
ஹெல்த்
வயிறு குலுங்குகிறது. மிகவும் சிரமப்பட்டுக் கைகளை வாயின் மேல் வைத்து அடக்கப் பார்க்கிறீர்கள். வெடித்துச் சிரிக்கிறீர்கள். எதிரில் இருப்பவரும் அடக்க முடியாமல் சிரித்து அதிரச் செய்கிறார். கண்களில் நீர் நிற்கிறது. ஆனால், அந்தச் சிரிப்பு நிற்கவில்லை. ஒருவழியாக சில நிமிடங்களில் இயல்பு நிலைக்குத் திரும்புகிறீர்கள். இப்படி நீங்கள் கடைசியாகச் சிரித்தது எப்போது?
உங்கள் வீட்டில் அல்லது உங்கள் தெருவில் இருக்கும் சிறு குழந்தைகளின் செயல்பாடுகளை எப்போதாவது உற்று நோக்கியிருக்கிறீர்களா? இன்று பாருங்கள். குறைந்தது பத்து நிமிடத்திற்கு ஒரு முறையேனும் சிரிப்பார்கள். அவர்களால் மட்டும்தான் ஒவ்வொரு விஷயத்திலும் சிரிப்பதற்கான காரணங்களைக் கண்டறிய முடியும். குழந்தைகளைப்போல நகைச்சுவையை எல்லா இடங்களிலும் தேடினால், நாமும் ஆரோக்கியமாக வாழலாம் என்று சத்தியம் செய்கின்றன பல்வேறு ஆய்வுகள்.

மனம் விட்டுச் சிரிக்க என்ன செய்யலாம்?
* தளர்நடையிடும் குழந்தைகள் (Toddlers), பேசவே ஆரம்பித்திராத, அதே நேரம் பேச முயற்சி செய்யும் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழித்தல்.
* அவ்வப்போது நண்பர்களுடன் சேர்ந்து உணவு அருந்துவது; நேரம் செலவு செய்வது.
* சிரிப்பை வரவழைக்கும் நாடகங்கள், படங்கள் பார்ப்பது; புத்தகங்கள் வாசிப்பது.
சிரிப்பிற்கு மொழி பேதம் கிடையாது. அது உணர்வுகளை மட்டும் வெளிப்படுத்தும். சிரிப்பதால் நட்புணர்வு அதிகமாகும். சங்கடங்கள் மறைந்து போகும். சிரிப்பு வரும்போதே அதன் நண்பனான மன அமைதியையும் கூடவே கூட்டி வந்துவிடும். உங்களின் உள்ளே இருக்கும் குழந்தையை உங்களுக்கே அறிமுகம் செய்து வைக்கும். தினமும் நம்மைச்சுற்றி நடக்கும் சம்பவங்களில் ஏதேனும் ஒன்றாவது நகைச்சுவையைக் கொண்டு இழைத்தாக இருக்கும். அதை இனங்கண்டு உங்கள் சிரிப்பைத் தேடிப் பிடியுங்கள். சிரித்து வாழ வேண்டும் என்பதைவிடச் சிரித்தால்தான் வாழ்வு என்பதை உணருங்கள்.
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா?

சிரித்து வாழ்வதில், உங்களுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் கொடுக்கலாம்? ஒரு சுய மதிப்பீடு செய்வோமா? கீழே இருக்கும் வரிகளில் உங்களுக்குப் பொருந்துவதை மட்டும் வட்டமிடுங்கள்.
* நான் தினமும் நிறையவே சிரிக்கிறேன்.
* நான் கேளிக்கைகளை அதிகம் விரும்புவேன். அதனால் இயல்பிலேயே நான் தினமும் வாய்விட்டுச் சிரித்து விடுகிறேன்.
* நான் எப்போதும் நகைச்சுவையாகப் பேசுவேன்.
* மற்றவருடன் பேசும்போது நிறையக் குறும்புத்தனங்கள் செய்வேன்.
* காரணமேயின்றி பாடல்களை முணுமுணுத்துக் கொண்டே இருப்பேன்.
* அவ்வப்போது காரணங்கள் ஏதுமின்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்த நடனமாடுவேன்.
* என்னுடைய உணர்வுகளைத் தடையின்றி வெளிப்படுத்துவேன்.
* என்னுள் எப்போதும் நேர்மறை எண்ணங்கள் அதிகமாக இருக்கும்.
* நான் சாதுவாகவும் அமைதியாகவும் எல்லாவற்றையும் எதிர்கொள்வேன்.
* அடுத்த நொடி என்னென்ன ஆச்சர்யங்கள் நிகழப்போகின்றன என்று ஆவலுடன் காத்திருப்பேன்.
* நான் எப்போதும் அயல்நோக்கு எண்ணங்கள் கொண்ட வெளிப்படையான மனிதனாக (Extrovert) மட்டுமே என்னைக் காட்டிக் கொள்கிறேன்.
* தற்போது என்னுடைய வாழ்க்கை எனக்குத் திருப்தியும் மகிழ்ச்சியும் அளிப்பதாகவே இருக்கிறது.
* என்னுடைய உடலும் மனமும் ஆரோக்கியமாகவே இருக்கின்றன.
* என்னால் புதிய மனிதருடனும் தயக்கமின்றி உரையாட முடியும்.
* நான் எப்போதும் புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாக இருக்கிறேன்.
* நான் மிகவும் கஷ்டமான காலகட்டத்திலும், நம்பிக்கை கொண்ட மனிதனாகவே இருக்கிறேன்.
* எனக்கு நிறைய நண்பர்கள் உண்டு.
* காரணமேயில்லாமல் சிரிப்பதுகூட எனக்கு இயல்பாக வந்துவிடும்.
* அவ்வப்போது பரிவுடனும் அன்புடனும் சில காரியங்களைச் செய்வேன்.
* பலரின் முன்னிலையிலும் வேடிக்கையான மனிதனாக நிற்கும் திறன் எனக்கு உண்டு.
மதிப்பெண்கள்: 16-20 வட்டங்கள்: நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழும் மனிதர்.
12-16 வட்டங்கள்: சிரித்து வாழ வேண்டும் என்பது புரிந்தவர்.
8-12: நீங்கள் இன்னமும் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும்.
<8: உங்களுக்கு இந்தக் கட்டுரை மிகவும் அவசியமானது. இதைப் பின்பற்ற முயற்சி செய்யுங்கள்.
- ர.சீனிவாசன்
சிரிச்சா போச்சு

* ரத்த அழுத்தம் மற்றும் உடல் வலி குறையும்.

* வாய்விட்டு வயிறு குலுங்கச் சிரிக்கும்போது வலுவாக மூச்சுக் காற்று வெளியேறுவதால், நுரையீரல் சுத்தமாகிப் புத்துணர்வு பெறுகிறது.

* நோய் எதிர்ப்பு சக்தி மேலும் வலுப்பெறுகிறது.

* மன அழுத்தம் ஏற்படுத்தும் கார்டிசால் (Cortisol) ஹார்மோன்கள் தங்களின் செயல்பாடுகளை நிறுத்திக் கொள்கின்றன.