
ஹெல்த் - 12வி.ராமசுப்பிரமணியன், தொற்றுநோய் சிறப்பு மருத்துவர்
காசநோய் குறித்தும், ‘பெனிசிலின்’ என்ற ஆன்டிபயாடிக் மருந்து கண்டுபிடிக்கப்பட்ட சூழல் குறித்தும் கடந்த இதழில் பார்த்தோம். காசநோய் பற்றி நிறைய பேசவேண்டியிருக்கிறது. இந்த நோயை, ‘எலும்புருக்கி நோய்’ என்று தமிழில் குறிப்பிடுவார்கள். உண்மையில், மிகவும் கொடூரமான நோய்தான் அது. ‘பாவம் செய்தவர்களுக்குத்தான் இந்த நோய் வரும்’ என்று ஒரு காலத்தில் மக்கள் நம்பினார்கள். அது கிருமியால் வரும் நோய் என்று நிரூபித்தவர் ராபர்ட் காக்.

காசநோய் வந்தால் இருமல் வரும்... சளி வரும்... இளைப்பு வரும். ஆனால், அவை மட்டும்தான் அறிகுறிகளா? காசநோய் என்பது நகம், முடி தவிர உடம்பில் எந்த உறுப்பை வேண்டுமானாலும் பாதிக்கலாம். நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே இருமல் வரும். 60 முதல் 70 சதவிகிதம் நுரையீரலில் காசநோய் வரலாம். 30 முதல் 40 சதவிகிதம் கண், மூளை, தொண்டை, நெறி, மூட்டுகள், குடல், சிறுநீரகம்... எங்கே வேண்டுமானாலும் வரலாம்.

எந்த உறுப்பைக் காசநோய் பாதிக்கிறதோ அதற்கேற்பவே அறிகுறிகள் வெளிப்படும். மூட்டில் காசநோய் வந்தால் இருமல் வராது; சளியோடு சேர்ந்து ரத்தம் வராது. மூட்டில் வலியெடுக்கும். செயல்பாடுகள் பாதிக்கும். நுரையீரலில் இருக்கும் காசநோயை எளிதில் கண்டுபிடித்து விடலாம். அதற்குரிய அறிகுறிகள் குறித்துப் பரவலாக விழிப்பு உணர்வு இருக்கிறது. ஆனால், உடம்பில் வேறெந்த உறுப்பிலும் காசநோய் தாக்கினால் அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது. என்னென்ன அறிகுறிகள் தெரிகின்றனவோ அவற்றை வைத்துக் கூடுதலாகச் சில பரிசோதனைகள் செய்துதான் முடிவுக்கு வரமுடியும்.
ஒருவருக்குக் காசநோய் இருக்கிறதா என்பதைக் கண்டறிய ‘மேன்டாக்ஸ் டெஸ்ட்’ (Mantoux Test) என்று ஒரு டெஸ்ட் உண்டு. காசநோய்க் கிருமிகளை எடுத்து, அவற்றைச் செயலிழக்கச் செய்து, யாரைப் பரிசோதிக்க வேண்டுமோ அவருடைய உடம்பில் ஏற்றுவார்கள். அவருடைய உடம்பு இதற்கு முன்பு காசநோய்க் கிருமிகளைச் சந்தித்திருந்தால் அவருடைய உடம்பில் ஒரு ‘ரியாக் ஷன்’ ஏற்படும். உடம்பில் இருக்கிற நோய் எதிர்ப்பு சக்தி, அந்தக் கிருமிகளை எதிர்த்துச் சண்டையிடும். அதனால் ஏற்படும் விளைவு அது. பத்து மில்லி மீட்டருக்கு மேல் அந்த ரியாக் ஷன் வந்தால் அந்த நபரின் உடம்புக்குக் காசநோய்க் கிருமிகள் புதிதல்ல, ஏற்கெனவே உள்ளே வந்திருக்கின்றன என்று கண்டுபிடித்துவிட முடியும். ஆனால், இப்போது அவருக்குக் காசநோய் இருக்கிறதா என்பதை இந்தச் சோதனையில் கண்டறிய முடியாது.

எனக்கு இதுவரை காசநோய் வந்ததில்லை. ஆனால் தினமும் காசநோய் பாதித்த இருவரையாவது பார்க்கிறேன். சிகிச்சையளிக்கிறேன். எப்போதோ சில காசநோய்க் கிருமிகள் என் உடலில் புகுந்திருக்கலாம். அந்தக் கிருமிகளை என் உடம்பில் உள்ள எதிர்ப்பு சக்தி அடக்கித் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். அதனால் என்னை அந்தக் கிருமிகள் பாதிக்கவில்லை. இப்போது எனக்கு `மேன்டாக்ஸ்’ சோதனை செய்தால் ரியாக் ஷன் இருக்கும். அதனால் எனக்குக் காசநோய் இருக்கிறது என்று பொருளல்ல. கிருமி உடம்புக்குள் போயிருக்கிறது. எதிர்ப்பு சக்தி அவற்றைச் சந்தித்து அடக்கி வைத்திருக்கிறது என்பதுதான் அந்த வெளிப்பாடு. பெரும்பாலானோர், `மேன்டாக்ஸ்’ டெஸ்ட்டில் `பாசிட்டிவ்’ என்று வந்தால், ‘காசநோய் வந்து விட்டது, மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று நினைக்கிறார்கள்; அது தவறு. இந்தியாவில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமானோருக்கு இந்த `மேன்டாக்ஸ் டெஸ்ட்’ பாசிட்டிவ்வாகத்தான் இருக்கும். அவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இப்போது இன்னும் கொஞ்சம் நவீனமாக `டிபி கோல்டு டெஸ்ட்’ (TB Gold Test) என்று ஒரு டெஸ்ட் வந்திருக்கிறது. பெரிய வித்தியாசமில்லை. `மேன்டாக்ஸ்’ எப்படியோ அப்படித்தான். ஒரே வித்தியாசம், இது ரத்தத்தை எடுத்துப் பரிசோதிப்பது. `மேன்டாக்ஸ்’, `டிபி கோல்டு டெஸ்ட்’ மட்டுமல்ல... பொதுவான எந்த ஒரு சோதனை மூலமும் ஒருவருக்குக் காசநோய் வந்திருக்கிறது என்பதை உறுதிப்படுத்தவோ, வரவில்லை என்று மறுக்கவோ முடியாது. பிறகு எப்படிக் கண்டுபிடிப்பது?
அடுத்த இதழில் பார்ப்போம்.
- களைவோம்...