ஹெல்த்
Published:Updated:

டாக்டர் நியூஸ்!

டாக்டர் நியூஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
டாக்டர் நியூஸ்!

தகவல்

க்கள் இளமைத்துடிப்போடு இருக்கும்போது, உடலுறவில் நாட்டம் அதிகமாக இருக்கும். வயதாக ஆக, அந்த விருப்பம் குறையத்தொடங்கும்.

டாக்டர் நியூஸ்!

ஆனால், ஐம்பதைத் தாண்டியவர்கள் தங்கள் துணையோடு அவ்வப்போது தாம்பத்ய உறவில் ஈடுபடுவதன்மூலம் அவர்களுடைய குறுகியகால நினைவுத்திறன் மேம்படும் என்கிறது ஒரு சமீபத்திய மருத்துவ அறிக்கை. ஆஸ்திரேலியாவின் வுல்லாங்காங் பல்கலைக்கழகம் (Wollongong   University) நிகழ்த்தியுள்ள ஆய்வுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, மூளையில் நினைவுத்திறனைத் தூண்டும் ஹிப்போகாம்பஸ் பகுதி உடலுறவால் தூண்டப்படலாம் என்கிறது.

அடிக்கடி உறவுகொள்வது மட்டுமின்றி, துணைவரின்மீது அதிக உணர்வுப்பூர்வமான நெருக்கவுணர்வும் இருந்தால் நினைவுத்திறன் மேம்படுமாம். அதேநேரம், இது குறுகியகால மேம்பாடாகவே இருக்கும், வயதாவதால் வரும் இயல்பான நினைவுத்திறன் இழப்பை இதனால் நிரந்தரமாகக் குறைக்க இயலாது என்பதையும் இந்த ஆய்வுகள் காட்டுகின்றன.

நாள்தோறும் நடப்பது உடலுக்கு நல்லது. இதன்மூலம் உடல் சுறுசுறுப்பாக இருக்கும், எடையைக் கட்டுப்படுத்தலாம், ஆபத்தான பல நோய்கள் வரும் வாய்ப்பும் குறைகிறது.

டாக்டர் நியூஸ்!


ஆனால், அப்படி நடக்கும்போது வழக்கம்போல் மெதுவாக நடக்காமல் சற்றே வேகமாக நடந்தால், அதாவது, மூச்சுவாங்குமளவுக்கும் வியர்க்குமளவுக்கும் விரைவாக நடந்தால் இந்த நோய்கள் வரும் வாய்ப்பு இன்னும் குறைவதாகக் கண்டறிந்திருக்கிறது சமீபத்திய ஆராய்ச்சியொன்று. சிட்னி பல்கலைக்கழகம் நிகழ்த்தியிருக்கும் இந்த ஆய்வின்படி, ஒரு மணி நேரத்துக்கு 5 முதல் 6 கிலோமீட்டர் வேகத்தில் நடக்கிறவர்களுக்குப் பெரிய நோய்கள் வரும் வாய்ப்பு 24% குறைகிறதாம்.

ஒவ்வொரு நாளும் இத்தனை தூரம் நடப்பது, இவ்வளவு நேரம் நடப்பது என்று இலக்கு நிர்ணயித்துக் கொள்கிறவர்கள், இந்த வேகத்தில் நடப்பது என்றும் தீர்மானித்துக்கொண்டால் அதிக நன்மையுண்டு!

டல்நலம் சரியில்லை என்று மருத்துவரிடம் செல்கிறார் ஒருவர். மருத்துவர் தன்னுடைய மருந்துச்சீட்டை எடுத்து அதில் சில பெயர்களை எழுதித் தருகிறார். இது வழக்கமாக நடப்பதுதானே, இதில் என்ன புதுமை என்று யோசிக்கிறீர்களா? அந்த மருந்துச்சீட்டில் எழுதப்பட்டிருப்பவை, மருந்துகளின் பெயர்கள் இல்லை, உணவுப்பொருள்களின் பெயர்கள்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில்தான் “Food Is Medicine” என்ற இந்தப் புதுமையான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதிக வருவாய் இல்லாத ஏழைக் குடும்பங்கள் சரியான ஊட்டச்சத்துடன் உண்டால் அவர்களுடைய உடலுக்கு வரக்கூடிய பல பிரச்னைகள் குறையும் என்ற அடிப்படையில் மருத்துவர்கள் இப்படி உணவுப்பொருள்களைப் பரிந்துரைக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக, இதயம் தொடர்பான சில பிரச்னைகளைக் கொண்டவர்கள் சோடியம் அதிகமாக உட்கொள்ளக்கூடாது; ஆனால், எந்த உணவில் எவ்வளவு சோடியம் உள்ளது என்று தெரியாமல் அதைத் தவிர்ப்பது எப்படி? அதுபோன்ற சூழ்நிலைகளில்தான் மருத்துவர்களின் பரிந்துரை பயன்படுகிறது.

மருந்தையே உணவாகச் சாப்பிடுவதைவிட, உணவையே மருந்தாகச் சாப்பிடுவது நல்லதுதான்!

டாக்டர் நியூஸ்!

தினமும் இத்தனை மணி நேரம் தூங்கினால் உடலுக்கு நல்லது என்கிறார்கள். ஆனால், பரபரப்பான வாழ்க்கையில் அதெல்லாம் சாத்தியமாகிறதா? கிடைக்கிற நேரம்தான் தூங்கமுடியும்!

அதனால் என்ன? வாரக் கடைசியில் கொஞ்சம் அதிகநேரம் தூங்கிக்கொள்ள வேண்டியதுதான், வாரநாள்களில் இழக்கும் தூக்கத்துக்கும் அதற்கும் சரியாகிவிடும்!

நம்பமுடியவில்லையா? ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சியொன்றில் கண்டறியப்பட்டுள்ள உண்மைதான் இது!

தினமும் ஏழு மணிநேரம் சராசரியாகத் தூங்கியவர்கள் நீண்டநாள் வாழ்கிறார்கள் என்பதை இந்த ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. ஒருவேளை அப்படி ஏழு மணிநேரம் தூங்கமுடியவில்லையென்றால், வாரக் கடைசியில், அதாவது, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாகத் தூங்கிக் கணக்கைச் சரிசெய்துகொள்ளலாமாம், அதன்மூலம் அதே பலன்கள் கிடைக்குமாம்!

கஷ்டப்பட்டு உழைக்கும் உடலுக்குத் தேவையான ஓய்வைத் தரவேண்டும்; அப்போதுதான் அது ஆரோக்கியமாகத் தொடர்ந்து இயங்கும்!

டாக்டர் நியூஸ்!

லைவலி, காய்ச்சல் என்று மருத்துவரிடம் சென்றால், அவர் ஒரு மருந்தை எழுதித் தருகிறார். மக்கள் அதைக் கடையில் வாங்கிச் சாப்பிடுகிறார்கள்.

ஆனால், அந்த மருந்து உண்மையானதுதானா? அல்லது, போலியா?

சிறிய மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் சுமார் 10% மருந்துகள் போலியானவை என்கிறது உலக சுகாதார அமைப்பு. இவற்றை எப்படி அடையாளம் காண்பது?

இந்திய அரசின் மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் (DTAB) இந்தப் பிரச்னையைத் தீர்க்க ஒரு புதிய யோசனையை முன்வைத்திருக்கிறது: சந்தையில் கிடைக்கும் பிரபலமான மருந்துகளின் ஒவ்வொரு பட்டையிலும், ஒவ்வொரு புட்டியிலும் 14 இலக்கங்களைக் கொண்ட ஒரு தனித்துவமான எண் அச்சிடப்படும். அத்துடன் ஒரு மொபைல் எண்ணும் இருக்கும். அந்த மருந்தை வாங்குகிறவர்கள் அந்த மொபைல் எண்ணுக்கு அந்தத் தனித்துவமான எண்ணை அனுப்பினால், அதுபற்றிய எல்லா விவரங்களையும் உடனே தெரிந்துகொள்ளலாம், போலியான மருந்துகளைச் சட்டென்று கண்டறியலாம்.

அடுத்த சில வாரங்களில், இம்முறை அமலுக்கு வரும். அதன்பிறகு, போலி மருந்துகளின் ஆதிக்கம் குறையும் என்று எதிர்பார்க்கலாம்!

ருவர் குண்டாக இருக்கிறார்; ஆனால், பார்ப்பதற்கு ஆரோக்கியமாகவே தெரிகிறார்; ரத்த அழுத்தத்தில் பிரச்னையில்லை; கொலஸ்ட்ரால் இல்லை; சர்க்கரை நோய் இல்லை. அப்படிப்பட்டவர்களை ‘Healthy Obese’ அதாவது, ‘ஆரோக்கியமான உடல்பருமன் கொண்டோர்’ என்பார்கள். இவர்கள் தங்களுடைய உடல் பருமனைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்று பொதுவாக நம்பப்படுகிறது.

ஆனால், அமெரிக்காவில் சுமார் 30 ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்ட ஓர் ஆய்வு, ‘Healthy Obese’ என்று உண்மையில் எதுவும் இல்லை என்று வாதிடுகிறது. ‘உடல் பருமனானவர்களுக்கு ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், சர்க்கரை போன்ற எந்தப் பிரச்னைகளும் இல்லாவிட்டாலும்கூட, அவர்களுக்குப் பக்கவாதமோ, நெஞ்சுவலியோ வருகிற வாய்ப்பு அதிகம். ஆகவே, இயன்றவரை சரியான உடல் எடையைப் பராமரிப்பது நல்லது என்கிறார்கள் இவர்கள். ஆனால், இந்த ஆய்வில் பங்கேற்ற பெரும்பான்மையானோர் வெள்ளையினப் பெண்கள். மற்ற இனத்தவர், ஆண்கள் மத்தியிலும் இந்த ஆய்வுகளை நிகழ்த்தினால்தான் இதனை உறுதிப்படுத்த இயலும்.

- என். ராஜேஷ்வர்.