
டி.நாராயண ரெட்டி, செக்ஸாலஜிஸ்ட்
கலவிக்குக் கற்பனை அவசியம். கற்பனை, வாழ்க்கையை சுவாரஸ்யப்படுத்தும். இளைஞர் ஒருவர் என்னைப் பார்க்க வந்தார். திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. அவருக்குள் ஒரு குற்றஉணர்வு உறுத்திக்கொண்டிருப்பதாகக் கூறியவர், அதை என்னிடம் மிக வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டார். `என் மனைவி மிகவும் அழகாக இருப்பாள். ஆனால், நான் அவளுடன் ஒவ்வொருமுறை உறவுகொள்ளும்போதும் வேறு பெண்களைக் கற்பனை செய்துகொள்கிறேன். இது எனக்கு மிகவும் நெருடலாக இருக்கிறது டாக்டர். இதை மாற்ற நல்ல வழி சொல்லுங்கள்’ என்று கேட்டார்.

உலகில் பெரும்பாலானவர்களுக்கு இவரைப்போல யாரையாவது கற்பனை செய்துகொண்டு உறவில் ஈடுபடும் பழக்கம் இருக்கிறது. அது சரியா, தவறா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டியது என் கடமை. `கற்பனை’ என்பது மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்று. தங்களால் செய்யமுடியாத காரியங்களை, கற்பனையில் செய்து திருப்தி அடைவோம். கற்பனைத் திறன் இல்லையென்றால், மனிதன் பெரிய ஏமாற்றத்துக்கு ஆளாகிவிடுவான். பல்வேறு சந்தர்ப்பங்களில் கற்பனை தேவைதான். திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்களில், நாயகனும் நாயகியும் ஒருவரை ஒருவர் கற்பனை செய்தபடி நடனமாடுவதுபோன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். `ஐ’ படத்தில் வரும் பாடலில், நாயகன், தான் பார்க்கும் பொருள்கள் அனைத்தையும் தன் காதலியாகக் கற்பனை செய்வதுபோன்ற காட்சிகள் இடம்பெறும். ஆக, கற்பனை என்பது உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒன்றே.
அந்தவகையில், `செக்ஸ் கற்பனை’ என்பதும் உலகமக்கள் அனைவருக்கும் இருக்கும் சாதாரண உளவியலே. இந்தக் கற்பனை செக்ஸ் குறித்து இங்கிலாந்தைச் சேர்ந்த உளவியல் ஆராய்ச்சியாளர் ப்ரெட் கார் (Brett Khar) என்பவர் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்துள்ளார். `கற்பனை என்பது சிறுவயதிலிருந்தே அனைவருக்கும் இருக்கும். பருவ வயதை அடைந்ததும், செக்ஸ் விஷயத்தில் கற்பனை அதிகரித்துவிடுகிறது’ என்கிறார் அவர்.

1994-ம் ஆண்டு அமெரிக்காவில் `செக்ஸ் இன் அமெரிக்கா’ (Sex in America) என்ற ஆராய்ச்சிப் புத்தகம் வெளியானது. அதில், `54 சதவிகித ஆண்கள், 19 சதவிகிதப் பெண்கள் தினந்தோறும் செக்ஸ் பற்றியே கற்பனை செய்கிறார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வெர்மான்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியல் பேராசிரியர் ஹெரால்ட் லெய்டன்பெர்க் (Harold Leitenberg) என்பவர் இதுகுறித்து ஆய்வு செய்தார். அந்த ஆய்வில், `85 சதவிகித ஆண், பெண் இருபாலரும், செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது கற்பனை செய்துகொள்கிறார்கள். அப்படி, உறவின்போது கற்பனை செய்துகொள்கிறவர்களின் செக்ஸ் வாழ்க்கை, மற்றவர்களின் வாழ்க்கையைவிடச் சிறப்பாக இருக்கும். இதில் ஆண்களின் கற்பனைக்கும் பெண்களின் கற்பனைக்கும் கொஞ்சம் வேறுபாடுகள் இருக்கும். பெண்கள், காதலனுடன் ரொமான்ஸ் செய்வது, ஏற்கெனவே தெரிந்தவர்களுடன் உறவு கொள்வது போன்று கற்பனை செய்வார்கள். ஆனால், ஆண்களோ பெண்களின் செக்ஸ் அங்கங்கள், வெவ்வேறு பெண்களுடன் செக்ஸில் ஈடுபடுவது, ஓரல் செக்ஸ் போன்று விதம்விதமாகக் கற்பனை செய்துகொள்வார்கள்’ என்று கூறியுள்ளார்.

`செக்ஸ் கற்பனை’ என்பது தாம்பத்ய வாழ்க்கைக்கு உதவக்கூடியதுதான். செக்ஸ் உறவில் சலிப்பு ஏற்படும்போது அந்தக் `கற்பனை’ உதவும். உறவின்போது கவனச்சிதைவு ஏற்பட்டு, ஆண்களுக்கு விரைப்புத்தன்மை குறையும்போது இது கைகொடுக்கும். இது பெண்களுக்கும் பொருந்தும். அதனால்தான், இந்த செக்ஸ் கற்பனையை உளவியல் சார்ந்த செக்ஸ் பிரச்னைகளுக்கு ஒரு ‘தெரபெடிக் கருவி’யாக நாங்கள் பயன்படுத்துகிறோம். திருமணமாகி 20 ஆண்டுகள் ஆன பிறகு, உறவு கொள்வதில் ஏற்படும் சலிப்பைச் சரிசெய்ய, இந்த முறையைக் கையாள்கிறோம்.
நம் செயல்பாடுகள் முழுவதும் கற்பனையைச் சார்ந்தே இருக்கும்போதுதான் இது பிரச்னையாக உருவெடுக்கும். இப்படி இருப்பவர்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் ஆபத்தானவர்கள்.
- மு.இளவரசன்