
சீஜா, அரசு மகப்பேறு மருத்துவர்ஹெல்த்
பெண்கள் கர்ப்பம் தரித்த முதல் நாளில் இருந்தே கருவின் வளர்ச்சிக்குத் தேவையான விஷயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுவார்கள். அதன் ஓர் அங்கமாகச் சராசரியாகத் தாங்கள் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவைவிட அதிகமாகச் சாப்பிட ஆரம்பிப்பவர்கள் பலர். இதனால் சிலர் மகப்பேறு காலத்தில் அதிக உடல் எடையுடன் இருப்பார்கள். ஆனால், அது ஆரோக்கியக் காரணி அல்ல. கர்ப்ப காலத்தில் பெண்கள் குறைந்தபட்சம் எத்தனை கிலோ எடை இருக்க வேண்டும்? அதிகபட்சம் எத்தனை கிலோ எடை அதிகரிக்கலாம்? விளக்கங்களைத் தருகிறார், மகப்பேறு மருத்துவர் சீஜா.
எடை கூடுவதும் தவறு... குறைவதும் தவறு!
ஒரு பெண் கருவுறும் தருணத்திலும், கர்ப்ப காலத்திலும் சரியான எடையில் இருக்க வேண்டியது அவசியம். கருவுறும்போது, பெண்ணின் சராசரி எடை 50 கிலோ இருக்க வேண்டும். இந்த அளவுகோல் அவரவரின் உயரத்தைப் பொறுத்துச் சற்று மாறுபடலாம். அதுபோல, கருவுற்ற நாள் முதல் கர்ப்ப காலம் வரையிலான ஒன்பது மாதங்களில், கர்ப்பிணிப் பெண் 11 கிலோ வரை எடை அதிகரிப்பது ஆரோக்கியமான அளவுகோல்.

தாய்மை... பி.எம்.ஐ
* ஒரு பெண் தன் உயரத்துக்கு ஏற்ப, கர்ப்ப காலத்தில் எவ்வளவு எடை அதிகரிக்கலாம் என்பதை அவரின் பி.எம்.ஐ (BMI-Body Mass Index) மூலம் தெரிந்துகொள்ளலாம்.
* பி.எம்.ஐ = எடை/(உயரம்)2
ஒருவரின் எடையை முதலில் மீட்டருக்கு மாற்றிக்கொள்ள வேண்டும். உதாரணமாக, 150 செ.மீ எனில் 1.50 மீட்டர். அவரின் எடை 60 கிலோ என்று வைத்துக்கொள்வோம். எனில்...
பி.எம்.ஐ = 60/ (1.50x1.50)

அவரது பி.எம்.ஐ = 26.6
* பி.எம்.ஐ 29-க்கு மேல் இருக்கும் கர்ப்பிணிகள் 7 கிலோ எடை கூடினால் போதுமானது.
* பி.எம்.ஐ 25 முதல் 28 வரை இருக்கும் கர்ப்பிணிகள் 8 முதல் 10 கிலோ எடை கூடினால் போதுமானது.
* பி.எம்.ஐ 20 முதல் 24 வரை இருக்கும் கர்ப்பிணிகள் 11 முதல் 12 கிலோ வரை எடை கூடலாம்.
* பி.எம்.ஐ 19-க்கும் கீழ் இருக்கும் கர்ப்பிணிகள் 18 கிலோ வரை எடை அதிகரிக்கலாம்.
ஒவ்வொரு மாதமும் அதிகரிக்கும்
கருவுற்ற முதல் மூன்று மாதங்களுக்கு வாந்தி, குமட்டல், பசியின்மை போன்றவை இருக்கும் என்பதால் சாப்பாட்டின் மீது ஆர்வம் இருக்காது, சரியாகச் சாப்பிட முடியாது. எனவே, முதல் ட்ரைமெஸ்டரில் கர்ப்பிணிகளுக்கு எடையானது மிகவும் குறைவாகவே அதிகரிக்கும். நான்காவது மாதத்தில் இந்த அறிகுறிகள் நின்றுவிடும் என்பதால், ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் ஒவ்வொரு மாதமும் கருவுற்ற பெண்ணின் எடையும் குழந்தையின் எடையும் சராசரியாக அதிகரிக்கத் தொடங்கும்.

கர்ப்பிணியின் உடல் எடையில் குழந்தையின் எடை, கருப்பையில் இருக்கும் நீர், நஞ்சுக்கொடி உள்ளிட்டவை கணிசமான பங்களிக்கும் என்பதால், மகப்பேறு காலத்துக்குப் பின், கர்ப்ப காலத்தில் உயர்ந்த எடையில் சரிபாதி தானாகக் குறைந்துவிடும். சமச்சீர் உணவு, உடற்பயிற்சிகளிலும் கவனம் வேண்டும்.
முதல் மூன்று மாதங்கள்!
மார்னிங் சிக்னெஸ் இருக்கும் என்பதால், அதையும் தாண்டி இந்த மாதங்களில் கர்ப்பிணி ஒரு கிலோ அதிகரித்தாலும் ஆரோக்கியமானதே.
4 முதல் 6-வது மாதம் வரை!
கருவின் உடல் உறுப்புகள், எலும்புகள் வளர்ச்சி பெறும் காலம் என்பதால் இந்தக் காலகட்டத்தில் கர்ப்பிணி தன் எடையில் இருந்து ஐந்து கிலோ வரை எடை அதிகரிக்க வேண்டியது அவசியம்.
7 முதல் 9 மாதம் வரை!
இந்தக் கடைசி ட்ரைமெஸ்டரில் தங்களின் முதல் மாத எடையில் இருந்து 10 கிலோ வரை எடை அதிகரிக்கலாம்.
10-வது மாதம்!
எந்த நேரத்திலும் குழந்தை பிறக்கலாம் என்பதால் அதிகப்படியான எடை அதிகரிப்பு இருக்காது.
இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை!
கர்ப்ப காலத்தில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை கர்ப்பிணி உடல் எடையைப் பரிசோதித்து, ஆரோக்கியமான அளவில் எடை அதிகரிக்கிறதா என்று கவனித்துவர வேண்டும். அதிகப்படியான உடல் எடை அதிகரிப்பால் சில நேரங்களில் வலிப்பு நோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்; அவை குழந்தையையும் பாதிக்கலாம். எனவே கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள், புரதம் அதிகம் இருக்கும் நெய், பால், பாலாடைக்கட்டி, அசைவ உணவுகள், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. அதேபோல, சில கர்ப்பிணிகளுக்குத் திடீரென்று உடல் எடைக் குறைவும் ஏற்படும். அதுவும் கவனம் கொடுக்க வேண்டிய விஷயமே. அப்படியிருக்கும் பட்சத்தில் கருவின் வளர்ச்சி சரியாக உள்ளதா என்பதைப் பரிசோதித்துப் பார்த்துக்கொள்வது நல்லது.
- சு.சூர்யா கோமதி