மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குழந்தைக்கு கிரைப் வாட்டர் வேண்டாம்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 3

குழந்தைக்கு கிரைப் வாட்டர் வேண்டாம்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 3
பிரீமியம் ஸ்டோரி
News
குழந்தைக்கு கிரைப் வாட்டர் வேண்டாம்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 3

தனசேகர் கேசவலு, குழந்தைகள்நல மருத்துவர்

பிரசவத்துக்குப் பின் டிஸ்சார்ஜாகி வீட்டுக்குச் சென்ற பிறகு, குழந்தை விஷயத்தில் முதல் ஒரு மாதம்வரை அம்மா  கவனமாக இருக்க வேண்டிய விஷயங்களையும், அந்த நேரத்தில் குழந்தைக்கு வர வாய்ப்புள்ள பிரச்னைகள் பற்றியும் இந்த இதழில் பார்க்கலாம்.

குழந்தைக்கு கிரைப் வாட்டர் வேண்டாம்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 3

எத்தனை மணி நேரத்துக்கு ஒருமுறை தாய்ப்பால் புகட்டலாம்?

பச்சிளம் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பது தாய்ப்பால்தான். பாப்பாவுக்குச் சர்க்கரை, புரதம், கொழுப்பு எனத் தேவையான அனைத்து சத்துகளும் கிடைக்க, தாய்ப்பால் மட்டும்தான் சரியான வழி. உங்கள் குட்டிப் பாப்பா திருப்தியாகத் தாய்ப்பால் குடிக்கிறது என்றால், நோ பிராப்ளம். பொதுவாக, நிறை மாதத்தில் பிறந்த குழந்தை நாளொன்றுக்குக் குறைந்தது மூன்று, நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை அம்மாவிடம் பால் அருந்த வேண்டும். குறை மாதத்தில் பிறந்த குழந்தையென்றால், இந்த  இடைவேளை இரண்டு, மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை எனச் சற்று குறையும். தாய்ப்பால் குடிக்கக் குடிக்க சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது என்று குழந்தையின் எல்லா சிஸ்டமும் சரியாக இயங்க ஆரம்பிக்கும். 

குடித்த தாய்ப்பாலைக் கக்கலாமா குழந்தை?

`நிறைகுடம் தளும்பாது’ என்பார்கள்.  ஆனால், வயிறு முட்டப் பால் குடித்தால் குட்டிப் பாப்பா தளும்பும்; குடித்த பாலில் கொஞ்சம் கக்கவும் செய்யும். இது நார்மலான விஷயம். குடித்த தாய்ப்பாலானது ஜீரணித்துத் தயிர்போல சிறிதளவு வெளியேறினால் `ஓ.கே'. ஆனால், தாய்ப்பாலைச் செரிக்க முடியாமல், அதை அப்படியே குழந்தை வாந்தி எடுத்தால் உடனே கவனிக்க வேண்டும். குடல் ஒன்றுடன் ஒன்று சுற்றிக்கொள்வது, குழந்தையின் குடலானது முழுவதும் வளராமல் இருப்பது, குடலில் அடைப்பு இருப்பது என இந்த மூன்றில் ஒரு பிரச்னை இருந்தால்தான் குழந்தை குடித்த பாலை அப்படியே வாந்தி எடுக்கும். வாந்தியானது பச்சை நிறத்திலோ அல்லது வெளிர் மஞ்சள் நிறத்திலோ இருந்தால், அது ஆபத்தின் அறிகுறி. ஆனால், கொஞ்ச நேரம் முன்னால் குடித்த வைட்டமின் டிராப்ஸுடன் கலந்து தாய்ப்பால் மஞ்சள் நிறத்தில் வாந்தியாக வருவதற்கெல்லாம் பயப்படத் தேவையில்லை.

குழந்தைக்கு கிரைப் வாட்டர் வேண்டாம்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 3

முதல் மாதத்தில் பாப்பா எவ்வளவு வெயிட் போடலாம்?

பிறந்த  10 முதல் 15 நாள்கள் வரை பாப்பாவின் எடையானது 10% - 15% வரை குறையும். உடலில் இருக்கிற நீர் வற்றுவதால் இப்படி ஆகும். இது நார்மலான விஷயம்தான். அதன் பிறகு, குழந்தை  தினமும் 15 கிராமில் இருந்து 20 கிராம்வரை வெயிட் போடும். இந்த அளவு குழந்தைக்குக் குழந்தை வேறுபடும். 

பாப்பா தலை ஏன் பெரிதாக இருக்கிறது?

சில குழந்தைகளுக்கு நார்மலைவிட தலை சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இருக்கும். அப்படியிருந்தால் உடனே பயந்துவிடாதீர்கள். உங்கள் பிறந்த வீட்டிலோ அல்லது புகுந்த வீட்டிலோ அப்படி யாருக்காவது இருக்கிறதா என்று விசாரியுங்கள். இருந்தால், அது மரபு; குழந்தைக்கு வேறு எந்தப் பிரச்னையும் இல்லை என்று நிம்மதியாகிவிடுங்கள். அப்படி யாருக்கும் இல்லை என்றால், அவை குழந்தையின் மூளையில் இருக்கிற பிரச்னையின் அறிகுறியாக இருக்கலாம்.

ஒன்றல்ல, இரண்டு உச்சிக்குழிகள்!

பிறந்த குழந்தையின் தலையில் ஒரு குழியல்ல, இரண்டு குழிகள் இருக்கும். ஒன்று, எல்லோருக்கும் தெரிந்த முன் உச்சிக்குழி. இரண்டாவது, தலையின் பின் பக்கத்தில் இருக்கும். முன் குழி சிறிது சிறிதாக மூட 18 மாதங்கள் ஆகும். பின் குழி 9 முதல் 12 மாதங்களில் மெள்ள மெள்ள மூடிவிடும். குழந்தையின் உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், முன்னால் இருக்கிற குழியானது ஆழ்ந்து காணப்படும். மூளைக்குள்  நீர் அதிகமாக இருந்தால், குழிப்பகுதியில் கைவைத்துப் பார்த்தால் லேசான வீக்கம் தெரியும். அந்தக்காலப் பாட்டிகள் சிலர், குழந்தைக்குத் தலைக்குக் குளிப்பாட்டிய பிறகு, உச்சிக்குழியில் ஈரம் இருந்தால், ஈரம் போவதற்காக அந்த இடத்தில் சாம்பிராணித்தூள் அல்லது முகத்துக்கு உபயோகிக்கும் பவுடரை வைப்பார்கள். இவைற்றையெல்லாம் செய்யக் கூடாது. குழந்தையின் உச்சிப் பகுதியில் இயல்பாகவே உஷ்ணம் அதிகமாக இருக்கும். அதனால் ஈரம் இருந்தாலும் தானாகவே காய்ந்துவிடும்.

குழந்தைக்கு கிரைப் வாட்டர் வேண்டாம்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 3

கிரைப் வாட்டர் பலன் தருமா?

கிரைப்  வாட்டர் குழந்தையின் வயிற்றுவலியை நீக்கும் என்பதற்கு உலகம் முழுக்க மருத்துவரீதியாக எந்த ஆதாரமும் இல்லை. 1800-களில் மலேரியாவைக் குணப்படுத்த கண்டறியப்பட்ட மருந்துதான் கிரைப் வாட்டர். அது வயிற்று வலியைச் சரிசெய்கிறது என்று யாரோ சொல்லப்போக, அதனுடன் ஆல்கஹாலைக் கலந்து விற்க ஆரம்பித்து விட்டார்கள். அதனால்தான், கிரைப் வாட்டர் குடித்த குழந்தைகள் ஆழ்ந்து தூங்குகிறார்கள்.

பச்சிளம் குழந்தை எதற்கெல்லாம் அழும்?

குழந்தை அழுதாலே வயிற்று வலி அல்லது பசி என்று நினைத்துவிடுகிறார்கள் அம்மாக்கள். தாயின் கதகதப்பு தேவைப்பட்டாலும் குழந்தை அதைச் சொல்ல அழுகை என்ற மொழியையே பேசும். டயப்பரில் உச்சா, கக்கா போய்விட்டாலும் சிணுங்குவார்கள். இவை தவிர, அதிகமான ஓசை, சொரசொரப்பான டிரஸ், பெர்ஃப்யூம் வாசனை, பவுடர் வாசனைகூட குழந்தையை அழவைக்கலாம். எனவே, குழந்தைக்கு அருகிலிருப்பவர்கள் இவற்றையெல்லாம் கவனியுங்கள்.

குழந்தைக்கு கிரைப் வாட்டர் வேண்டாம்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 3


பிறந்த குழந்தைக்கு பவுடர் போடலாமா?

வேண்டாம். குறிப்பாக, குழந்தையின் முகத்தில் பவுடர் போடவே கூடாது. அந்தத் துகள்கள் மூச்சுக் குழாயில் சென்று பிரச்னைகளை ஏற்படுத்தலாம். உலர்வுத் தன்மைக்காகவும், `உச்சா' வாடை தவிர்ப்பதற்காகவும் தொடைப்பகுதிகளில் பட்டும் மட்டும் பவுடர் போடலாம். அதையும் கைகளால் தொட்டு மட்டுமே தடவ வேண்டும், பஃப் பயன்படுத்த வேண்டாம்.

வைட்டமின் டிராப்ஸ் கொடுக்கலாமா?

நிச்சயமாகக் கொடுக்க வேண்டும். இரும்புச்சத்துக்கான டிராப்ஸ், மல்ட்டி வைட்டமின் டிராப்ஸ், வைட்டமின் ‘டி' டிராப்ஸ் என்று 3 வகை  டிராப்ஸ் இருக்கின்றன. அவற்றில் எதையெல்லாம் கொடுக்க வேண்டும் என்று உங்கள் டாக்டர் சொல்கிறாரோ அதைக் கட்டாயம் கொடுங்கள்.
ஒரு மாதத்துக்குள் பாப்பாவுக்கு ஏற்படும் காய்ச்சல்!

நார்மல் டெலிவரி மூலம் பிறக்கிற சில குழந்தைகளுக்கு, தாயின் பிறப்புறுப்பில் இருக்கிற கிருமிகளால் நோய்த்தொற்று ஏற்பட்டு, பிறந்த நான்கு வார காலத்தில், காய்ச்சல் வரலாம். அதனால், குழந்தை பிறப்பதற்கு முன்னால் பிறப்புறுப்பை எந்த அளவுக்குச் சுத்தமாக வைத்துக்கொள்ள முடிகிறதோ அந்த அளவுக்குச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்த இதழில், இரண்டு  மற்றும் மூன்றாம் மாதங்களில் குழந்தையின் வளர்ச்சி எப்படி இருக்கும், அந்த மாதங்களில் வரக்கூடியப் பிரச்னைகள், அவற்றுக்கான தீர்வுகள் பற்றியெல்லாம் விளக்கமாகச் சொல்கிறேன்.

(வளர்த்தெடுப்போம்!)


- ஆ.சாந்திகணேஷ்