
நடைப்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடியாதவர்கள் செய்யவேண்டியவை..!
நடப்பது நல்லது என்பது எல்லோரும் அறிந்ததே.
ஆனாலும் அதை நடைமுறைப்படுத்துவதில்தான் சிக்கல் என்கிறீர்களா?
உங்களுக்காகவே இந்தத் தகவல்கள்...

நடைப்பயிற்சியில் ஈடுபாடு ஏற்பட
பீடோமீட்டர் (Pedometer) எனும் கருவியை அணிந்துகொண்டு நடக்கலாம்; நாம் எத்தனை அடிகள் நடந்திருக்கிறோம் என்பதை இந்தக் கருவி காண்பிக்கும். நடைப்பயிற்சி செய்வதற்காகவே, அதற்கென இருக்கும் பிரத்யேக ஷூவை வாங்கலாம்; இதை மற்ற நேரங்களில் பயன்படுத்தக் கூடாது. தினமும் நடக்கும் தூரத்தை கணக்கு வைத்துக்கொள்ள வேண்டும். இது, நம் நடைபயிற்சியின் வளர்ச்சி விகிதத்தை அறிந்துகொள்ள உதவும்.

நடைப்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடியாதவர்கள் செய்யவேண்டியவை
* அலுவலகத்தில் ஒருவரிடம் பேசவேண்டியிருக்கும் போது, அவருக்கு மெயில் அனுப்புவதை, மொபைல்போனில் பேசுவதைத் தவிர்க்கலாம்; எழுந்து சென்று அவரிடம் நேரில் பேசிவிட்டு வரலாம்.

* தொலைபேசியில் பேசும்போது நடந்துகொண்டே பேசலாம்.

* தொலைக்காட்சி ரிமோட்டை வேறு அறையில் வைக்கலாம். ஒவ்வொரு முறை சேனலை மாற்றும் போதும் எழுந்து சென்று ரிமோட்டை எடுத்து வரலாம்; இதனால் சில அடிகள் கூடுதலாக நடப்பீர்கள்.

* தொலைக்காட்சியில் ஒவ்வொருமுறை இடைவேளை வரும்போதும் எழுந்து அறைக்குள்ளேயே நடக்கலாம்.

* 30 நிமிடங்களுக்கு ஒரு முறை அலாரம் வைத்து எழுந்து சில அடிகள் நடக்கலாம்.

* லிஃப்ட், எஸ்கலேட்டர்களைத் தவிர்த்துவிட்டு முடிந்தவரைப் படிகளைப் பயன்படுத்தலாம்.

* அருகிலிருக்கும் கடைகளுக்கு நடந்து செல்வதை வழக்கப்படுத்திக் கொள்ளலாம்.
நடைப்பயிற்சியை இனிமையாக்க

* நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் யாருடனாவது நடைப்பயிற்சி செய்யலாம்.

* இசை கேட்டபடி நடக்கலாம்.

* இரவு உணவுக்குப் பிறகு அல்லது மாலை நேரத்தில் குடும்பத்தோடு ஒரு நடை போய்வரலாம். இது, குழந்தைகளுக்கும் நடக்கும் பழக்கத்தை விதைக்கும்.

* தட்பவெப்ப நிலைக்கு ஏற்பக் காற்றோட்டமான ஆடைகளை அணிய வேண்டும்.

* இயற்கை எழில் நிறைந்த இடங்களில் நடப்பது உற்சாகத்தை அதிகரிக்கும்.
உங்களுக்குத் தெரியுமா?

* தினமும் 10,000 அடிகள் நடந்தால், வாரத்துக்கு 2,000 முதல் 3,500 கலோரிகள் வரை எரிக்கலாம்.
* குறைந்த அடிகளில் தொடங்கி, படிப்படியாக 10,000 அடிகளை எட்ட வேண்டும்.
* 2,000 அடிகள் நடப்பது ஒரு மைல் நடந்ததற்குச் சமம்.
* நடக்கும்போது கைகளை வீசி நடப்பது, கலோரிகளை எரிப்பதை அதிகரிக்கச் செய்யும்.
- ர.காவ்யா