ஹெல்த்
Published:Updated:

தலையில் அடிபட்டால் மொழி மறந்து போகலாம்

தலையில் அடிபட்டால் மொழி மறந்து போகலாம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையில் அடிபட்டால் மொழி மறந்து போகலாம்

பாலமுருகன், நரம்பியல் மருத்துவர்ஹெல்த்

வாகன விபத்து, எதிர்பாராத சூழலில் கீழே விழுவது, விளையாடும்போது மோதுவது போன்ற பல காரணங்களால் தலையில் அடிபடலாம். அப்போது மூளையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. அப்படி மூளையில் ஏற்படும் பாதிப்புக்கு ‘மூளை=க்காயம்’ (Traumatic Brain Injury) என்று பெயர்.  தலையில் அடிபடும்போது மூளையில் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்? உடல்நிலையில் என்ன மாற்றங்கள் ஏற்படும்? விளக்குகிறார், நரம்பியல் மருத்துவர் பாலமுருகன்.

``தலையில் பெரிய அளவில் அடிபட்டால் மூளையில் சில மாறுதல்கள் ஏற்படும். இதில் முக்கியமாக மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைப்பட வாய்ப்புண்டு. இதயத்திலிருந்து அனுப்பப்படும் ரத்தத்தில் கிட்டத்தட்ட 25 சதவிகிதம் மூளைக்கே செல்கிறது. மீதமிருக்கும் ரத்தமே மற்ற உறுப்புகளுக்குச் செல்கிறது. தலையில் அடிபட்டால் ரத்த ஓட்டம் தடைப்பட்டு, மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் போகலாம். அதனால் மயக்கம் ஏற்படும். மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் தடைப்பட்டால் சில ரசாயன மாற்றங்களும் நிகழும்.

தலையில் அடிபட்டால் மொழி மறந்து போகலாம்

மூளை நரம்புகள், நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் (Neurotransmitters) எனப்படும் ரசாயனங்களின் மூலமே ஒன்றையொன்று தொடர்புகொள்ளும். நம் மூளையில் பல நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் இருக்கின்றன.

இந்த நியூரோட்ரான்ஸ்மிட்டர்களில் ஏற்படும் மாறுதலால் மூளை பாதிக்கப்படும். தலையில் அடிபட்டு மீண்டு வருபவர்களுக்கும் மூளை நரம்புகளிலும், ரத்த ஓட்டத்திலும் மாறுதல்கள் ஏற்படலாம். நியூரோட்ரான்ஸ்மிட்டர்களிலும் பாதிப்பு ஏற்படலாம்.

தலையில் அடிபடுவதால் பொதுவாக மூன்று பாதிப்புகள் உண்டாகலாம்.

* மன அழுத்தம்

* பயம்

* நடத்தையில் மாறுதல்

தலையில் அடிபட்டவர்களுக்கு ஒரு வகையான மன அழுத்தம் ஏற்படும். தலைவலி, அதீத சோர்வு ஏற்படலாம். இதுபோன்ற அறிகுறிகளைக் கவனித்து, சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், இவர்கள் எதைப் பார்த்தாலும் பயப்படுவார்கள். ஒரு சிறிய அசைவுகூட இவர்களை பயமுறுத்திவிடும். முன் தலையில் அதாவது நெற்றிப் பகுதியில் அடிபடுபவர்களுக்கு நடத்தையில் மாறுதல்கள் (Behavioural Changes) ஏற்படும். இயல்பாக ஒருவர் பொதுவிடத்தில் எப்படி நடந்து கொள்கிறார், நண்பர்களுடன் எப்படிப் பேசுகிறார், குடும்பத்தினரிடம் எப்படி நடந்து கொள்கிறார் என்பதையே `நடத்தை’ என்கிறோம். அது ஒரு சமூகக் கட்டுப்பாட்டுடன் இருக்கும். எந்த இடத்தில் எதைப் பேசவேண்டும் என்பதை அந்தக் கட்டுப்பாடுதான் தீர்மானிக்கிறது. ஆனால், தலையில் அடிபட்டவரின் நடத்தை மற்றும் பேச்சில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். உதாரணமாக, தலையில் அடிபட்டவர் பொது இடத்திலோ, குடும்பத்துடன் இருக்கும்போதோ தகாத வார்த்தைகளைப் பேசலாம்; கண்ட இடங்களில் சிறுநீர் கழிக்கலாம்; சாதாரண விஷயங்களுக்கே கோபப்படலாம். மொத்தமாக அவரது பேச்சிலும் செயலிலும் மாறுதல் ஏற்படும்.

தலையில் அடிபட்டால் மொழி மறந்து போகலாம்

காதுகளுக்கு மேல் அல்லது கீழ்ப்பகுதிகளில் அடிபட்டால், நினைவாற்றலில் பாதிப்பு ஏற்பட்டு மறதி உண்டாகலாம். அதை மறைக்க அவர்கள் மிகவும் முயற்சி செய்வார்கள். உதாரணமாகக் குளியல் சோப்பையோ, பேனாவையோ அவர்களிடம் காட்டினால், அவற்றின் பெயர்கள் அவர்களுக்கு ஞாபகம் வராது. ‘இது குளிக்கப் பயன்படுத்துவது’, ‘இது எழுதுவதற்குப் பயன்படுத்துவது’ என்று சொல்வார்கள்.

தலையின் பின்பகுதியில் அடிபட்டால் பார்வையில் கோளாறு ஏற்படும். மற்றவர்களிடம் மிகக் கடுமையாக நடந்துகொள்வார்கள். சாதாரண விஷயங்களுக்குக்கூடக் கத்துவார்கள், சண்டை போடுவார்கள். தலையில் மிக மோசமாக அடிபட்டுவிட்டால் சுயநினைவை இழக்கும் (Coma) நிலை ஏற்படலாம். இந்த நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மீள முடியும். இதற்கு எத்தனை நாள்கள் ஆகும் என்பது, பாதிப்பின் ஆழத்தைப் பொறுத்தது. சில நேரங்களில், கோமாவிலிருந்து மீளமுடியாத நிலையும் ஏற்படலாம்.

பொதுவாக, மறதி,  தெரிந்த மொழியைக்கூட பேசவோ புரிந்துகொள்ளவோ முடியாமல் போவது, மனக்குழப்பம், கவனமின்மை, பழகிய பொருளைக்கூட அடையாளம் காண முடியாமல் போவது, அதிகமாகச் சிரிப்பது, அழுவது, கோபம், எரிச்சலடைவது போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். சிலர் ஒரே வார்த்தையைத் தொடர்ந்து பேசுவது, ஒரே செயலை மீண்டும் மீண்டும் செய்வது, தனிமையாக உணர்வது, உடல் சமநிலையை இழப்பது, மயக்கம், சோர்வு, பயம், வாந்தி, தனிமையாக உணர்வது, சத்தத்தைக் கேட்டாலோ அல்லது வெளிச்சத்தைப் பார்த்தாலோ பய உணர்வு ஏற்படுவது, தெளிவில்லாமல், பலவீனமாகப் பேசுவது போன்ற மாற்றங்களும் வரலாம்.

தலையில் அடிபட்டால் மொழி மறந்து போகலாம்

சிகிச்சைகள்

தலையில் எப்படி அடிபட்டது, எவ்வளவு மோசமாக அடிபட்டுள்ளது என்பதற்கேற்பவே சிகிச்சைகள் அளிக்க வேண்டும். லேசாக அடிபட்டால் சிகிச்சை தேவையில்லை. ஆனால், தொடர்ந்து தலைவலி அல்லது மேலே கூறப்பட்ட அறிகுறிகள் தென்பட்டால் சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.

கடுமையாக அடிபட்டிருந்தால் மருத்துவமனையில் சேர்த்து,  மூளைக்குச் சரியான அளவு ரத்தம் செல்கிறதா என்பதை  சோதித்துப் பார்க்கவேண்டும். சரியாகச் செல்லவில்லையென்றால் மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் அளவு குறைந்துவிடும். எனவே அடிபட்டவரை உடனடியாக அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதித்துச் சிகிச்சையளிக்க வேண்டும்.

டையூரெடிக்ஸ் (Diuretics) வகை மருந்தை அடிபட்டவருக்குச் செலுத்தி, மூளைத் திசுக்களில் இருக்கும் அதிகப்படியான திரவத்தை வெளியேற்றி, மூளைக்கு அழுத்தம் கொடுக்காமல் தடுக்க வேண்டும். இந்த மருந்தைச் செலுத்தினால், அதிகப்படியான திரவம் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படும். இதனால், மூளை மேலும் பாதிக்கப்படாமல் இருக்கும்.

அடிபட்ட முதல் வாரத்தில் ‘ஆன்டி சீசர்’ (Anti-Seizure Drug) மருந்தைச் செலுத்துவார்கள். இது மூளை மேலும் பாதிக்கப்படாமலும் செயலிழக்காமலும் பாதுகாக்கும்.

தலையில் அடிபட்டால் மொழி மறந்து போகலாம்



மிக மோசமாகக் காயம் ஏற்பட்டிருந்தால், சில நேரம் மருத்துவர்கள் கோமாவைத் தூண்டும் மருந்து (Coma-Inducing Drug) செலுத்துவார்கள். இது அடிபட்டவரைத் தற்காலிகமாகக் கோமா நிலைக்குக் கொண்டுசெல்லும். இந்த மருந்து மூளையின் ரத்தத் தேவையைக் குறைக்கும். ஏனென்றால், தலையில் ரத்தக்கசிவு இருக்கும்போது அதிகப்படியான ரத்தம் வெளியேறி பாதிப்பை அதிகமாக்காமல் இந்த மருந்து பார்த்துக்கொள்ளும்.

அறுவை சிகிச்சைகள்

 மூளை மேலும் பாதிக்கப்படாமல் தடுக்கவும் பாதிப்பைச் சரிசெய்யவும் தேவைக்கேற்ப கீழ்க்கண்ட அறுவை சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும்.

* மூளையில் உறைந்த ரத்தத்தை வெளியேற்றும் அறுவை சிகிச்சை (Hematomas - Removing Clotted Blood)

* உடைந்த மண்டை ஓட்டைச் சரிசெய்யும் அறுவை சிகிச்சை

* மூளையில்  ரத்தக்கசிவைச் சரிசெய்யும் அறுவை சிகிச்சை

* மூளையில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கத் தண்டுவடத்தின் திரவத்தை வெளியேற்றுதல் அல்லது மண்டை ஓட்டில் சிறிய பகுதியை அகற்றும் அறுவை சிகிச்சை

 மறுவாழ்வு சிகிச்சைகள்

மனநல மருத்துவர்கள், ஆலோசகர்கள் மூலம் உளவியல் பயிற்சிகள் கொடுக்கப்படும்.  பிசியோதெரபிஸ்ட் மூலம் நடக்கவும், உடலை அசைக்கவும் பயிற்சியளிக்கப்படும். பேச்சு மற்றும் மொழிப்பயிற்சி கொடுக்கப்படும். இதுபோல மூளைக்கும், உடல் அசைவுகளுக்கும் பயிற்சிகள் கொடுப்பதன் மூலம் பாதிக்கப்பட்டவரை முழுமையாகக் குணமாக்கிவிடலாம்.

- மு.இளவரசன்