
தனசேகர் கேசவலு, குழந்தைகள்நல மருத்துவர்
குழந்தை பிறந்து ஒரு மாதம் வரை, அது பச்சிளம் குழந்தை. அந்தக் காலத்தை ‘நியோநேட்டல் பீரியட்’ என்போம். இந்த முதல் மாதம் முடிந்து, பாப்பா இரண்டாவது மற்றும் மூன்றாவது மாதங்களில் அடியெடுத்து வைத்தவுடன் அதன் வளர்ச்சியில் என்னென்ன மாறுதல்கள் வந்திருக்கும்? இந்த மாதங்களில் அந்தப் பிஞ்சுக்கு வர வாய்ப்புள்ள பிரச்னைகள் என்னென்ன? அப்படி வந்தால் என்ன செய்வது? எல்லாவற்றையும் இந்த இதழில் சொல்கிறேன்.
அந்த மூன்று விஷயங்கள்!
பால் குடிப்பது, சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது ஆகிய மூன்று விஷயங்களும், பிறந்த முதல் மாதத்தில் இருந்ததைப்போலவே அடுத்து வரும் மாதங்களிலும் குழந்தைக்குச் சரியாக நடக்கிறதா என்று கண்காணிக்க வேண்டும். இந்த மூன்று விஷயங்களையும் பாப்பா சமர்த்தாகச் செய்துவிட்டால், ‘அப்பாடா’ என்று ரிலாக்ஸ்டாக இருங்கள்.

சோஷியல் ஸ்மைல்!
இரண்டாம் மாதத்தில், ‘இவங்கதான் நம்ம அம்மா. இப்ப ங்ஙா கொடுக்கப்போறாங்க’ என்பதை அம்மாவின் மார்பு வாசனை, சரும வாசனை, அக்குள் வாசனை ஆகிய மூன்றையும் வைத்து, குழந்தை கண்டுபிடித்துவிடும். இரண்டாம் மாதத்தில் குழந்தையிடம் கவனிக்க வேண்டிய இன்னொரு வளர்ச்சி, சோஷியல் ஸ்மைல். ‘என் பிள்ளை என்னைப் பார்த்து சிரிச்சிடுச்சு’ என்று அம்மாக்களையும் அப்பாக்களையும் புல்லரிக்கிற வைக்கிற தருணம் இது. உண்மையில், இரண்டாவது மாதத்தில் குழந்தைகளுக்குப் பார்வை முழுவதுமாகத் தெரியாது. உருவங்களின் வடிவம் மட்டுமே தெரியும். உதாரணத்துக்கு அம்மாவின் முகம் வட்டமாக இருந்தால், ஒரு பெரிய வட்டம் அதில் கண்கள், மூக்கு போன்ற உறுப்புகள் சின்னச்சின்ன நிழல்கள் போலத் தெரியும். அது அம்மாவா என்பதுகூடக் குழந்தைக்குத் தெரியாது. அதனால், உங்கள் பிள்ளை உங்களைப் பார்த்துச் சிரிப்பதில்லை. குழந்தையைக் கொஞ்சுவதற்காக, ‘பட்டுக்குட்டி, செல்லக்குட்டி’ என்று பேசுவீர்கள் இல்லையா? அந்தக் குரலைக் கேட்டுத்தான் குழந்தை சிரிக்க ஆரம்பிக்கும்.
டூ பாத்ரூம் போகும்போது சிணுங்கினால்..?

சோஷியல் ஸ்மைல் மட்டுமல்ல, சிணுங்கல், அழுகை, காலிக் (Colic) எனப்படுகிற வயிற்றுவலி உணர்வு ஆகியவையும் இரண்டாம் மாதத்திலிருந்து குழந்தைகளுக்குத் தெரிய ஆரம்பிக்கும். இந்த மாதத்தில் குழந்தைகள் டூ பாத்ரூம் போகும்போது சிணுங்க அல்லது அழ ஆரம்பிப்பார்கள். ‘அச்சச்சோ... என் குழந்தை எவ்ளோ கஷ்டப்பட்டு ஆய் போறான்’ என்று கவலைப்பட வேண்டாம். கழிவுகளை நன்றாக வெளியேற்றுகிற உணர்வு அவர்களுக்கு மிகப் புதிது. அதனால்தான் அந்தச் சிணுங்கலும், அழுகையும்.
பால் சுரப்பை அதிகரிக்க...
குழந்தையின் ஆறு மாதங்கள் வரைக்கும் அதற்குத் தாய்ப்பாலைத் தவிர்த்து பவுடர் பால், பசும்பால் போன்றவற்றைக் கொடுக்கவே கூடாது. சிலர் கழுதைப்பால்கூட ஒன்றிரண்டு டீஸ்பூன் தருகிறார்கள். இதெல்லாம் கூடவே கூடாது. கழுதையின் ஆரோக்கியம், பாலைக் கறக்கிறவர்களின் கை சுத்தம் என்று, இதில் பிறந்த சிசுவுக்கு எதிரான பல ஆபத்துகள் இருக்கின்றன.
ஒருவேளை அம்மாவுக்குப் பால் சுரப்புக் குறைவாக இருந்தால், கசகசாவை ஊறவைத்து அரைத்துப் பாலில் கலந்து குடிக்கலாம். இதைத் தவிர நட்ஸ், சுறா மீன், பூண்டு, முருங்கைக்கீரை, பால், முளைக்கட்டிய பயறுகள் ஆகிய உணவுகளைச் சாப்பிடலாம். இயற்கையாகவே பால் சுரப்பை அதிகரிக்கும் உணவுகள் இவை.
தாய், பாலூட்டுவதற்கு முன்னால் ஒரு பெரிய டம்ளர் நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும். பால் சுரப்புக்கும், பாலூட்டுகிற அம்மாக்களுக்கு உடம்பில் இருக்கிற நீர்ச்சத்து குறைந்து சருமம் வறண்டு போகாமல் இருப்பதற்கும் இப்படித் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். குழந்தைநல மருத்துவர்களைப் பொறுத்தவரை, பிறந்த குழந்தைகளுக்கு பவுடர் பால் தருவதை நாங்கள் முழுக்க முழுக்க எதிர்க்கிறோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக சில அம்மாக்களுக்குத் தாய்ப்பாலே சுரக்கவில்லை என்றாலோ அல்லது தாயின் உடல் நலம் காரணமாகக் குழந்தைக்குப் பாலூட்டக்கூடாது என்று மருத்துவர் சொல்லியிருந்தாலோ, பசும்பால் அல்லது புட்டிப்பால் கொடுக்கலாம். இதைக் காலத்தின் கட்டாயம் என்றுதான் பார்க்க வேண்டுமே ஒழிய, அம்மாக்களைக் குற்றம் சொல்லக்கூடாது.

தலை துவளாமல் இருக்க வேண்டும்!
தலை கன்ட்ரோலாக இருக்கிறதா? இதுவும் இரண்டாவது மாதத்தில் செக் செய்ய வேண்டிய விஷயம்தான். ஆனால், நீங்கள் இதைச் செய்யக்கூடாது. குழந்தைநல மருத்துவர்கள்தான் செய்ய வேண்டும். குழந்தையின் இரண்டு கைகளையும் பிடித்துத் தூக்கிக் குழந்தையின் தலை துவளாமல் கன்ட்ரோலாக நிற்கிறதா என்று பார்ப்பார்கள். குழந்தையின் மூளை வளர்ச்சி சரியாக இல்லையென்றாலும், அல்லது மூளை வளர்ச்சி மெதுவாக இருக்கிறது என்றாலும், பாப்பாவின் தலை சரியாக நிற்காது. அதற்குத்தான் இந்த செக்.
திடீர் சத்தத்துக்கு ரியாக்ஷன் காட்ட வேண்டும்!
தெருவில் லாரி கடக்கும் சத்தம், வீட்டு வாசலில் நிற்கிற டூ வீலரின் ஹாரன் சத்தம், சில நேரங்களில் திடீரென எகிறுகிற தொலைக்காட்சியின் சத்தம் என திடீரென அதிகமான ஒலியைக் குழந்தைகள் கேட்கும்போது, அவர்களின் கைகால்கள் தூக்கிப்போடும். இவ்வளவு ஏன், அப்பாவின் ‘ஹச்’ என்ற தும்மலுக்குக்கூடக் குட்டிப் பாப்பாக்களின் உடம்பு தூக்கிவாரிப் போடும். இது நார்மலான விஷயம்; இரண்டாவது மாதத்தில் நடக்க வேண்டிய விஷயமும்கூட. இதை ‘Moro Reflex’ என்று சொல்வோம். சத்தங்களுக்குக் குழந்தை எந்த ரியாக்ஷனும் காட்டாமல் இருந்தால், நிச்சயம் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
மூன்றாவது மாதம்!

இரண்டாவது மாதத்தில் சோஷியல் ஸ்மைல் கொடுத்த பிள்ளைகள், சத்தத்துக்கு உடம்பு தூக்கிவாரிப் போட்ட குழந்தைகள், தலை கன்ட்ரோலாக இருக்கிற குழந்தைகள், மூன்றாவது மாதத்தில் அதைவிட இன்னும் சிறப்பாகத்தான் வளர்ச்சியடைவார்கள். ஸோ, உங்களுடைய வேலை, இரண்டாம் மாதத்தில் குழந்தைகளிடம் காணப்பட்ட வளர்ச்சிகள் எல்லாம் மூன்றாம் மாதத்திலும் தொடர்கின்றனவா என்று கவனிப்பது.
கைகள், கால்களை நன்றாக அசைக்கிறார்களா?
இந்த மாதத்தில் குழந்தைகள் கைகால்களை உற்சாகமாக ஆட்டத் தொடங்குவார்கள். அப்படிச் செய்யும்போது, இரண்டு கைகளும், இரண்டு கால்களும் நன்றாக அசைகின்றனவா என்று பார்க்கவும். ஒரு கையோ அல்லது ஒரு காலோ சரியாக அசையவில்லை என்றால், உடனே டாக்டரைப் பார்க்க வேண்டும். இந்த மாதத்தில், பாப்பாவின் உடலில் அசாதாரணமான அளவில் ஒரு மச்சமோ அல்லது ஒரு மருவோ புதிதாகத் தோன்றினால், அதன் வளர்ச்சிமீது கவனம் தேவை. ஒன்றிரண்டு மாதங்களில் அவை சட்டென்று பெரிதானால் மருத்துவரிடம் காட்டுவதே நல்லது.

குழந்தையின் உள்ளங்கை வியர்க்கிறதா?
குழந்தையின் அழுகை குறைந்தாலோ, பால் குடிப்பது குறைந்தாலோ, சீறுநீர் போகும் அளவு குறைந்தாலோ கவனிக்க வேண்டும். பால் குடிக்கும்போது மூச்சுத்திணறினாலோ அல்லது பால் குடிக்கும்போது வியர்த்தாலோ அல்லது இளைப்பு ஏற்பட்டாலோ குழந்தைக்கு இதயத்தில் ஏதாவது பிரச்னை இருக்கலாம். இதேபோல், உள்ளங்கையில் அல்லது உள்ளங்காலில் அதிகமாக வியர்வை சுரந்தாலும் இதய நோய்க்கான அறிகுறியாக அது இருக்கலாம். சில குழந்தைகள் பால் தொடர்ந்து குடிக்க முடியாமல் கஷ்டப்படும் அல்லது இடைவெளி விட்டு விட்டு அம்மாவிடம் பால் குடிக்கும். இப்படியெல்லாம் இருந்தால் தாமதிக்காமல் குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும்.
4 மற்றும் 5-ம் மாதங்களில் உங்கள் குட்டிப்பாப்பா என்னென்ன செய்யும்? அம்மாக்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? அடுத்த இதழில் விளக்கமாகச் சொல்கிறேன்.
(வளர்த்தெடுப்போம்!)
- ஆ.சாந்தி கணேஷ்
பதற்றம் வேண்டாம்!
இரண்டாவது மாதத்தில் சோஷியல் ஸ்மைல் கொடுக்க வேண்டும் என்று டாக்டர் சொல்லிவிட்டார் என்று, இரண்டாம் மாதம் ஆரம்பித்த முதல் நாளில் இருந்தே குழந்தையின் முகத்தில் சிரிப்பைத் தேடி, இதையே ஒரு டென்ஷனாக்கிக் கொள்ளாதீர்கள். ஒரு குழந்தை முதல் நாள் சிரிக்கிறது என்றால், இன்னொரு குழந்தை பத்தாவது நாள் சோஷியல் ஸ்மைல் கொடுக்கலாம். இதையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இதேபோல, பால் குடிக்கும்போது கரன்ட் கட்டாகி அதனால் குழந்தைக்கு வியர்ப்பதை எல்லாம் இதயக்கோளாறோ என்று மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.