ஹெல்த்
Published:Updated:

வளர வளர மூளை வேகம் இழக்கும்!

வளர வளர மூளை வேகம் இழக்கும்!
பிரீமியம் ஸ்டோரி
News
வளர வளர மூளை வேகம் இழக்கும்!

பானு, நரம்பியல் மருத்துவர்ஹெல்த்

னிதன் வளர வளர மூளையும் வளரும் என்பது நமக்குத் தெரியும். ஆனால் 45 வயது முதல் மூளை தனது வேகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் தொடங்கிவிடும். அந்தக் காலக்கட்டத்தில் நம் இயக்கத்திலும் பல மாற்றங்கள் ஏற்படும். அப்படியான நிலையைத் தவிர்க்க மூளையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் வழிகளைச் சொல்கிறார் நரம்பியல் மருத்துவர் பானு.

கருவிலிருக்கும்போது...

* கருத்தரித்த நான்காவது வாரத்திலேயே குழந்தையின் மூளை வளரத் தொடங்கி விடும். அதனால், அந்தக் காலக்கட்டத்தில் தாய் ஆரோக்கியமான சூழலில் இருந்தால் குழந்தைக்கு மூளைக் குறைபாடுகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

* கருவுற்ற நான்காவது வாரத்தில், நிமிடத்திற்கு 250,000 நரம்பணுக்கள் (Neurons) குழந்தையின் உடலில் உருவாகின்றன. இதன் மூலம் நமக்குத் தேவையான அனைத்து நரம்பணுக்களும் பிறப்பதற்கு முன்பே உருவாகிவிடும்.

* குறைப்பிரசவத்தால் மூளை வளர்ச்சி தடைப்பட வாய்ப்புள்ளது. இதனால் பிற்காலத்தில் மூளை சார்ந்த பல பிரச்னைகள் வர வாய்ப்புண்டு.

வளர வளர மூளை வேகம் இழக்கும்!

குழந்தைப் பருவம்...

* குழந்தையின் மூளை, ஆறு வயதுக்குள்ளேயே 95 சதவிகித வளர்ச்சியை எட்டிவிடும்.

* இந்தப் பருவத்தில் மூளை மிகவும் ஆற்றல் நிறைந்ததாக இருக்கும்.

* குழந்தைப்பருவத்தில் மூளை தனக்குத் தேவையானதைவிட இரண்டு மடங்கு நியூரான்களை உற்பத்தி செய்யும். ஆனால் இதில் நன்றாகப் பயன்படுத்தி வலுப்படுத்தப்பட்டவை மட்டுமே தொடர்ந்து அழியாமல் இருக்கும்.

வளர வளர மூளை வேகம் இழக்கும்!


வளர்ந்த நிலையில்...

* 20 வயதாகும்போது மூளை நன்றாக வளர்ந்துவிடும். அதனால் மூளையில் உள்ள வரிப் பள்ளங்கள் விரிவடையும்.

* 20 வயதில் தொடங்கி 90 வயது வரை, மூளை அதன் எடையிலிருந்து ஐந்து முதல் பத்து சதவிகிதத்தை இழக்கிறது.

* நம் மூளையின் உச்சக்கட்ட செயல்திறன்,  22 வயதில் தொடங்கி ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளே நீடிக்கும். அதன்பிறகு ஞாபகசக்தி, பணி ஒருங்கிணைப்புத்திறன், திட்டமிடல் திறன் ஆகியவை குறைந்துவிடும். 

* 45 முதல் 49 வயதுக்குள் ஆண்களும் பெண்களும் 3.6 சதவிகித மூளைத்திறனை இழந்துவிடுகிறார்கள். அதன்பிறகு காரணத்தை ஆராயும் திறன், புரிந்துகொள்ளும் திறன், ஞாபகசக்தி ஆகியவை வெகுவாகக் குறையத் தொடங்கும்.

வளர வளர மூளை வேகம் இழக்கும்!

வயதான பிறகு...

* இந்தப் பருவத்தில் நாம் தொடர்ச்சியாக மூளையின் செல்களை இழந்து கொண்டே இருப்போம்.

* நரம்பணுக்களில் செய்திகளைக் கடத்தும் பகுதியான டெண்ட்ரைட்ஸ் (Dendrites) அதிக அளவில் சிதைவடையும்.

* 65 முதல் 70 வயதுக்குள் ஆண்களுக்கு 9.6 சதவிகிதமும் பெண்களுக்கு 7.4 சதவிகிதமும் மூளை இழப்பு ஏற்படும். 

* 80 வயதில் நம் மூளை கொஞ்சம் எடையை இழந்து, அளவிலும் சிறிது சுருங்கிவிடும்.

* மூளை சுருங்குவதால் அறிவாற்றல் சார்ந்த திறமைகள் குறையும். வயதானவர்களுக்கு, ஞாபக சக்திக்கு உதவும்  ‘ஹிப்போ காம்பஸ்’ (Hippo Campus) சுருங்குவதால் அவர்களுடைய மூளையின் நினைவாற்றல் குறையத் தொடங்கும்.

- காவ்யா.ர

வளர வளர மூளை வேகம் இழக்கும்!

மூளைச் செயல்பாட்டை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள!

* தொடர்ந்து ஏதாவது ஒன்றை படித்துக்கொண்டிருப்பது மூளையை ஆரோக்கியமாக வைக்க உதவும்.

* வாரத்தில் குறைந்தது மூன்று நாள்கள், தொடர்ந்து 45 நிமிடம் நடப்பது மூளைக்கு நல்லது.

* தினமும் 8 மணி நேரம் உறங்குவது ஞாபக மறதி அபாயத்தைக் குறைக்கும்.

* புகைபிடித்தலைத் தவிர்த்து, சீரான உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்து, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ராலை அளவாக வைத்திருப்பது மூளைக்கும் நல்லது.

* உயர் ரத்த அழுத்தம், மூளை சுருங்குவதை வேகப்படுத்தும். மேலும் மூளைத்திறன் குறைபாட்டுக்கும் வழிவகுக்கும். எனவே ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கவும்.