
பட்டா ராதாகிருஷ்ணன், குடல், இரைப்பை அறுவைசிகிச்சை நிபுணர்ஹெல்த்
நெஞ்செரிச்சல், மாரடைப்பு... இரண்டும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் மாதிரி. இரண்டுக்குமான அறிகுறிகள் பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தும். மாரடைப்பு ஏற்படும்போது, சிலருக்கு ஆரம்ப அறிகுறியாக நெஞ்செரிச்சல் மட்டுமே உண்டாகலாம். `நெஞ்சுவலி வந்தால், அது மாரடைப்பாக இருக்கும் என அச்சம் கொள்வது, `நெஞ்செரிச்சல்தானே... அது தானாகச் சரியாகிவிடும்’ என்று அலட்சியமாக இருப்பது என இரண்டுமே தவறு’ என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும், `இவை இரண்டுக்குமான வேறுபாடுகள் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டியதும் அவசியம்’ என்கிறார்கள். நெஞ்செரிச்சல் ஏற்படுவது ஏன், அதை மாரடைப்பிலிருந்து எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது, அதற்கான தீர்வுகள் என்னென்ன? குடல், இரைப்பை அறுவைசிகிச்சை நிபுணர் பட்டா ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம்.
``நாம் சாப்பிடும் உணவை, இரைப்பைக்குக் கொண்டு சேர்ப்பது 25 செ.மீ நீளமுள்ள உணவுக்குழாய். ஆரம்பத்திலிருந்து கடைசிவரை சுருக்குத் தசையால் ஆன கதவு போன்ற இரண்டு தடுப்பு வால்வுகளைக் கொண்டது உணவுக்குழாய். இதன் ஆரம்பத்திலிருக்கும் வால்வு, நாம் உணவை விழுங்கும்போது, மூச்சுக்குழாய்க்குள் உணவு செல்லாமல் தடுக்கும். முடிவில் காணப்படும் வால்வு, இரைப்பையில் சுரக்கும் அமிலத்தை உணவுக்குழாய்க்குள் நுழையவிடாமல் தடுக்கும். இந்த வால்வு, உணவுக்குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையே ஓர் எல்லைக்கோடுபோலச் செயல்படும்.

எப்போது பிரச்னை?
சில நேரங்களில் இரைப்பையில் சுரக்கும் அமிலம் இந்த எல்லைக்கோட்டைக் கடந்து, உணவுக்குழாய்க்குள் நுழைந்து விடும். இந்த அமில அலைகள் அடிக்கடி மேலே எழும்பி வரும்போது, அங்குள்ள திசுப் படலத்தை அரித்துப் புண்ணாக்கிவிடும். அதனால் நெஞ்செரிச்சல் ஏற்படும். நெஞ்செரிச்சலைக் கண்டுகொள்ளாமல் விட்டால், நாளுக்கு நாள், உணவு சாப்பிடும் அளவு குறைந்து, சாப்பிடவே முடியாமலும் போகலாம். அமிலத் தன்மையுள்ள ஏப்பம் அடிக்கடி வரும். சில நேரங்களில் இருமல், ரத்த வாந்தி ஏற்படலாம். நெஞ்செரிச்சலால் ஏற்பட்டதா என்பதை உறுதிசெய்துகொள்ள ‘கேஸ்ட்ரோ எண்டோஸ்கோப்பி’ (Gastro Endoscopy) பரிசோதனை செய்ய வேண்டும்.
சிகிச்சை
நெஞ்செரிச்சல் என்பதை உறுதி செய்துவிட்டால், அமிலத்தன்மை குறைவான உணவுகளை உட்கொள்வதுடன், மருத்துவரின் ஆலோசனையின்பேரில் மாத்திரைகள் உட்கொள்ளலாம். நீண்டநாள்களாக நெஞ்செரிச்சல் இருந்தால், உணவுக்குழாயின் முடிவிலுள்ள வால்வு தளர்ந்து நெஞ்செரிச்சல் நிரந்தரப் பிரச்னையாகிவிடும். எனவே தளர்வான வால்வை லேப்ராஸ்கோபி மூலம் சரிசெய்ய வேண்டியிருக்கும்’’ என்கிறார்.

மாரடைப்பை எப்படி அடையாளம் காண்பது, யாரெல்லாம் அலட்சியப்படுத்தக் கூடாது, அதற்கான தீர்வுகள், தடுக்கும் முறைகள் என்னென்ன? இதயநோய் மருத்துவர் குகன்நாத்திடம் பேசினோம். ``இதய ரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து, ரத்தக்குழாய் குறுகுவது, இதய ரத்தக்குழாயில் ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்படுவது போன்ற காரணங்களால் இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, இதயத் திசுக்கள் உயிரிழப்பதையே மாரடைப்பு என்கிறோம். நெஞ்செரிச்சல் ஏற்படுவதால், உயிருக்கு உடனடியாக எந்த ஆபத்தும் ஏற்படப் போவதில்லை. ஆனால் மாரடைப்பை அலட்சியப்படுத்தினால் உயிரிழக்க நேரிடும். எனவே, மாரடைப்புக்கான அறிகுறிகளை அலட்சியப்படுத்தக் கூடாது.
யாரெல்லாம் அலட்சியப்படுத்தக் கூடாது?
* மரபு வழியாக இதயநோய் உள்ளவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்,
* புகை, மதுப்பழக்கம் உள்ளவர்கள்,
* ரத்த அழுத்தம், உடல் பருமன், சர்க்கரைநோய் உள்ளவர்கள்,
* ஏற்கெனவே இதயநோயால் பாதிக்கப் பட்டவர்கள்
மேற்கண்டவர்களுக்கு நெஞ்சில் எரிச்சல் ஏற்படுவது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக இசிஜி (ECG) பரிசோதனை செய்ய வேண்டும். சில நேரங்களில் ரத்தக்குழாய்களில் உள்ள அடைப்புகள் தெரியாது. அதைத் தெரிந்துகொள்ள, ட்ரெட்மில் பரிசோதனை (Treadmill Exercise Stress Test) செய்ய வேண்டும். பிரச்னை இருந்தால், ஆஞ்சியோகிராம் (Angiogram) மூலம் எந்த இடத்தில் அடைப்பு இருக்கிறது என்பதை அறிந்துகொண்டு, பிரச்னைக்கேற்ப ஆஞ்சியோபிளாஸ்டி, பைபாஸ் அறுவைசிகிச்சை, ஸ்டென்ட் பொருத்துதல் உள்ளிட்ட சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும்’’ என்கிறார் குகநாதன்.

தவிர்க்கும் வழிகள்
* உயரத்துக்கேற்ப உடல் எடையைப் பராமரிக்க வேண்டும்.
மூன்று வேளை வயிறு நிறையச் சாப்பிடுவதைவிட ஆறு வேளையாகப் பிரித்துச் சாப்பிடலாம்.
* அதிகமான மசாலா, அதிக எண்ணெய் சேர்த்த மற்றும் புளித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
* அவசரம் அவசரமாகச் சாப்பிடும்போது உணவுடன் காற்றும் சேர்ந்து இரைப்பைக்குள் நுழைந்து நெஞ்செரிச்சல் அதிகரிக்கும். ஆகவே, உணவை நன்றாக மென்று, நிதானமாக விழுங்குங்கள். சாப்பிடும்போது பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.

* சாப்பிட்ட பிறகு மூன்று மணி நேர இடைவெளிக்குப் பிறகே உறங்கச் செல்ல வேண்டும். இரவு நேரத்தில் அதிகமாகச் சாப்பிடக் கூடாது.
* மது, புகைப்பழக்கங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.
* டீ, காபி அருந்துவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். சாக்லேட், ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
* எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களால் சிலருக்கு நெஞ்செரிச்சல் ஏற்படலாம். எந்த உணவால் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது என்பதை அறிந்துகொண்டு அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
* மருந்துகளாலும் நெஞ்செரிச்சல் ஏற்படலாம். எனவே, வேறு ஏதேனும் சிகிச்சை எடுப்பவர்கள், நெஞ்செரிச்சல் பிரச்னையை மருத்துவர்களிடம் கூறி அதற்கேற்ப மருந்துகளை உட்கொள்வது நல்லது.
- ஜி.லட்சுமணன்
வேறுபாடு அறிவது எப்படி?
சில நேரங்களில் மாரடைப்பின்போது இடப்பக்க மார்பில் வலி, தோள்பட்டை மற்றும் வயிற்றுக்கு மேல் பகுதியில் வலி ஏற்படலாம். ஓய்வில் இருப்பதைவிட வேலை செய்யும்போது மாரடைப்புக்கான வலி அதிகமாகத் தெரியும். நெஞ்செரிச்சல் பெரும்பாலும் நீண்டநேரம் சாப்பிடாமல் இருந்தாலோ, சாப்பிட்ட பிறகோ வரும்.
இதய பாதிப்பு இருப்பவர்களுக்குக் குளிர்காலத்தில் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்போது மாரடைப்புக்கான அறிகுறிகள் தென்பட்டால், `சார்பிட்ரேட்’ (Sorbitrate) என்ற மாத்திரையை நாக்கின் அடியில் வைக்க வேண்டும். வலி நின்றுவிட்டால் அது இதய பாதிப்பு; வலி தொடர்ந்தால் நெஞ்செரிச்சலாக இருக்க வாய்ப்பு உள்ளது.