ஹெல்த்
Published:Updated:

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 16

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 16
பிரீமியம் ஸ்டோரி
News
நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 16

போப்பு, மருத்துவ எழுத்தாளர்குடும்பம்

டந்த இதழில் கறுப்பு உளுந்தினைத் தோல் நீக்காமல் இட்லி, தோசைக்கு மாவு அரைப்பது குறித்துப் பார்த்தோம். மேற்படி மாவுக்கு வழக்கமான அரிசியில் ஐந்துக்கு ஒரு பங்கு உளுந்து என்றில்லாமல் மூன்று பங்கு பச்சரிசிக்கு ஒரு பங்கு கறுப்பு உளுந்து என்ற விகிதத்தில் ஊற வைத்துச் சற்றே கொரகொரப்பாக அரைத்தால் உணவில் உளுந்துச் சத்தினைக் கூடுதலாகப் பெறலாம்.

அப்படி ஊறப்போடும்போது உளுந்துடன் ஒரு டீஸ்பூன் கறுப்பு எள் அல்லது ஐந்தாறு ஆமணக்கு விதை (மேல்ஓடு உரித்தது) அல்லது இரண்டு டீஸ்பூன் கசகசா சேர்த்து அரைத்துக் கொண்டால் நாம் சமைக்கும் பலகாரம் மெத்தென்றும் சுவையாகவும் இருக்கும். கசகசா, உணவுப் பண்டத்திற்கு நல்ல நிறத்தைக் கொடுக்கும். அன்றாடம் காலை, மாலை இரண்டு வேளைகள் இட்லி, தோசை உண்கிற பழக்கம் நம்மில் பரவலாகி விட்டது. அப்படி உண்ணும்போது வயிற்றில் தேங்கும் அமிலத்தன்மையை முறிக்கக் கூடியது கறுப்பு உளுந்துத் தோலின் நார்ப்பண்பு. அது வாயுத் தொல்லையையும் நீக்கும்.

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 16

பஞ்சபூத அடிப்படையில் நீருக்கு உரிய நிறம் கறுப்பு. கறுப்பு நிறம் கொண்ட உணவுப் பொருள்கள் நீர் மூலகங்களான சிறுநீரகத்திற்கு ஆற்றலை வழங்கும். நம்முடைய உணவில் கறுப்பு நிறப் பயன்பாடே அரிதிலும் அரிது. கறுப்பு நிறத் தோலை இயற்கையாகவே கொண்டுள்ள உளுந்தைச் சேர்த்துக் கொள்ளும்போது அதன் ஆற்றல் நமக்குச் சிதையாமல் கிடைக்கும். கறுப்பு நிறத்திலான உணவுப் பண்டங்களைச் சேர்க்காதபோதும் பிற நிறங்களில் இருந்து கறுப்பு நிறத்திற்குரிய ஆற்றலை உடலால் பெற்றுக்கொள்ள முடியும்தான். ஆனாலும் நேரடியாகக் கொடுக்கும்போது சிறுநீரகம் ஆற்றல் பெறுவது எளிதாகும். சிறுநீரகம் என்பது வெறுமனே உடலின் நீர்க் கழிவைச் சிறுநீராக வெளியேற்றும் உறுப்பு மட்டுமே அல்ல.

உடலின் வெப்பச் சமநிலையைப் பாதுகாப்பதில் இருந்து தலைமுடியைப் பாதுகாப்பது வரை செரிமானம், ரத்தத்தைச் சுத்திகரிப்பது, சுரப்பிகளை நிர்வகிப்பது எனப் பல்வேறு விதமான பணிகளையும் சேர்த்தே செய்கிறது சிறுநீரகம். ஆண்களுக்கு விந்தணுவைச் சுரக்கச் செய்வதும், பெண்களின் கர்ப்பப் பையைப் பராமரிப்பதும் சிறுநீரகத்தின் பணியே ஆகும். பெண்களுக்கான மாதாந்திர உதிரப் போக்கில் சீரின்மை, கர்ப்பப்பை நீர்க்கட்டி போன்ற பிரச்னைகள் தற்காலத்தில் மிகப் பரவலாகி வருவது முன்பே பார்த்ததுதான். அதேபோல முடி உதிர்தல், முடி உடைதல் போன்ற தலைமுடி சார்ந்த பிரச்னைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. உப்புத்தன்மை அதிகமுள்ள நீரில் குளிப்பது, அலைச்சலின்போது தலைமுடியில் படியும் தூசு, புகை மாசுகளை அகற்றுவதற்காகப் பெண்கள் பயன்படுத்தும் ஷாம்பு, மன அழுத்தம், உணவின் வழியாக உடலில் சேரும் ரசாயனக் கூறுகள் எனத் தலைமுடிப் பிரச்னைகளுக்குப் பல காரணிகள் உண்டு. மன அழுத்தம், கோபம் போன்ற உணர்வுச் சமநிலை இழக்கும்போதுத் தலையைத் தொட்டுப் பார்த்தால் சூடாக இருப்பதை உணரலாம். தலைமுடியின் வேர்ப்பாகம் வெப்பமடைந்தால் தலைமுடி சார்ந்த சிக்கல் எழுவது இயல்பு.

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 16

நான்கு வயதுக் குழந்தைகூட ‘எனக்கு டென்ஷன் தலைக்கு ஏறுது’ எனச் சொல்வதைப் பார்க்கும்போது நமக்கு மழலையின் வேடிக்கை போலவும், ‘இந்த வயசுலேயே இதெல்லாம் கத்துக்கிச்சே’ என்று பெருமையாகவும் தோன்றலாம். ஆனால் அதன் உள்ளார்ந்த பொருளை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாதே.  வாழ்க்கை நெருக்கடி தரும் மன அழுத்தங்கள் உடலில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும். நாம் ஒவ்வொரு முறையும் பதற்றமடையும் போதும் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் போதும் சூழலை எதிர்கொள்ளச் சிறுநீரகம் அட்ரீனலைச் சுரந்தளித்து தனது ஆற்றலை விரயமாக்குகிறது.

புறச் சூழலுக்காக அவ்வப்போது ஆற்றல் இழப்பு ஏற்படுமானால் சிறுநீரகம் தனது உள் பராமரிப்புப் பணிகளைச் செய்ய இயலாது. அதனால் தான் நம் காலத்தில் ஆண், பெண் இருபாலருக்குமே முடி உதிர்தல் இயல்பான ஒன்றாகி விட்டது. காவிய நாயகிகளைப் போல இருட்டுக் கூந்தல் தரையில் படர்ந்திருக்க வேண்டியதில்லை. ஆனால் தலையில் முடிச் செழுமையாக இருப்பது உள் ஆரோக்கியத்தின் அடையாளம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக முடி கறுகறுவென்று அடர்த்தியாக இருப்பது வாசனைத் திரவியங்களைத் தடவிக் கொள்வதாலோ, மனிதக் கால்கள் படாத அமேசான் காட்டின் அரியவகை மூலிகை எண்ணெய் வாங்கிப் பூசிக் கொள்வதாலோ கிடைப்பதல்ல. அது சிறுநீரகத்தின் உள்ளாட்சிப் பணிகளைச் சிறப்பாக நிர்வகிப்பதன் மூலம் பெறக் கூடியது. உள்ளாட்சிப் பணிகள் முறைப்படுத்தப்படாதபோது முடியைத் துறக்க நேரிடும்.

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 16

நம் காலத்தில் மன அழுத்தத்தால் ஏற்படும் ஆற்றல் இழப்பு போக ரசாயனக் கூறுகள் நிறைந்த உணவுகளை உண்ணும் போதும் சிறுநீரகம் தனது ஆற்றலைக் கூடுதலாகச் செலவிட நேர்கிறது. காரணம் நாம் அவற்றை உண்ட நொடியிலேயே அதில் சேர்க்கப்பட்டுள்ள உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கூறுகள் ரத்தத்தில் கலக்க விடாமல் கல்லீரல் ஈர்த்து வைத்துக் கொள்கிறது. அவ்வாறு ஈர்த்த கடினக் கூறுகளை வெளியேற்றும் வேலையைச் சிறுநீரகமே செய்ய வேண்டியுள்ளது. அதுபோகக் கல்லீரலுக்கான சக்தியை வழங்கும் பொறுப்பும் சிறுநீரகத்தினுடையதே. மரபு வழி உடலியல் சிறுநீரகம், கல்லீரலுக்குத் தாய் உறுப்பு என்று வகைப்படுத்துகிறது. பாதுகாக்கப்பட்ட உணவுகளான அடர் நிறத்திலான பிஸ்கட், கேக் போன்றவற்றை உண்ட சில நிமிடங்களிலேயே நாவிலும், தொண்டையிலும் வறட்சி ஏற்படுவதை நம்மால் உணர முடியும். அதேபோல அதிக மசாலாக்கள் சேர்க்கப்பட்ட உணவை உண்ட அரை மணி நேரத்திலேயே நா வறட்சியும் இனம் புரியாத தவிப்பும் ஏற்படுவதை நாம் உணரலாம்.

இந்த நேரத்தில் சிறுநீரகம் கடினமான பணியை மேற்கொள்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் நமக்கு அயர்ச்சியும் சோர்வும்  தோன்றுமானால் கல்லீரலும் தனது பணியைக் கூடுதலாகச் செய்கிறது என்று பொருள். பீட்ரூட் போன்ற அடர் நிறத்திலான இயற்கையான பொருளில் தயாரிக்கப்பட்ட உணவை உட்கொண்டு விட்டு அடுத்து கழிக்கும் சிறுநீரைக் கவனித்தால் அது வெளிர் சிவப்பு நிறமாக இருப்பதைக் காண முடியும். அதேபோல அதிகக் காரமான உணவை உட்கொண்டு விட்டுக் கழிக்கும் போதும் சிறுநீரில் கார எரிச்சல் தோன்றுவதை உணர முடியும்.  அடர் நிறத்திலான பிஸ்கட், கேக், ஐஸ்க்ரீம், குளிர் பானங்கள் போன்றவை நம் குழந்தைகளையும், பதின் பருவத்தினரையும் கவர்வது இயல்புதான். ஆனால் அத்தகைய பண்டங்கள் அவர்களின் உள்ளுறுப்புகளில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். அதே நிறமிகள் இயற்கையான வகையில் நமது உணவில் சேர்க்கப்படுமானால் அதன் பாதிப்பு தீவிரமாக இருக்காது.

இட்லி, தோசையில் கறுப்பு உளுந்துப் பயன்பாட்டினை அதிகரித்துக் கொள்கிறபோது அதன் இயற்கையான கருமை நிறம் நமது உள்ளுறுப்புகளுக்குப் பாதிப்பைத் தராது என்பதோடு அதன் ஆற்றல் நம் உடலில் சேரும்போது செயற்கைப் பண்டங்களின் மீதான நாட்டமும் இயல்பாகவே குறைந்து விடும்.  இட்லி, தோசை மட்டுமல்லாது கறுப்பு உளுந்து கலந்த வேறு சில பண்டங்களயும் வீட்டில் சமைப்பதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். கடந்த இதழில் அடை, கஞ்சி போன்றவற்றைப் பார்த்தோம்.

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 16

கறுப்பு உளுந்தை ஊறவைத்து அவித்து நிறைய வெங்காயம், தேவையான அளவு காய்ந்த மிளகாய், கடுகு போட்டுத் தாளிதம் செய்து கணிசமான அளவு தேங்காய்ப்பூ கலந்து சுண்டல் செய்து அவ்வப்போது வீட்டில் அனைவரும் சாப்பிடலாம். இது  மெல்லும் போது விழுவிழுப்பாக இருப்பதால் சிறுவர்களுக்கு அவ்வளவாகப் பிடிக்காமல் போகலாம். அதனுடன் சால்ட் பிஸ்கட் பொடித்துப் போட்டுக் கொடுத்தால் அது பிடித்தமான சுவையில் இருக்கும்.  சிறுவர்களை வற்புறுத்தி உண்ணப் பழக்குவதைவிட எத்தனை நல்ல உணவையும் அவர்களுக்குப் பிடித்தமான வகையில் தயாரித்துத் தருவதில்தான் பெற்றோரின் பொறுமையும் படைப்பாற்றலும் இருக்கிறது.  தமது குழந்தைகளுக்கான உணவிலும் எப்போதும் படைப்புத் திறனோடுத் திகழ வேண்டியுள்ளது.

 காராமணி, கொத்துக்கடலை காரக்குழம்பு செய்வது போலவே முழு உளுந்தை ஊறப்போட்டு அவித்துச் சமைத்துச் சோற்றுடன் பிசைந்து உண்ணலாம். பெண்களுக்கு உதிரப்போக்குக் காலத்துக்கு மிகவும் ஏற்றது இது. இந்தக் குழம்பை மாதம் ஓரிருமுறை சமைத்து உண்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். கறுப்பு உளுந்தினைச் சமைக்கும்போது உருவாகும் ஜெல் தன்மை சிறுகுடலிலும் பெருங்குடலிலும் படிந்துள்ள பசை வடிவிலான கசடுகளை நீக்க வல்லது. 

ஒரு பங்கு  கறுப்பு உளுந்தைத்  தனியாகத் தோல் மலரும் வரை ஊறவைக்க வேண்டியது. அதேபோல் இரண்டு மடங்கு சிவப்பரிசியையும் ஊறவைக்க வேண்டியது. இரண்டையும் தனித்தனியாக வெயிலில் காயவைத்து லேசாக வறுத்துக் கொள்ள வேண்டியது. அரவை இயந்திரத்தில் கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொண்டால் நினைத்த மாத்திரத்தில் கஞ்சியாகக் காய்ச்சிக் குடிக்கலாம். பயணத்தின்போது இந்தக் கஞ்சி எந்தத் தொல்லையும் தராத பசிதாங்கியாக இருக்கும்.  இந்த மாவை எடுத்துச் சிறிதளவு வெந்நீர், வெல்லத்தூள், இரண்டு தேக்கரண்டி நெய் விட்டுப் பிசைந்து உருண்டை பிடித்தால் சத்தான  இடைப் பலகாரம்  தயாராகிவிடும். மாலை நேரத்தில் வீடு திரும்பியதும் தயாரிக்க எளிதாகவும், உடலுக்குச் சத்தானதாகவும் இருக்கும். இந்த ரவையைக் கட்லெட் செய்யவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதே ரவையில் மூன்று டீஸ்பூன் போட்டு இரண்டு முட்டை, ஒரு வெங்காயம் மிளகு, சீரகத்தூள் சேர்த்து நன்றாக அடித்து, கொத்துமல்லித்தழையை அரிந்து போட்டு ஆம்லட்டாக ஊற்றி எடுத்தால் வயிற்றுக்கு அடக்கமான முழுமையான சிற்றுண்டியாகிவிடும். ஐம்பது மி.லி தேங்காய்ப்பாலுடன் அரை வாழைப்பழம், இரண்டு தேக்கரண்டி நாட்டுச் சர்க்கரை, மேற்படி ரவையும், சிறிதளவு வெண்ணெயும் கலந்து மிக்ஸியில் விட்டு ஓர் அடி அடித்துச் சிறிய கப்பில் ஊற்றி அரைமணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் நாவுக்கும், உடலுக்கும், மனதுக்கும் இதம் தரும் ஐஸ்க்ரீம் தயார்.   

இது பழங்களின் காலம். பழங்களின் அரசி மா. மாம்பழத்தில் தயாரிக்கக்கூடிய தனித்துவமான இனிப்பு குறித்து அடுத்த இதழில் பார்க்கலாம்.

நிலாச்சோறு ஊட்டுவோம்...