ஹெல்த்
Published:Updated:

ஜீரோ ஹவர்! - 11

ஜீரோ ஹவர்! - 11
பிரீமியம் ஸ்டோரி
News
ஜீரோ ஹவர்! - 11

ஹெல்த்

டல் நலம் குறித்த அக்கறையில், பூங்காக்களில் நடைப்பயிற்சி மேற்கொள்வதும், சைக்கிளிங் போவதும், கர்லாக் கட்டைகளைச் சுற்றுவதுமாக இருக்கிறோம். உடல்நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து இவற்றையெல்லாம் பின்பற்றும் நாம், உடற்பயிற்சியின்போது உடுத்தும் உடை விஷயத்தில் அக்கறையற்றவர்களாக இருந்தால் அவை எல்லாம் வீண். வியர்வையில் நனையும் உடைகளால் நோய் பாதிக்கும் என்பதை மனதில்கொண்டு தூய்மையாக இருக்கவேண்டியது அவசியம். உடல் துர்நாற்றம், சருமநோய்களால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

ஜீரோ ஹவர்! - 11

கல்லூரி மாணவரான அவர், தினமும் வாக்கிங் செல்வார். மிகவும் ஆர்வமாக நடைப்பயிற்சி மேற்கொள்வார்.  யோகா செய்பவர்களுடன் சேர்ந்து சில ஆசனங்களைச் செய்வார். உடல்நலம் பற்றி ஓயாமல் பேசுவார். புதிதாக உடற்பயிற்சி செய்ய ஆரம்பிப்பவர்களிடம் இருக்கும் பிரச்னை இது. யாரைப் பார்த்தாலும் தன் வாழ்க்கையின் லட்சியமே உடல்நலம்தான் என்பதுபோல பேசியே கொல்வார்கள். இந்த மாணவரும் விதிவிலக்கல்ல!

ஜீரோ ஹவர்! - 11


சரியாக 15-வது நாளில் அந்த மாணவர் காணாமல் போனார். அவரது வீட்டுப்பக்கம் சென்றபோது  அவரைப் பார்க்க நேர்ந்தது. அவரிடம் பேசியபோது கால்களில் இன்ஃபெக்‌ஷன் வந்துவிட்டதாகக் கூறினார். அவருடைய கால்விரல்களுக்கு நடுவே அந்த அளவுக்கு மோசமான ஃபங்கஸ் தொற்று. இதனால் வாக்கிங் செல்வதைக் கைவிட்டுப்  பழையபடிப் போர்த்திக்கொண்டுத் தூங்க ஆரம்பித்துவிட்டார். அவருக்கு ஏற்பட்ட அந்த ஃபங்கஸ் தொற்றுக்குக் காரணம் அழுக்கு சாக்ஸ். பல நாள்களாக ஒரே சாக்ஸைப் பயன்படுத்தியிருக்கிறார். அதைத் துவைப்பதும் இல்லை, மாற்றுவதும் இல்லை!

சாக்ஸில் வியர்வை சேர்ந்ததால் கிருமித்தொற்று உருவாகி, ஆரம்பத்தில் அரிப்பு வந்திருக்கிறது. அடுத்து, அந்த இடம் முழுவதும் பச்சை நிறமாகிவிட்டது. இவரைப்போல நிறையபேர் இருக்கிறார்கள். வாக்கிங் போவதற்கென்றே பிரத்யேகமாக ஒரே ஒரு டி ஷர்ட்டும் பேன்ட்டும் வைத்திருப்பார்கள். கூடவே ஒரு செட் ஸ்போர்ட்ஸ் சாக்ஸும் இருக்கும். வாரம் முழுவதும் அவற்றையே உபயோகிப்பார்கள்.

ஜீரோ ஹவர்! - 11

இப்படி ஒரே உடையை ஒரு வாரம், ஒரு மாதமெல்லாம்  அணிவது ஆபத்தானது. நாம் ஏழ்மையில் இருக்கலாம், துணிவாங்க காசில்லாமல்கூட இருக்கலாம்.  ஆனாலும் `கந்தையானாலும் கசக்கிக் கட்டு' என்ற பழமொழியை மறக்கலாமா? உடற்பயிற்சிக்குப் பயன்படுத்தும் உடைகளை வாரம் ஒருமுறையாவது கிருமி நாசினிகள் கலந்த நீரில் அலச வேண்டும். காரணம்,  வீட்டில் உள்ளவர்களுக்கும் அதிலுள்ள கிருமிகள் பரவக்கூடும். குழந்தைகள் இருந்தால் இன்னும் கொஞ்சம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இதேபோல் காலணிகள், ஷூக்களை  மாதம் ஒருமுறையாவது சுத்தப்படுத்தவேண்டும். `யோகா மேட்' பயன்படுத்துவோர்  வாரம் ஒருமுறையேனும் அதை சோப்பு போட்டு சுத்தப்படுத்துவது முக்கியம்.

பாட்மின்டன் போன்ற விளையாட்டுகளை விளையாடுபவர்களுக்கும் சின்னச் சின்ன காயங்கள் ஏற்படுவது சகஜமே. அப்போது ஏற்படும் காயத்துடன் அழுக்குத் துணிகளையும் அணிந்தால், பழைய துணிகளில் தங்கியிருக்கும் கிருமிகள் காயங்களில் பரவி பாதிப்பை அதிகப்படுத்தும். ஒருநாள் பயன்படுத்திய உடையை மறுநாள் பயன்படுத்தக்கூடாது  என்பதை மனதில் கொள்வது முக்கியம். குறிப்பாக உடலில் எங்கெல்லாம் அதிக முடிகள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் வியர்வை படிந்த பழைய துணிகள் ஒட்டிக்கொள்ளும். வியர்வையும் அழுக்கும் சேர்ந்து முடிகளின் வேர்ப்பகுதி வழியாக சருமத்தின் ஆழத்தில் சென்று பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பது மருத்துவர்களின் கருத்து. உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் சுகாதார விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். அது உடைகளில் மட்டும் அல்ல உடலிலும்தான்... அது அடுத்த இதழில்...

நேரம் ஒதுக்குவோம்...

- வினோ