாக இருந்தால் 1 மார்க், துடிப்பு இல்லையென்றால் 0 மார்க்.

* சத்தமாக அழுதால் 2 மார்க், சத்தமில்லாமல் முகத்தில் மட்டும் அழுகை தெரிந்தால் 1 மார்க், அழுகையே இல்லையென்றால் 0 மார்க்.

* கைகளையும் கால்களையும் நன்கு உதைத்துக் கொண்டால் 2 மார்க், பலவீனமாக உதைத்துக்கொள்கிறது என்றால் 1 மார்க், கை காலை அசைக்கவே இல்லையென்றால் 0 மார்க்.

* சத்தமாக அழுகிற பிள்ளை மூச்சுவிடுவதிலும் 2 மார்க் வாங்கிவிடும். பலவீனமாக அழுகிற குழந்தையின் மூச்சும் பலவீனமாகத்தான் இருக்கும். அப்போது 1 மார்க்தான் கொடுக்க முடியும். மூச்சில்லையென்றால் 0 மார்க்.

இதில் குறைந்தபட்சம் 8 மார்க் வாங்கிவிட்டால் அந்தக் குழந்தை பாஸ். இதற்கும் மேல் 9 அல்லது 10 என்றால் அன்றைக்கு ஹாஸ்பிடல் டாப்பர் அந்தக் குட்டிதான். ஆனால், இந்த மார்க் டெஸ்ட்டில் குழந்தை முதல் நிமிடத்தில் 10 மார்க் வாங்கிவிட்டு, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் 6 மார்க் வாங்கினால் பிள்ளைக்கு பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம். இதுவே முதல் நிமிடத்தில் 6 மார்க் வாங்கிவிட்டு ஐந்தாவது நிமிடத்தில் 10 மார்க் வாங்கினால், குழந்தையை அதன் அம்மாவிடம் பால்குடிக்க அனுப்பிவைத்துவிடலாம். ஆனால், தொடர்ந்து குழந்தை 5 அல்லது 6 மார்க்கிலேயே இருந்தால், எமர்ஜென்ஸி கேர் கொடுத்து உரிய சிகிச்சைகள் அளிக்கப்படும். இதைப் பச்சிளம் குழந்தை நிபுணர் பார்த்துக்கொள்வார், எனவே, கவலை வேண்டாம்.

பிறந்தவுடன் பிள்ளை எடுக்கிற இந்த மார்க்கைப் பொறுத்து, அது எதிர்காலத்தில் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கும் என்பதை ஒரு மருத்துவரால் கணிக்க முடியும் என்பதால், மேலே சொன்ன 5 விஷயங்களையும் மருத்துவ ஜாதகம் என்று நாங்கள் குறிப்பிடுவோம்.