
ஹெல்த் - 14வி.ராமசுப்பிரமணியன், தொற்றுநோய் சிறப்பு மருத்துவர்
காசநோயைக் கண்டுபிடிப்பதற்கான `நியூக்ளிக் ஆசிட் ஆம்ப்ளிஃபிகேஷன் டெஸ்ட்’ (Nucleic Acid Amplification Test) பற்றிக் கடந்த இதழில் சொல்லியிருந்தேன் அல்லவா? அதைப் பற்றிக் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம். இந்த டெஸ்ட்டை சுருக்கமாக, `ஜீன் எக்ஸ்பெர்ட் டெஸ்ட்’ (GeneXpert Test) என்று சொல்வோம். உலக சுகாதார மையம் இந்த டெஸ்ட்டை முழுமையாக அங்கீகரித்திருக்கிறது. இதன் மூலம் சில மணி நேரத்தில் காசநோய் இருப்பதை உறுதி செய்துவிட முடியும். காசநோயில் இருக்கும் ஜீனைக்கொண்டு நோயின் தன்மையைக் கண்டுபிடிக்கும் டெஸ்ட் இது. காசநோய் இருக்கிறதா, இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பது மட்டுமல்ல... வேறு சில பயன்பாடுகளும் இந்த டெஸ்ட்டில் இருக்கின்றன. வந்துள்ள காசநோய், ரிஃபாம்பிசின் (Rifampicin) மருந்துக்குக் கட்டுப்படுமா, கட்டுப்படாதா என்பதையும் இந்தச் சோதனையில் கண்டுபிடித்துவிட முடியும்.

உடலில் எந்தப் பாகத்தில் காசநோய் இருந்தாலும், இந்தச் சோதனை மூலம் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால், இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. இந்தச் சோதனையில் `பாசிட்டிவ்’ என்று ரிசல்ட் வந்தால், 100 சதவிகிதம் அது உறுதியானது. `நெகட்டிவ்’ என்று ரிசல்ட் வந்தால் 100 சதவிகிதம் ‘காசநோய் இல்லை’ என்று சொல்ல முடியாது. இப்போது அதிக அளவில் நடைமுறையில் இருப்பது இந்தச் சோதனைதான்.

இன்னொரு விஷயத்தையும் இந்த இடத்தில் நாம் கவனிக்க வேண்டும். மருத்துவச் சோதனைகளைப் பொறுத்தவரை, 100 சதவிகிதம் உறுதி செய்யவே முடியாது. உதாரணத்துக்கு, டைபாய்டுக்கான ரத்தப் பரிசோதனையை எடுத்துக்கொள்ளலாம். அதில் 70 சதவிகிதம்தான் நோயின் தன்மையைக் கண்டறிய முடியும். ‘இருக்கிறது’ என்று சோதனை முடிவு வந்தால், ‘இருக்கிறது’ என்று உறுதிப்படுத்தலாம். ‘இல்லை’ என்று வந்தால், `இல்லை’ என்று உறுதிப்படுத்த முடியாது.
காசநோய் நுரையீரலில் இருந்தால் கண்டுபிடிப்பது எளிது என்று பார்த்தோம். சளிப் பரிசோதனை மூலம் கண்டுபிடித்துவிடலாம். நெறியில் வந்தால்? நெறி, உடலின் பல பகுதிகளில் இருக்கிறது. அக்குள் பகுதியில், கழுத்தில், நுரையீரலுக்கு நடுவில், வயிற்றில் என எல்லா இடங்களிலும் நெறி வரும். ‘லிம்ப் நோட்’ (Lymph Node) என்பது நெறிக்கு மருத்துவம் வைத்த பெயர். இந்த நெறிகள் எப்படி உருவாகின்றன என்று பார்த்துவிடுவோம்.

உடலெங்கும் ரத்தக்குழாய்கள் வழியாக ரத்தம் ஓடிக்கொண்டேயிருக்கிறது. சில நேரத்தில் ரத்தக்குழாயிலிருந்து ரத்தம் வெளியே கசிந்துவிடும். அப்படிக் கசியும் ரத்தத்தைச் சேகரித்துக் கொண்டு செல்லத் தனியாக ஒரு வழி உண்டு. அதற்கு, `லிம்பாட்டிக் சிஸ்டம்’ (Lymphatic System) என்று பெயர். கசியும் ரத்தம் இந்த வழியாகச் சென்று இதயத்துக்கு அருகில் ரத்தக்குழாயில் சேர்ந்துவிடும். அப்படிச் செல்லும்போது, ஆங்காங்கே நின்று தேங்கிவிடும். அந்த இடம் வீங்கி, நெறியாக மாறிவிடும். காசநோய் இந்த நெறியில் பாதிப்பை ஏற்படுத்த நிறைய வாய்ப்புண்டு. அரிசி சைஸில் இருக்கும் நெறி, காசநோய் பாதித்தால் நெல்லிக்காய் சைஸுக்கு மாறிவிடும்.
இந்த நெறியில் காசநோய் வந்தால் எப்படிக் கண்டுபிடிப்பது? ஊசி மூலம் அதற்குள் இருக்கும் திரவத்தை எடுத்து ஜீன் எக்ஸ்பெர்ட் டெஸ்ட் செய்து கண்டுபிடிக்கலாம். ஊசி மூலம் எடுக்கவியலாத பட்சத்தில் சிறிதளவு சதையை வெட்டியெடுத்துச் சோதிக்கலாம். நெறிகளில் சார்க்காய்டோஸிஸ் (Sarcoidosis) என்ற ஒரு நோயும் வரலாம். இது எதனால் வருகிறது என்று கண்டறியப் படவில்லை. இதனால் ஏற்படும் பாதிப்புகள் கிட்டத்தட்ட காசநோயின் பாதிப்புகளைப்போலவே இருக்கும். அதனால், காசநோய்க்கும், சார்க்காய்டோஸிஸுக்கும் இருக்கும் வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க வேண்டியதும் அவசியம். நுரையீரல், நெறி தவிரக் காசநோய் பாதிக்கும் இன்னொரு முக்கிய உறுப்பு மூளை. மூளையில் காசநோய் வந்தால் எப்படிக் கண்டுபிடிப்பது? அடுத்த இதழில் பார்ப்போம்!
- களைவோம்...