
போப்பு, மருத்துவ எழுத்தாளர்குடும்பம்
இரண்டு மாம்பழம், இரண்டு டம்ளர் பால்... இவற்றை மட்டுமே தன்னுடைய ஒரு முழுநாளுக்கான உணவாக உட்கொள்பவர்கள் பலரை எனக்குத் தெரியும். அப்படி உட்கொள்பவர்களால் அன்று முழுவதும் மிகுந்த சுறுசுறுப்புடன் இருக்க முடிவதையும் கவனித்திருக்கிறேன்.
நார்த்தன்மை மிகுந்த மாம்பழத்தில் காரச்சத்து நிறைந்திருக்கிறது. உயிர்ச் சத்துகளும், பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு போன்ற நுண் சத்துகளும் கணிசமாக இருப்பதால், நாம் வெறும் மாம்பழத்தை மட்டுமே ஒரு நாள் அல்லது ஒரு நேர உணவாக உட்கொண்டால், அது தலைமுடி முதல் பாத நகங்கள் வரை அனைத்தையும் செழுமையாக வைத்திருக்கும். இன்றைய வாழ்க்கை முறையாலும், இங்கு நிலவும் புறச்சூழலாலும் உடல் மிக எளிதில் வெப்பமடைந்துவிடுகிறது. உடலில் வெப்பம் அதிகரிக்கும்போதெல்லாம் தலைமுடி துவண்டு போவதையும், சருமம் வறண்டு போவதையும் நாம் உணரலாம்.

உடலில் இயல்புக்கு மாறாக வெப்பம் அதிகரித்திருக்கும் நேரத்தில் செரிக்கக் கடினமான புளி, உப்பு, காரம், மாவுத்தன்மை மிகுந்த உணவு வகைகளைத் தவிர்த்துவிட்டு, முதன்மை உணவாக நாம் வாழும் சூழலில் விளையும் அந்தந்த சீஸனுக்குரிய பழங்களைச் சாப்பிட வேண்டும். அப்படி உட்கொள்ளும்போது, உடல் வேகமாக இயல்புநிலைக்குத் திரும்பிவிடும். அப்படிப் பார்த்தால் இந்த சீஸனுக்குரிய பழங்கள் மா, பலா, கொய்யா. எல்லாக் காலங்களிலும் கிடைப்பது வாழை. இந்தப் பகுதியின் நாயகனான மாம்பழம் குறித்துப் பார்ப்போம்.

தமிழகத்தில் விளையும் மாம்பழ வகைகள் சுமார் அறுபது. தேமதுரத்திலிருந்து கடும் புளிப்பு வரை, இளம் புளிப்பு கலந்த இனிப்பு என்று மாறுபட்ட சுவைகளில் கிடைக்கிறது. நிறத்திலும், வெளிர் மஞ்சளிலிருந்து அடர் ஆரஞ்சு நிறம் வரை பல்வேறு நிறங்களிலும் கிடைக்கிறது. அதனை எடுக்கும் வரை வேறெந்த வேலையிலும் கவனம் போகாத அளவுக்குப் பல்லிடுக்கில் சிக்கிக்கொள்கிற சன்னமும் உறுதியும் மிகுந்த நார்த்தன்மையில் தொடங்கி, வாயில் வைத்த நொடியில் சோன்பப்டியாகக் கரையும் தன்மை வரையில் பல்வேறு சதைப்பண்பிலும் விளைகிறது. ஒரு பருப்பு அளவுக்கு ஓட்டை போட்டால் போதும், உள்ளிருக்கும் சதையைச் சாறாக்கி உறிஞ்சிவிடலாம்... அப்படிச் சில வகைகள். சில, `கல் மாங்கா’ என்ற பெயரில் இறுகல் தன்மையோடு இருக்கும்.
இத்தனை குணங்கள் வேறெந்தப் பழங்களுக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. பழத்தின் கட்டமைவும், நிறமும், நார்த்தன்மையும் வேறுபடும்போது சுவை நிச்சயம் வேறுபடும். சுவையின் வேறுபாட்டுக்கு ஏற்ப, உடலில் அதன் பலன்களும் வேறுபடும். அவரவர் உண்ணும் பழங்களை விலையின் வழியாகவும், அதற்கு வழங்கப்பட்டிருக்கும் சமூக மதிப்பின் மூலமாகவும் தேர்ந்தெடுக்கக் கூடாது. மன விருப்பத்துடன் தேர்வுசெய்ய வேண்டும். அமிலத்தன்மை மிகுந்த உடலமைப்பைக் கொண்டவர்கள், அதைச் சமன் செய்யும்விதமாக, அமிலத்துக்கு எதிராகக் காரத்தன்மை கொண்ட, நார்ப்பண்புடைய பழங்களைத் தேர்வுசெய்வது உடலியல்பு. உயிராற்றல் மிகுந்தவர்கள், சுறுசுறுப்பானவர்கள், குழந்தைகள், நார்த்தன்மை சிறிதும் இல்லாத சதைப்பற்றான, மாவு போன்ற எளிதில் கரையக்கூடிய தீஞ்சுவைப் பழ வகையைத் தேர்வுசெய்வதும் உடலின் இயல்பு. உடல், தன்னுணர்வின் வழியாகச் செய்துகொள்ளும் உணவுத் தேர்வு அனைத்துமே உடலுக்கு ஊறு விளைக்காததாக இருக்கும். குறிப்பாக, விரும்பி உண்கிற பழ வகைகள் அனைத்தும் உடலுக்கு நன்மை செய்யக்கூடியவையே. இன்றும் மரங்களில் விளையும் பழங்கள் பலவும் அதன் ஆதிப் பண்பை இழக்காமல் இருக்கின்றன.

மனிதன் விளைவிக்கும் கிழங்குகள், காய்கறிகள், செடி, கொடிகளில் விளையும் பழங்களில் பெரும்பாலானவை வணிக நோக்கத்துக்காக அவற்றின் மூலப் பண்பு சிதைக்கப்பட்டு, சக்கையாகி வருகின்றன. மாம்பழத்தைப் பொறுத்தவரை, இயற்கையான ஒட்டுமுறையில் நிறையப் புதிய வகைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றனவே தவிர, இன்னமும் அதன் மூலப் பண்பு சிதைக்கப்படவில்லை. எனவே, மற்றெந்த பழங்களையும்விட மாம்பழம், மனித உடலுக்கு அதிக அளவில் நன்மையே தரும்.
ஆதி மனிதனின் முதல் உணவு, பழங்களே. பழங்களைப் பறிக்க மரத்தை நோக்கி நிமிர்ந்தபோதுதான், தரையை நோக்கிக் குனிந்திருந்த தலை, கழுத்தின் மீது நிற்கத் தொடங்கியது. மரத்தில் தொங்கும் பழத்தைத் தரையில் இருந்து எக்கிப் பறிக்க முயற்சி செய்தபோதுதான், குரங்கின் முன்னங்கால்கள் மனிதக் கைகளாகப் பரிணாமம் பெற்றன. மரக் கிளைகளையும், கோலையும் பற்றும் முயற்சியில்தான், குவிந்திருந்த விரல்கள் விரியத் தொடங்கின.
பழத்தை நோக்கியும், விலங்குகளை நோக்கியும் எறியக் கல்லைப் பிடித்தபோதுதான், அவனது ஐந்தாம் விரலான கட்டை விரல் முளைத்து வந்தது. குரங்கை மனிதனாக்கும் பரிணாமத்தில் பழத்துக்கும் முக்கியப் பங்கு உண்டு. கனி அவனுக்கு உயிராற்றலை வழங்கியது. எந்தத் தோட்டத்துக் கனியும், எந்த மரத்துக் கனியும் அவனுக்கு விலக்கப்படவே இல்லை. மனிதனுக்கும் பழங்களுக்குமான ஆதிபந்தம் பிரிக்க முடியாதது. உடலின் சமநிலை கெட்டிருக்கும்போது, அதாவது நோயுற்றிருக்கும்போது, சமைத்த உணவுகளைத் தவிர்த்துவிட்டு, வெறும் பழங்களை மட்டுமே உணவாக உட்கொண்டால், மனித உடல் அதன் மூலப் பண்புக்கு அதாவது, நோயற்ற தன்மைக்குத் திரும்பும் என்பது இயற்கை இயலாளர்களின் முடிவு. உலகமெங்கும் உள்ள இயற்கை மருத்துவம் மனிதனுக்கு முதன்மை உணவாகப் பழங்களையே பரிந்துரைக்கிறது.
இயற்கையிலிருந்தும் நிலத்திலிருந்தும் மனிதன் எவ்வளவுக்கு எவ்வளவு அந்நியப்படுகிறானோ, அந்தளவுக்கு உடலின் இயல்பு கெட்டு, சமநிலை குலையும். உடலின் சமநிலைக் குலைவே நோய். ஆக, ஒருவன் நோயுற்றிருக்கும்போது இயற்கைக்கோ, நிலத்துக்கோ திரும்ப இயலாவிட்டாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் உணவு அளவிலாவது ஓரிரு நாள்களுக்கு முழுதும் இயற்கைப்பண்பு சிதையாத பழங்களை உட்கொண்டால் உடல் விரைவாகத் தனது ஆதிநிலைக்குத் திரும்பும்.

பழங்களை முழு உணவாக ஏற்றுக் கொள்ளும்போது உடலின் கழிவுகள் வேகமாக நீங்கும். தேங்கி, நாள்பட்ட மலக்கழிவு வெவ்வேறு நிறங்களில் வெளியேறுவதை இரண்டாம் நாளே காண முடியும். குடல்வால் (Appendix), பெருங்குடல் பகுதி சுத்தமடைவதோடு சிறுகுடல், வயிற்றுப் பகுதிகளும் சுத்தமாவதால், செரிமானத்திறன் அதிகரிக்கும். பிற பழங்களைவிட, மாம்பழத்தின் சுவை பரவலாகப் பிடித்த ஒன்றாக இருப்பதால், உடலைத் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைக்கு மாம்பழம் மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
மாம்பழத்தை அப்படியே உண்பது சலிப்பூட்டுமென்றால், அதைச் சதுரங்களாக அரிந்து, அவற்றின் மீது அரைத்த பனித் துகளைத் தூவி, அதன் மீது பட்டும்படாமல் தேன் ஊற்றி, முள் கரண்டியால் எடுத்துச் சுவைக்கலாம்.மாம்பழத்தைச் சதுரங்களாக அரிந்து மேலோட்டமாக உப்பு, மிளகுத் தூள் தூவி, சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்திருந்து எடுத்து உண்டால், மாறுபட்ட சுவை கிடைக்கும். பழவுணவு உட்கொள்ளும் நாளில் காரசாரமாக உணவு உண்ணாத ஏக்கத்தைத் தணிக்கும்.
அரை மூடித் தேங்காயைப் பால் எடுத்து, அந்தப் பாலில் தோல் நீக்கிய மாம்பழச் சதையைப் போட்டு அரைத்துப் பருகினால், மாம்பழ மில்க் ஷேக் உண்ட நிறைவு கிடைக்கும். உடன் முந்திரி பருப்புத் துருவலும், பொடியாக அரிந்த திராட்சை அல்லது பேரீச்சம்பழமும் சேர்த்துக்கொண்டால் நீண்ட நேரத்துக்கு நன்றாகப் பசி தாங்கும். பயணங்களின்போது பாதுகாப்பற்ற வழி உணவைத் தவிர்க்க, இந்த மாம்பழ மில்க் ஷேக் மிகவும் உதவியாக இருக்கும். பலருக்குப் பயணத்தின்போது உடல் சூடேறி, மறுநாள் மலச்சிக்கல் ஏற்படுவது இயல்பு. அவர்கள் மாம்பழ மில்க் ஷேக் பருகிவிட்டு பயணம் மேற்கொண்டால், மறுநாள் காலைப் போக்கு கியாரன்டி. உடலும் கலகலப்பாக இருக்கும்.

முக்கால் தரம் பழுத்த, சற்று கெட்டியான இனிப்பும் புளிப்பும்கூடிய மாம்பழங்களைச் சீரான சதுரங்களாக அரிந்துகொள்ளவேண்டும். நபர்களுக்கு ஏற்ப, பச்சரிசி அளந்து எடுத்துக் கழுவி வைத்துக்கொள்ள வேண்டும். இன்னொரு பக்கம் மூன்று மூடித் தேங்காயைப் பால் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். குக்கரில் சிறிதளவு நெய்விட்டு, பட்டை, கிராம்பு தாளிப்பு போட்டு, அரிசிக்கு உரிய விகிதத்தில் தண்ணீரும் தேங்காய்ப்பாலும் ஊற்றி, அதில் அரிசியைப் போட வேண்டும். ஒரு பெரிய வெங்காயத்தைப் பெரிதாக நறுக்கி, அரிசியின் மீது போட்டு மூடி போட்டு, விசிலைப் போட வேண்டும். இரண்டு விசில் அடித்த பின்னர் அடுப்பிலிருந்து இறக்கி, ஆவி தணிந்த பின், மூடி நீக்கிச் சோற்றின்மீது நறுக்கிய மாம்பழத்தைப் போட்டு, லேசாகக் கிளறி, கொத்தமல்லித் தழையைத் தூவி, ஒரு கிண்டு கிண்டிப் பரிமாறலாம்.
இந்த மாம்பழச் சாதம் வழக்கத்துக்கு மாறான சுவையில் இருக்கும்; வயிறும் இதமாக இருக்கும். வயிற்று உப்பல், வாயு, அமிலத் தொல்லை உள்ளவர்களுக்கு மாம்பழச் சாதம் அரு மருந்து. உடலுக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்ததுபோல, மூட்டுகள் இலகுவாக இயங்கும்.
மாம்பழ, மாங்காய் உணவுகள் சிலவற்றைத் தொடர்ந்து பார்ப்போம்..!
நிலாச்சோறு ஊட்டுவோம்...
படங்கள்: மதன்சுந்தர்