ஹெல்த்
Published:Updated:

நிலம் முதல் ஆகாயம் வரை... - அழுத்த சிகிச்சை

நிலம் முதல் ஆகாயம் வரை... - அழுத்த சிகிச்சை
பிரீமியம் ஸ்டோரி
News
நிலம் முதல் ஆகாயம் வரை... - அழுத்த சிகிச்சை

யோ.தீபா, இயற்கை மருத்துவ துணைப் பேராசிரியர்ஹெல்த்

ள்ளங்கை மற்றும் உள்ளங்கால் பகுதியில் அழுத்தம் கொடுத்துக் குறிப்பிட்ட புள்ளிகளைத் தூண்டுவதன் மூலம் நோய்களைக் குணப்படுத்தும் ஒருவித சிகிச்சையே `ரெஃப்ளெக்ஸாலஜி’ (Reflexology). நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கையாளப்படும் இந்தச் சிகிச்சை, ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, வலிகளிலிருந்து நிவாரணமளிக்கும். உடல் உறுப்புகளின் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்வது, குறைந்த வலியில் சுகப்பிரசவம் காண உதவுவது என இதன் பலன்கள் ஏராளம்.

நிலம் முதல் ஆகாயம் வரை... - அழுத்த சிகிச்சை

   நீண்டநேரம் வேலை செய்வது, நின்றுகொண்டே வேலை செய்வது, அதிக தூரம் ஓடுவதால் பாதங்கள் சோர்வடையும். இதற்கு அழுத்த சிகிச்சை கொடுப்பதால் மனம் அமைதிப்படும்; உடல் தளர்வடையும். செரட்டோனின் ஹார்மோன் இரவில் சுரக்கக்கூடியது என்பதால், தூங்கப்போவதற்கு முன்னர் சுண்டுவிரலுக்குக் கீழே உள்ள பகுதியில் அழுத்தம் கொடுப்பதால், செரட்டோனின் தன் பணியைச் செய்ய உதவும். இதனால் மனம் அமைதி அடையும்; இரவில் ஆழ்ந்த தூக்கம் வரும்; பகலில் சுறுசுறுப்பாகச் செயல்படவும் முடியும்.  பெண்களுக்கு, குறிப்பாக மாதவிடாய் நிற்கும் காலகட்டமான மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் மனச்சோர்வு, வயிற்று உப்புசம், தலைவலி, மனநிலை மாற்றங்கள், கோபம் ஆகியவையெல்லாம் உண்டாகும்..பெருவிரலின் கீழ்ப்பகுதியில் அழுத்தம் கொடுப்பதால் இந்தப் பிரச்னைகள் சரியாகும். காலையில் கண் விழித்ததும், இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று தேய்த்து முகத்தில் வைப்பார்கள். இப்படி அழுத்தம் கொடுப்பதால் ஒட்டுமொத்த உடல் உறுப்புகளும் புத்துணர்ச்சி பெற்றுச் சிறப்பாகச் செயல்படும்.

நிலம் முதல் ஆகாயம் வரை... - அழுத்த சிகிச்சை

வணக்கம் சொல்லும்போது இரண்டு கைகளையும் ஒன்று சேர்ப்பதால் மூளை, இதயம், தைராய்டு சுரப்பி, வயிறு உள்ளிட்ட பகுதிகளுக்கான புள்ளிகள் அழுத்தம் பெற்று ரத்த ஓட்டம் சீராகி, விழிப்புடனும் கவனமாகவும் செயல்பட முடியும். பாதங்களில் அழுத்தம் கொடுப்பதால், பாதவலி (Plantar Fasciitis), கணுக்கால் வலி (Achilles Tendinitis), குதிகால் வலி (Calcaneal Spur) போன்றவை தீரும்.  நுரையீரல் தொடர்பான நோய்கள், சளித்தொந்தரவு இருந்தால், சளி வெளியேற நாம் உதவ வேண்டும். ஒரு பக்கக் கையின் விரல்களை உள்பக்கமாக மடக்கி, எதிர்ப்பக்கக் கையின் ஆள்காட்டி விரல், நடுவிரல் மற்றும் மோதிர விரல் பகுதியில் (அடிப்பகுதியில்) உள்புறமாக அழுத்தினால் சளி வெளியேறும். அனைத்து விரல்களின் நகங்களையும் ஒன்றோடொன்று உரசினால் முடி உதிர்தல் பிரச்னை தீரும். இதை தினமும் ஐந்து முறை செய்யவேண்டியது அவசியம். பதப்படுத்தப்பட்ட உணவுகள், கலப்பட உணவுகள், நிறமூட்டப்பட்ட உணவுகளை உண்டால் நச்சுகள் அதிகரிக்கும்; உடல் உறுப்புகள் சரியாகச் செயல்படாமல் நோய்கள் உருவாகும். அந்த நேரத்தில் கழிவுகளை வெளியேற்ற வேண்டும். அதாவது அட்ரீனல் சுரப்பியைத் தூண்டும்விதமாகப் பெருவிரலுக்குக் கீழே இரண்டு அங்குலம் தள்ளி அழுத்தம் கொடுத்தால் கழிவுகள் வெளியேறும். மலம் கழிப்பது, சிறுநீர் கழிப்பது மற்றும் வியர்வைச் சுரப்பிகளைத் தூண்டி இயல்பாக வியர்ப்பது போன்றவற்றால் கழிவுகள் வெளியேறிவிடும்.

நிலம் முதல் ஆகாயம் வரை... - அழுத்த சிகிச்சை

விரல்களை மடக்கும்போது சுண்டுவிரலுக்குக் கீழ்ப்பகுதியில் ஏற்படும் மடிப்புப் பகுதியில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் தோள்பட்டைவலி நீங்கும். மோதிர விரல் மற்றும் நடுவிரலுக்கு நடுவே உள்ள பகுதியில் அழுத்தம் கொடுத்தால், கண் பார்வை சீராகும். நடுவிரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் நடுவே உள்ள பகுதியில் அழுத்தம் கொடுத்தால், காதுப் பிரச்னைகள் சரியாகும். ஒருகாலத்தில் பள்ளிக்கூடங்களில் தோப்புக்கரணம் போடுவதைத் தண்டனையாகக் கொடுப்பார்கள். ஆனால், தோப்புக்கரணம் ஒருவித அழுத்த சிகிச்சை என்பது நம்மில் பலருக்கும் தெரியாத உண்மை. தோப்புக்கரணம் போடுவதால் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும். தவறு செய்யும் குழந்தைகளின் காதைத் திருகுவது ஒரு தண்டனையாகவே பின்பற்றப்படுகிறது. காதைத் திருகுவதால், ஒட்டுமொத்த உடல் உறுப்புகளின் செயல்பாடுகளும் தூண்டப்படும்.

நிலம் முதல் ஆகாயம் வரை... - அழுத்த சிகிச்சைகால் விரல்களை மட்டும் தரையில் ஊன்றியபடி நடந்தால் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும். வளையல் அணிந்தால், மணிக்கட்டுப் பகுதியிலிருக்கும் புள்ளிகளில் அழுத்தம் ஏற்பட்டு, கர்ப்பப்பையின் செயல்பாடுகள் தூண்டப்பட்டு, மாதவிடாய்ப் பிரச்னைகள் சீராகும். கொலுசு அணிந்தால் கணுக்கால் பகுதியிலுள்ள புள்ளிகள் தூண்டப்பட்டு மாதவிடாய்ப் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். இதுபோல பல பிரச்னைகளுக்கு அழுத்த சிகிச்சையில் தீர்வு உண்டு!

அடுத்த இதழில் நீர் சிகிச்சை பற்றிப் பார்ப்போம்.

- எம்.மரியபெல்சின்