
தன்னம்பிக்கை
``பொதுவா அம்மா இல்லாத பெண் பிள்ளைகளை, ‘பத்திரமா வளர்த்துக் கரைசேர்த்துடணும்’னு அப்பாக்கள் பதற்றத்தோடவே இருப்பாங்க. எங்கப்பாவும் அப்படித்தான். ஸ்போர்ட்ஸ் கேர்ளா இருந்த எனக்கு எலும்புப் புற்றுநோயால் காலை எடுக்கவேண்டிய நிலை வந்தப்போ, அவர் ரொம்பவே உடைஞ்சுபோயிட்டார். ‘அதனால என்னப்பா... என்னால சாதிக்க முடியும்’னு சொல்லி, அதை இப்போ நிரூபிச்சுட்டு இருக்கேன்’’ - அந்த மைதானத்தில் வீசிய காற்றில் சரக்கொன்றை மலர்கள் நிலத்தில் உதிர்ந்த பொழுதொன்றில், தன்னம்பிக்கையுடன் பேச ஆரம்பித்தார் தமிழரசி.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கல்லூரி த்ரோபால் டீமின் கேப்டனாக விரைந்துகொண்டிருந்தது சென்னையைச் சேர்ந்த தமிழரசியின் வாழ்க்கை. எலும்புப் புற்றுநோய் அவரைப் படுக்கையில் தள்ளியதோடு அவரின் வலது காலையும் பறித்திருக்கிறது. வாழ்வின் லட்சியங்களைக் கண்டடையச் சளைக்காத முயற்சியோடும் தீராத வேகத்தோடும் ஓடிக்கொண்டிருந்த இந்த இளங்கன்று, இன்று செயற்கைக் காலுடன் தன் இலக்கை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது.

“என் சின்ன வயசுலேயே அம்மா இறந்துட்டாங்க. அப்பா தனியார் ஸ்கூல்ல வேன் டிரைவரா இருக்கார். அப்பா என்னை ஆண் பிள்ளைபோல வளர்த்தாரு. ஒரு நிமிஷம்கூட சும்மாவே இருக்க மாட்டேன். ஸ்கூல் டேஸ்ல எனக்கு த்ரோபால் விளையாட்டில் ஆர்வம் வந்தது. ‘தாயில்லாத புள்ள, வெளையாட்டு அது இதுன்னு போயி எங்கயாச்சும் அடிபட்டுடுச்சுன்னா பொம்பளப் புள்ள வாழ்க்கை வம்பாகிடும்’னு சொல்லி அப்பா விளையாட்டுக்குத் தடைபோட்டார். ஆனாலும், ‘கில்லி’ விஜய் மாதிரி அப்பாவுக்குத் தெரியாம நிறைய போட்டிகளில் கலந்துகிட்டேன். அங்கே ஜெயிச்சு வாங்கின பரிசுகளை எல்லாம் வீட்டுல ஒளிச்சு வெச்சேன். கல்லூரி போனதுக்கு அப்புறமா, பிடிவாதமா அப்பாகிட்ட சண்டை போட்டு த்ரோபால் விளையாட ஆரம்பிச்சேன். காலேஜ்ல நான்தான் டீம் கேப்டன். நேஷனல்ஸ் வரை போய்

விளையாடியிருக்கேன். போட்டி, வெற்றின்னு உற்சாகமா போயிட்டு இருந்தப்போதான் திடீர்னு அந்தப் புயல் வீச ஆரம்பிச்சது.
2014 டிசம்பர் மாசம், எதேச்சையா ஜம்ப் செய்தப்போ காலில் சுளுக்குப் பிடிச்ச மாதிரி இருந்தது. வீட்டுக்கு வந்த பிறகு, காலில் கரன்ட் பாஸ் ஆகிற மாதிரி உணர்வு. ‘ஓடியாடி விளையாண்டா அப்படித்தான் இருக்கும்’னு சொல்லி காலை நீவிவிட்டாங்க பாட்டி. ஒரு மாசத்துல எங்க காலேஜ்ல ஸ்போர்ட்ஸ் டே வந்தது. அதுக்காகப் பிராக்டீஸ் பண்ணினதுல, காலில் உயிர் போகிற மாதிரி வலி வந்துச்சு. ‘வீட்டுல சொன்னா விளையாட விடமாட்டாங்க’ன்னு விட்டுட்டேன். ஒரு கட்டத்துல வீக்கம் வர, அப்பாகிட்ட சொன்னேன். எத்தனையோ டாக்டர்ஸைப் பார்த்தும் வலி விட்டபாடில்லை. அதுக்கப்பறம்தான் ஒரு டாக்டர் செக் பண்ணிட்டு, இது ‘எலும்புப் புற்றுநோய்’னு சொன்னார்’’ என்றபோது, வேகம் குறைகிறது அவரது குரலில்.

‘‘எங்கப்பா நொறுங்கிப்போயிட்டார். டாக்டர்ஸ் எல்லோரும், ‘கால்ல ஆபரேஷன் பண்ணினா சரியாகிடும்’னு சொன்னாங்க. ஆபரேஷன் முடிஞ்சதுக்குப் பிறகு பார்த்தா, என்னோட வலது காலை எடுத்திருத்தாங்க. கத்தினேன்... துடிச்சேன். ‘கால்ல ஆபரேஷன்னுதானே சொன்னீங்க? காலையே எடுத்துட்டீங்களே?’னு அழுதேன். ‘உயிர் முக்கியமா, கால் முக்கியமான்னா உயிர்தானேம்மா முக்கியம்’னு டாக்டர்ஸ் சமாதானப்படுத்தினாங்க. ‘கால் இல்லாம நான் எப்படி விளையாடுவேன்? என் காலை எடுத்ததுக்குப் பதிலா என்னைச் சாகவே விட்டிருக்கலாம்’னு கதறித் துடிச்சேன்’’ என்ற தமிழரசி, பார்வையை மைதானத்தில் ஸ்கிப்பிங் செய்துகொண்டிருந்த சிறுமியின் பக்கம் திருப்புகிறார். “ஓய், நல்லா நிமிர்ந்து நில்லு... காலை ஸ்ட்ரெயிட்டா வை” என்று கமென்ட் கொடுக்கிறார்.
தன் கழிவிரக்கத்தை விரட்டிவிட்டு, சாதனைக்கான களத்தை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறார் தமிழரசி. மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் விளையாட்டுகளில் கவனத்தைத் திருப்பி, மாநில அளவிலான போட்டிகளில் குண்டு எறிதலில் தங்கமும் வட்டு எறிதலில் வெண்கலமும் வென்று, வாழ்க்கையை வசப்படுத்தியிருக்கும் தமிழரசிக்கு இப்போது வயது 22.

“கீமோ தெரபி பண்ணும்போது முடி கழிஞ்சு, உடல் கறுத்தப்போ என்னைப் பார்த்து அழுதவங்களுக்கு எல்லாம், ‘அதெல்லாம் மறுபடியும் சரியாகிடும்’னு நான் தைரியம் சொன்னேன். டாக்டர்ஸே என்னைப் பார்த்து ஆச்சர்யப்பட்டாங்க. அப்பாவும், உறவினர்களும், என் ஃப்ரெண்ட்ஸும் எப்பவும் எனக்குப் பக்கபலமா இருந்ததாலதான், புற்றுநோயை என்னால எதிர்கொள்ள முடிஞ்சது. பாரா ஒலிம்பிக் போட்டிக்குத் தயாரானபோது, கணேஷ் சிங் கோச் எனக்குக் கிடைச்சார். அவர் என்னை ரொம்ப நல்லா மோல்டு பண்ணிக் கொண்டு வர்றார். குண்டு எறிதல், வட்டு எறிதல், ஸ்விம்மிங், ஷட்டில்னு என்னால முடிஞ்ச அளவுக்கு விளையாட ஆரம்பிச்சுட்டேன்.
முடியாதுன்னு நினைச்சு நான் வீட்டுக்குள்ளேயே இருக்கிறதைவிட, ‘என்னால முடியும் பாருங்க’ன்னு நிரூபிச்சு மத்தவங்களுக்கும் இன்ஸ்பிரேஷனா இருக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். புற்றுநோயால இருண்ட காலமா இருந்த என் வாழ்க்கையை நானே மீண்டும் வசந்தகாலமா மாத்திக்கக் கத்துக்கிட்டேன். ஒரே ஒரு வருத்தம்தான். முன்ன மாதிரி அப்பாவோட பைக்கை எடுத்துட்டு சல்லுனு பறக்க முடியலை. ஆனாலும் நம்ம சந்தோஷத்துக்காக வாழ்க்கை எப்பவும் ஆயிரம் ஆயிரம் விஷயங்களைக் கொடுத்துட்டேதான் இருக்கும்!”
தமிழரசி புன்னகை மிதக்கச் சொன்னபோது அடித்த காற்றில், கிளைவிட்டு உதிர்ந்த சரக்கொன்றை மலர்கள் அவர் தலைமீது விழுந்தன. ‘‘இதோ... அந்த ஆயிரத்தில் இதுவும் ஒண்ணு” என்கிறார் சட்டென மகிழ்ந்து!
- மு.பார்த்தசாரதி
படங்கள்: க.பாலாஜி