ஹெல்த்
Published:Updated:

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
News
கன்சல்ட்டிங் ரூம்

ஹெல்த்

கன்சல்ட்டிங் ரூம்

என் மகள் பிறந்து ஐந்து மாதங்கள் ஆகின்றன. மூன்று மாதத்தில் குப்புறப்படுக்க ஆரம்பித்தாள். ஆனால், அவளுக்குத் தொடையில் தடுப்பூசி போட்டதில் இருந்து அவள் குப்புறப் படுப்பதே இல்லை. ஆனால், நாங்கள் திருப்பிப் படுக்கவைத்தால், படுத்துக்கொள்கிறாள். அவளின் இந்த நடவடிக்கை மாறுபாடு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய ஒன்றா?

- திவ்யா, மதுரை

கன்சல்ட்டிங் ரூம்

குழந்தைக்குத் தடுப்பூசி போட்டவுடன், தொடையில் வலி ஏற்பட்டிருக்கும். குப்புறப்படுக்க முயற்சி செய்யும்போதோ, குப்புறப்படுத்தாலோ அந்த வலி அதிகமாகியிருக்கலாம். குப்புறப் படுத்தால் தொடை வலிக்கும் எனக் குழந்தை மனதில் பதிந்திருக்கும். எனவே, அதைத் தவிர்த்திருப்பாள். நீங்கள் குப்புறப்படுக்க வைக்கும்போது வலி இல்லாததால், தொடர்ந்து அப்படியே படுத்திருப்பாள். இதில் அச்சம் கொள்ள எதுவும் இல்லை, மிக இயல்பான விஷயமே. அடுத்தடுத்த மாதங்களில் தவழ ஆரம்பிக்க வேண்டும் என்பதால், தொடர்ந்து அவளைக் குப்புறப் படுக்கவைத்துப் பழக்குங்கள். ஒரு கட்டத்தில் தானாகவே படுக்கத் தொடங்கிவிடுவாள்.

- கண்ணன், குழந்தைகள்நல மருத்துவர்

எனக்கு வயது 29. திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகின்றன. இன்னும் குழந்தை இல்லை. டாக்டரை ஆலோசித்தபோது, டி அண்டு சி செய்ய வேண்டும் என்றார். கருவே தரிக்காத எனக்கு எதற்காக டி அண்டு சி செய்ய வேண்டும்? அது அவசியம்தானா?

- ஜே.ஜீவிதா, சென்னை-24

கன்சல்ட்டிங் ரூம்

டி அண்டு சி (Dilation and Curettage) என்பது, கருவுற்ற முதல் மூன்று மாதங்களுக்குள் கருச்சிதைவு ஏற்பட்டாலோ அல்லது கருக்கலைப்பு செய்ய வேண்டி வந்தாலோ, செய்கிற ஒரு மருத்துவ முறை. ஆனால், இதைக் குழந்தை பிறக்காத உங்களுக்குச் செய்துபார்ப்பது என்பது, ஏற்றுக்கொள்ள முடியாதது. தவிர, கருத்தரிக்காதவர்களுக்கு இப்படிச் செய்யும்போது அவர்களின் கருப்பையில் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், இது தற்போது வழக்கத்திலேயே இல்லை. உங்கள் விஷயத்தில், கருப்பையில் ஏதேனும் கசடுத் தேக்கம் இருந்தால் அதை நீக்கும் நோக்கத்தில் நீங்கள் சந்தித்த மருத்துவர் இம்முறையைப் பரிந்துரைத்திருக்கலாம். ஆனால், இது பரிந்துரைக்க ஏற்றதல்ல. எனவே, நீங்கள் வேறொரு மருத்துவரிடம் ஆலோசனை பெறவும். கருப்பையிலோ, கருக்குழாயிலோ ஏதேனும் அடைப்பு இருந்தால், லேப்பராஸ்கோப்பி முறையில் தீர்வு காணலாம்.

- நிவேதா பாரதி, மகப்பேறு மருத்துவர்

கன்சல்ட்டிங் ரூம்

எனக்கு 35 வயதாகிறது. கர்ப்பமாக இருக்கிறேன். உறவினர்கள் சிலர், இந்த வயதில் பிள்ளை பெற்றுக்கொண்டால், அதற்கு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம் என்று அச்சம் தரும் விதமாகப் பேசுகிறார்கள்.  கருவின் மூளை வளர்ச்சியை உறுதிப்படுத்தும் பரிசோதனைகள் பற்றிச் சொல்ல முடியுமா டாக்டர்?

- கீதா கணேஷ், அருப்புக்கோட்டை

கன்சல்ட்டிங் ரூம்

நெருங்கிய சொந்தங்களுக்குள் திருமணம் செய்துகொண்டாலோ அல்லது அம்மா, அப்பா இருவரில் ஒருவருடைய ஜீனில் ‘டவுண் சிண்ட்ரோம்' பிரச்னை இருந்தாலோ குழந்தைக்கு மூளை வளர்ச்சிக் குறைபாடு ஏற்படலாம். அப்போதும்கூட, நிச்சயம் அந்த பாதிப்பு ஏற்படும் என்று சொல்வதற்கில்லை. உங்கள் அச்சம் களைய, கீழ்க்காணும் பரிசோதனைகள் மூலம் உங்கள் கருவின் மூளை வளர்ச்சியை அறிந்துகொள்ளலாம்.

கன்சல்ட்டிங் ரூம்

பொதுவாக ஸ்கேனில் சிசுவின் மூளை வளர்ச்சிக் குறைபாடு சரிவரத் தெரியாது என்பதால், கருத்தரித்த 12 - 14 வாரங்களுக்குள் ‘நேசல் போன் ஃபார்மேஷன்' என்கிற அல்ட்ரா சவுண்டு பரிசோதனையைச் செய்வது நல்லது. இந்த ஸ்கேனில் ‘நேசல் போன் வளர்ச்சி', மருத்துவம் சொல்கிற அளவீட்டின்படி இருந்தால் உங்கள் சிசுவுக்கு நிச்சயம் டவுண் சிண்ட்ரோம் பிரச்னை இருக்காது.  ஒருவேளை இதில் ஏதேனும் வித்தியாசமாகத் தெரிந்தால்,  உடனே ‘ட்ரிபிள் ஸ்க்ரீன்' என்கிற  ரத்தப் பரிசோதனையை 16 - 25 வாரங்களுக்குள் செய்து பார்க்கலாம். தவிர, கருப்பையில் குழந்தையைச் சுற்றியுள்ள தண்ணீரை எடுத்து ‘ஆம்னியோசென்டெசிஸ் டெஸ்ட்’ (Amniocentesis Test)  செய்யலாம். அதேபோல, தாயின் ரத்தத்தின் மூலம் ‘நான்-இன்வேசிவ்  ப்ரீநேட்டல் ஜெனிட்டிக் டெஸ்ட்'  செய்து பார்த்தும் கருவின் மூளை வளர்ச்சியின் ஆரோக்கியத்தை உறுதிசெய்துகொள்ளலாம்.

- வாணி ஷ்யாம், மகப்பேறு மருத்துவர்