ஹெல்த்
Published:Updated:

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
News
கன்சல்ட்டிங் ரூம்

ஹெல்த்

கன்சல்ட்டிங் ரூம்

என் மகனுக்கு 10 வயதாகிறது. பால், தயிர், வெண்ணெய், நெய், பனீர் என்று அவன் பால் சார்ந்த எந்தப் பொருளையும் சாப்பிடுவதில்லை. அவனுக்கு அசைவமும் பிடிக்காது. இதனால் கால்சியம் பற்றாக்குறை வந்துவிடுமோ என்று அச்சமாக இருக்கிறது. இதை ஈடுகட்ட  கால்சியம் சத்து நிறைந்த வேறு என்னென்ன உணவுப் பொருள்களை அவனுக்குக் கொடுக்கலாம் டாக்டர்?

- பி. காயத்ரி, சூளைமேடு

கன்சல்ட்டிங் ரூம்

சில குழந்தைகள் இப்படித்தான் குறிப்பிட்ட சில உணவுகளைச் சாப்பிட மாட்டார்கள். உங்கள் மகன் பால் சார்ந்த பொருள்கள் எதையுமே சாப்பிடவில்லை என்றால், நிச்சயம் கால்சியம் சத்துக்குறைபாடு வரும். பயப்படாதீர்கள். பால் பொருள்களைத் தவிர்த்து, கால்சியம் சத்து நிறைந்த பிற உணவுகள் நிறைய இருக்கின்றன. கீரை வகைகளை, உங்கள் மகனுக்கு போரடிக்காதபடி விதவிதமாகச் சமைத்துக் கொடுங்கள். பட்டாணி, புரோக்கோலி, முட்டைகோஸ் மற்றும் நீர்ச்சத்து நிரம்பிய எல்லாக் காய்கறிகளையும் சாப்பிடப் பழக்குங்கள். இவற்றோடு, உலர்ந்த பருப்புகள், உலர்ந்த பழங்கள், பருப்பு வகைகள், சிறு தானியங்கள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைத் தினமும் சாப்பிடக் கொடுங்கள். முக்கியமாக, சத்துமாவுக் கஞ்சியில் பனங்கற்கண்டு சேர்த்துக்  காய்ச்சி, தினமும் ஒரு கப் கொடுங்கள். உங்கள் மகனுக்குத் தேவையான கால்சியம் சத்து நிறைவாகக் கிடைத்துவிடும்.

ஆத்மார்த்தன், குழந்தைகள்நல மருத்துவர்

14 வயதாகும் என் மகளுக்கு, தலையில் நரைமுடிகள் எட்டிப் பார்க்கின்றன. இது எதனால் ஏற்படுகிறது? எப்படிச் சரிசெய்வது?

- கோமதி.என், செய்யாறு

கன்சல்ட்டிங் ரூம்

14 வயதில் நரைமுடி ஏற்பட்டிருக்கிறது என்றால், உங்கள் மகள் சரிவிகித உணவு சாப்பிடவில்லை என்று அர்த்தம். குறிப்பாக, இரும்புச்சத்துப் பற்றாக்குறை இருக்கக்கூடும். வயது ஏற ஏற இளநரை அதிகரிக்காமல் இருக்க, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறப் பழங்கள், காய்கறிகளைத் தினமும் சாப்பிடக் கொடுங்கள். தவிர, முருங்கைக்கீரை, முட்டை, கேழ்வரகு போன்றவற்றை அடிக்கடி உணவில் இடம்பெறச் செய்யுங்கள். மகள் கெமிக்கல் ஷாம்பூ பயன்படுத்துகிறார் என்றால் தரமான ஹெர்பல் ஷாம்பூவைப் பயன்படுத்தச் சொல்லுங்கள். 100 கிராம் ஆர்கானிக் தேங்காய் எண்ணெயில் ஒரு கேப்சூல் வைட்டமின் ஈ ஆயில் கலந்து, தலையில் தடவி வரலாம். பதின் வயதில்தான் இருக்கிறார் என்பதால், சரிவிகிதச் சத்து கிடைக்கப்பெற்றாலே இந்தப் பிரச்னை சரியாகிவிடும்.

- ஜெயந்தி, ஊட்டச்சத்து நிபுணர்

எனக்கு வயது 42. கைகளின் மேற்புறம் மட்டும் உடலுக்குப் பொருந்தாத அளவுக்குப் பருமனாக உள்ளது. இது ஏதேனும் பிரச்னையின் அறிகுறியா?

- கே.கற்பகவல்லி, திருவான்மியூர்

கன்சல்ட்டிங் ரூம்

உடல் முழுவதும் பருமனாக இருந்தால், அதை ஒபிஸிட்டி என்று கொள்ளலாம். உங்களுக்குக் கைகளின் மேற்பகுதி மட்டுமே பருமனாக இருப்பதால், அந்தப் பகுதியில் கொழுப்பு அதிகமாகச் சேர்ந்திருக்கிறது என்று அர்த்தம். இதற்குக் காரணம், அந்தப் பகுதியில் உடலுழைப்பு குறைவாக இருப்பதுதான். கைகளுக்கான உடற்பயிற்சிகளைச் செய்வதுதான் இதற்கான தீர்வு. ஆனால், இந்த உடற்பயிற்சிகளை நெட்டில் பார்த்து வீட்டிலேயே செய்யாமல், இதற்கென்று இருக்கிற ஃபிட்னெஸ் ட்ரெய்னரிடம் சென்று கற்றுக்கொள்ளுங்கள்.

- கணேசன், பொது மருத்துவர்

கன்சல்ட்டிங் ரூம்

ங்கள் கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி: கன்சல்ட்டிங் ரூம், டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.