ஹெல்த்
Published:Updated:

கலோரியில் வேண்டும் கவனம்!

கலோரியில் வேண்டும் கவனம்!
பிரீமியம் ஸ்டோரி
News
கலோரியில் வேண்டும் கவனம்!

மீனாட்சி பஜாஜ், ஊட்டச்சத்து நிபுணர்ஹெல்த்

``ஏம்மா... உன்கிட்ட எத்தனை தடவை சொல்றது... நாம சாப்பிடுற சாப்பாட்டுல எவ்வளவு கலோரி இருக்குனு பார்த்துட்டுதாம்மா சாப்பிடணும். அப்புறம் உடம்பு வெயிட் போட்டுச்சுன்னா, அதைக் குறைக்க படாதபாடு படணும்’’ - மொபைல்போனைப் பார்த்தபடியே சாப்பிட்ட மகளைக் கண்டித்த அம்மாவுக்கு, மகள் கொடுத்த பதில் இது.

கலோரியில் வேண்டும் கவனம்!

இந்த உரையாடல் கொஞ்சம் வேடிக்கையாகத் தெரியலாம். ஆனால் உண்மையில், இன்றைக்கு உடல்நலம் குறித்த கவலை, பலருக்கும் கலோரிமீது அக்கறையையும் பயத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. கலோரி என்றால் என்ன, எந்த உணவில் எவ்வளவு கலோரி இருக்கிறது என்பதை நாமே கண்டறிய முடியுமா, இணையதளத்தின் உதவியோடு உணவிலுள்ள கலோரியைக் கணக்கிட முடியுமா, அது சரியானதுதானா என்பதையெல்லாம் விளக்குகிறார் ஊட்டச்சத்து நிபுணர் மீனாட்சி பஜாஜ்.

``உடலின் வளர்ச்சிக்கும், உடலின் வெப்பநிலையைப் பராமரிப்பதற்கும் நமக்கு எனர்ஜி அவசியம். இதை `எரிசக்தி’ என்றும் சொல்லலாம். நாம் உண்ணும் உணவுப் பொருள்களும் ஆக்சிஜனும்தான் நம் உடலுக்குத் தேவையான எனர்ஜியைக் கொடுக்கின்றன. அந்த எனர்ஜியின் அளவைக் குறிக்கப் பயன்படுத்தப் படுவதுதான் `கலோரி’. உணவு சார்ந்த எரிசக்திக்கு நாம் பயன்படுத்தும் அளவீடு, `கிலோ கலோரி.’ நம் செல்களிலிருக்கும் மைட்டோகாண்டிரியாவில்தான் (Mitochondria) இது உருவாகிறது. கார்போஹைட்ரேட், புரதச்சத்து, கொழுப்பு நிறைந்த உணவுகள் ஆகியவற்றிலிருந்து நமக்கு அதிக கலோரிகள் கிடைக்கின்றன. ஓர் இந்தியருக்கு, 60 சதவிகித கலோரி கார்போஹைட்ரேட்டிலிருந்தும், 25 முதல் 30 சதவிகிதம் கொழுப்பிலிருந்தும், 10 முதல் 15 சதவிகிதம் புரதத்திலிருந்தும் கிடைக்க வேண்டும். வயது, உடல் அமைப்பு, செய்யும் வேலையைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் கலோரியின் அளவு மாறுபடும். கர்ப்பிணிகள், நோயாளிகள், அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் ஆகியோருக்கு வழக்கமான அளவைவிட அதிக கலோரி தேவைப்படும்.

கலோரியில் வேண்டும் கவனம்!

நம் உடலுக்கு அனைத்து சத்துகளிலிருந்தும் கலோரி, சமச்சீராகக் கிடைக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு சத்திலிருந்து மட்டும் நமக்குத் தேவையான கலோரி கிடைக்கக் கூடாது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாவுச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். சிறுநீரக பாதிப்புள்ளவர்கள் புரதச்சத்து நிறைந்த உணவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். உடல்பருமனாக இருப்பவர்கள் கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

கலோரியில் வேண்டும் கவனம்!


எந்த தானிய வகையாக இருந்தாலும் சுமாராக 25 கிராம் தானியத்தில் 85 கிலோ கலோரி; 30 கிராம் பருப்பில் 100 கிலோ கலோரி; நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள் (100 கிராமில்) 30 கிலோ கலோரி; 25 கிராம்  சிறுதானியங்களில் (தினை, சாமை, குதிரைவாலி) 85 கிலோ கலோரி; கிழங்கு வகைகளில் (100 கிராமில்) 50 கிலோ கலோரி  கிடைத்துவிடும். ஒரு டீஸ்பூன் எண்ணெயில் 45 கிலோ கலோரியும் ஒரு டீஸ்பூன் சர்க்கரையில் 20 கிலோ கலோரியும் கிடைக்கும். தண்ணீரைத் தவிர நாம் உண்ணும் உணவுகள் அனைத்திலிருந்தும் கலோரி கிடைக்கும். உணவு தயாரிக்கும் முறையும் அதற்கான மூலப்பொருள்களும் ஒவ்வொரு வீட்டுக்கும் இடத்துக்கும் ஏற்ப மாறுபடும். எனவே, `இந்த உணவில் இவ்வளவு கலோரி இருக்கும்’ என்று தோராயமாகத்தான் கணிக்க முடியும். இணையத்தில் கிடைக்கும் கலோரி அட்டவணையை நாம்  எல்லோருமே பின்பற்ற முடியாது, அது சரியாகவும் இருக்காது.

ஒரு நாளில் நாம் உண்ணும் உணவிலிருந்து கிடைக்கும் கலோரி, நம் உடலின் தேவையைவிட  அதிகமாக இருந்தால், அதில் மூன்றில் ஒரு பங்குதான் நம் உடலுக்குத் தேவையான எனர்ஜியாக மாறும். மீதமுள்ளவை கொழுப்பாக உடலில் சேர்ந்துவிடும். இதனால் இதயம் தொடர்பான நோய்கள் வர வாய்ப்புகள் உள்ளன. எனவே, எவ்வளவு கலோரி தேவையோ அவ்வளவுதான் உணவில் இருக்க வேண்டும். நம் உடலில் ஆற்றல் சமநிலை (Energy Balance) என்பது மிக முக்கியமான ஒன்று. நம் உடலுக்குக் கிடைக்கும் ஆற்றல் குறைவாகவும்,  நம் உடலிலிருந்து வெளியேறும் ஆற்றல் அதிகமாகவும் இருந்தால், உடல் எடை குறைந்துவிடும். அதே நேரம் கிடைக்கும் எனர்ஜி அதிகமாகவும், வெளியேறும் எனர்ஜியின் அளவு குறைவாகவும் இருந்தால்  உடல் பருமன் உண்டாக வாய்ப்பிருக்கிறது.  உடல் எடை திடீரென அதிகமானாலோ அல்லது குறைந்தாலோ கலோரியும் காரணமாக இருக்கலாம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தாமதிக்காமல்  உணவியல் நிபுணரைச் சந்தித்து அதற்கான ஆலோசனையைப் பெற வேண்டும்.’’

- இரா.செந்தில்குமார்

படம்: அருள் பிரகாஷ், மாடல்: ர.வைஷ்ணவி