
ஹெல்த்

‘‘உங்கள் வயது என்ன” என யாராவது கேட்டால், நாம் பிறந்த வருடத்தைக் கணக்கிட்டு பதில் சொல்லிவிடலாம். ஆனால், உண்மையில் நம் உடலில் இருக்கும் உறுப்புகளின் வயதும் அதேதானா? நிச்சயம் இல்லை. நம் உடலின் உறுப்புகள் மற்றும் செல்கள் ஒவ்வொன்றிற்கும் ஆயுட்காலம் வேறுபடும் என்பதே உண்மை. அந்த வித்தியாசம் ஒரு நாளில் இருந்து பல ஆண்டுகள்வரை இருக்கலாம். உடலின் முக்கியமான சில செல்கள் மற்றும் உறுப்புகளின் வயதைப் பற்றிப் பார்க்கலாம்.

பெருமூளைப் புறணி
நமது பெருமூளையின் வெளிப்பகுதியில் உள்ள நரம்பு செல்கள், பிறக்கும்போதே காணப்படும். நம் ஞாபக சக்திக்கு இந்த செல்களே காரணம். அப்பகுதியில் ஏதேனும் காயம் ஏற்பட்டால், அங்குள்ள அனைத்து செல்களும் தங்களைப் புதுப்பித்துக் கொள்ளும்.

ஹிப்போகாம்பஸ் (மூளையின் பின் மேடு)
மூளையில் புதிய நரம்பு செல்கள் உற்பத்தியாகும் ஒரே இடம் ஹிப்போகாம்பஸ். இப்பகுதியில், ஒரேநாளில் சுமார் 1400 நரம்பு செல்கள் வரை உற்பத்தியாகின்றன. மனிதனின் நினைவுத்திறனுக்கு முக்கிய காரணம் இந்த செல்களே.

கொழுப்பு செல்கள்
நம் உடலில் உள்ள செல்களில் ஓர் ஆண்டுக்கு ஒரு முறை 10% கொழுப்பு செல்கள் உயிரிழந்து அதே அளவு புது செல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நமது கொழுப்பு செல்களுக்கு அதிக அளவில் உணவு அளிக்கப்படும்போது, அதுவே கொழுப்பாக மாறுகிறது. இதன் விளைவாக நமது உடலின் எடை அதிகரிக்கிறது.

பற்களின் எனாமல்
இது வாழ்நாளில் ஒருமுறையே உற்பத்தியாகும். நமது 12வது வயதிற்குள் பற்களைப் பாதுகாக்கும் எனாமல் உற்பத்தி செய்யப்படுகிறது.எனாமல்தான் பற்களுக்குக் கவசம் போன்றது. பற்களை அழுத்தித் தேய்த்தால் எனாமல் போய்விடும்.

குடல்களின் மேல்பரப்பு
நமது குடலின் மேல்பரப்பு, நமது உடலின் மேல் இருக்கும் சருமத்தைப் போலவே எளிதில் பாதிக்கப் படக்கூடியதாகும். எனவே இதன் ஆயுட்காலம் அதிகபட்சம் ஒரு வாரம் வரை இருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். சத்துகளை உறிஞ்சிக்கொள்ள வாரம் ஒருமுறை இந்த செல்கள் தங்களைப் புதுப்பித்துக்கொள்ளும்.
- ச.அ.ராஜ்குமார்