ஹெல்த்
Published:Updated:

வலியின் மொழி அறிவோம்!

வலியின் மொழி அறிவோம்!
பிரீமியம் ஸ்டோரி
News
வலியின் மொழி அறிவோம்!

ஹெல்த்

வலி என்பது உடலுக்குள் ஏற்படும் பிரச்னைகளை உணர்த்தும் மொழி.  உடல் உறுப்புகளில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அது வலியாக வெளிப்படவேண்டும், அல்லது சருமத்தில் ஏதேனும் மாற்றம் உருவாக வேண்டும். அப்போதுதான் பிரச்னை என்னவென்று உணரமுடியும். வலிகளின் பின்னணி, தீர்வுகள் மற்றும் சிகிச்சைகள் பற்றிய முழுமையான தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.

வலியின் மொழி அறிவோம்!

“மனித உடலின் நரம்பு முனைகளில் வலிகளை உணரும் முடிச்சுகள் உள்ளன. உணர்ச்சிகளை மூளையில் இருந்து நரம்புகளின் வழியாக உடலின் மற்ற பாகங்களுக்குக் கொண்டுசெல்வது ‘நியூரோட்ரான்ஸ்மிட்டர்’ என்ற நரம்பியக் கடத்திகள். ‘செரட்டோனின்’ (Serotonin) மற்றும் ‘சப்ஸ்டன்ஸ்-பி’ (Substance -P) ஆகிய வேதிப்பொருள்கள்தான் வலியைக் கடத்துவதில் முக்கியமானவை. இவற்றின் மூலமே வலியை உணர முடிகிறது. அறுவை சிகிச்சையின்போது அளிக்கப்படும் மயக்க மருந்துகள், மூளை மற்றும் முதுகுத்தண்டின் தொடர்பைத் துண்டித்து விடுவதால் வலியை உணர முடியாது. அதாவது, உடலின் குறிப்பிட்ட இடத்தில் செலுத்தப்படும் மரத்துப்போகச் செய்வதற்கான மருந்துகள் அந்த இடத்தின் நரம்பு முடிச்சுகளைத் தற்காலிகமாகச் செயலிழக்கச் செய்துவிடும். இதனால் வலி தெரியாது. அதேபோல, வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்வதால் மூளைக்குத் தெரியாமல் வலி மறைக்கப்படும். ஆனால், அடிப்படையான பிரச்னை சரிசெய்யப்படுவதில்லை...” என்கிறார் ஸ்டான்லி அரசு மருத்துவமனை, வலிநிவாரண சிகிச்சை மையத் தலைவர் மகேந்திரன்.

வலியின் மொழி அறிவோம்!“கண், இதயம், காது, பற்கள், எலும்பு என ஒவ்வோர் உறுப்புக்கும் மருத்துவத்தில் தனித்தனித் துறைகள் இருப்பதுபோல, வலிகளுக்குத் தீர்வு காணவும் தனித்துறை உருவாக்கப்பட்டுள்ளது. வலி என்பது நம்மை எச்சரிக்கை செய்வதற்கான உணர்வு. கோமா நிலையில் இருக்கும் மனிதர்கள் மட்டுமே வலியை உணர்வதில்லை. மூளையைத் தவிர உடலின் வேறு எந்த இடத்தில் பாதிப்பு இருந்தாலோ, அடிபட்டாலோ வலியை நம்மால் உணர முடியும். தலைவலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி, கைமூட்டு வலி, கைவலி, வயிற்று வலி, முதுகு வலி, கால்மூட்டு வலி, கணுக்கால் வலி, நாள்பட்ட தசை வலி  (Fibromyalgia) எனத் தலை முதல் பாதம் வரை பல்வேறு வகையான வலிகள் வரலாம். வலிகளின் தன்மை அறிந்து, முதலில் மருந்துகள் மூலமாகவும் தேவைப்பட்டால் அதற்கான பிரத்யேக ஊசிகள் (Interventional Procedure) மூலமாகவும் சிகிச்சை அளிக்கலாம்’’ என்கிறார் மகேந்திரன்.

சரி... ஒவ்வொரு வலியாகப் பார்க்கலாம்.

வலியின் மொழி அறிவோம்!

தலைவலி... இது பலரும் சந்திக்கும் பொதுவான வலி. தலைவலியின் வகைகள், அவற்றுக்கான சிகிச்சைகள் பற்றி விளக்குகிறார், நரம்பியல் நிபுணர் மால்கம்.

ஒற்றைத் தலைவலி

வலியின் மொழி அறிவோம்!தலைவலியில் மிகக் கொடூரமானது ஒற்றைத் தலைவலி (Migraine Headache). ஒருமுறை வந்தால் நான்கு மணி நேரத்துக்கு மேல் படுத்தி எடுத்துவிடும். வாந்தி வரக்கூடும். பார்வையில் வித்தியாசம் ஏற்படும். மின்மினிப் பூச்சிகள் பறப்பதுபோன்று தெரியும். அதிக சத்தமும், வெளிச்சமும் தலைவலியை அதிகரிக்கும்.

ஒற்றைத் தலைவலிக்கான காரணங்கள்:

* உணவு

* நேரத்துக்குச் சாப்பிடாதது

* மதுப்பழக்கம்

* பதப்படுத்திய உணவுகள், செயற்கை இனிப்புகளை அதிகம் சாப்பிடுவது

* அதிக வெளிச்சம், அதிக சத்தம், புகை பிடித்தல், துர்நாற்றச் சூழலில் இருப்பது

* ஹார்மோன் மாற்றம்

* ஹார்மோன் மாத்திரைகளை அதிகமாகச் சாப்பிடுவது

* மன அழுத்தம்

* அதிகமான உடற்பயிற்சி

* தூக்கமின்மை

* பருவநிலை மாற்றம்

வலியின் மொழி அறிவோம்!

பதற்றத்தால் வரும் தலைவலி

இது, முன் தலை, நெற்றிப்பகுதி, பின்தலைப் பகுதிகளில் கடும்வலியை ஏற்படுத்தும். பெரும்பாலும் மன அழுத்தம் காரணமாக ஏற்படும் இதை, ‘ஃபீச்சர்லெஸ்’ தலைவலி (Featureless Headache) என்றும் சொல்வார்கள்.

கண் பிரச்னையால் ஏற்படும் தலைவலி (Trigeminal Autonomic Cephalalgia)

இதை, ‘க்ளஸ்டர் தலைவலி’ (Cluster Headache) என்பார்கள். இந்தத் தலைவலி வந்தால் கண்களின் உள்பகுதியில் வலி ஏற்படும். கண்கள் சிவந்து, கண்ணீர் வடியும். மூக்கின் ஒருபக்கத்தில் அடைப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு. இந்த அறிகுறிகள் விட்டுவிட்டு வரலாம். இது அதிக வலியைக் கொடுக்கக்கூடியது.

மூளையில் ஏற்படும் பிரச்னைகளால் வரும் தலைவலி
(Secondary Headache)


மூளைப்பகுதியில் கட்டி இருந்தால், அழுத்தம் ஏற்பட்டு மிகக் கடுமையான தலைவலி ஏற்படும். மூளையில் தொற்று ஏற்பட்டாலும், மூளைக்காய்ச்சல் ஏற்பட்டாலும், மூளையின் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டாலும் கடுமையான தலைவலி வரும். உடல் பருமன், ஹார்மோன் மாற்றங்கள் காரணமாகப் பெண்களுக்குத் தலைவலி வரும். மூளையில் ஏற்படும் அழுத்தமே அதற்குக் காரணம். மூளையில் இருக்கும் ரத்தக்குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ரத்தம் வெளியேறுவதாலும் தலைவலி வரலாம். இது தாங்க முடியாத அளவுக்கு இருக்கும்.

ஒவ்வொரு தலைவலிக்கும் தனித்தனி மருந்துகளும் சிகிச்சைகளும் உள்ளன. தலைவலி கடுமையாக இருந்தாலோ, தொடர்ந்து இருந்தாலோ மருத்துவரைப் பார்க்க வேண்டியது அவசியம். தலைவலி எதனால் ஏற்பட்டது என்று கண்டுபிடித்து, அதற்கேற்ற சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். சில வகைத் தலைவலிகளுக்கு நீண்டநாள் சிகிச்சை பெற வேண்டியிருக்கும்” என்கிறார் நரம்பியல் நிபுணர் மால்கம்.

வலியின் மொழி அறிவோம்!

புற்றுநோயால் ஏற்படும் வலிகள்

“புற்றுநோயின் ஆரம்ப நிலையில் வலி இருக்காது. அதன் வீரியம் அதிகமாகும்போது வலி, படிப்படியாக அதிகரித்துக்கொண்டே போகும்” என்கிறார் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் சரவணன்.

வலியின் மொழி அறிவோம்! ``புற்றுநோயில் 100-க்கும் அதிகமான வகைகள் இருக்கின்றன. ரத்தப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் போன்றவற்றால் அதிகமானோர் பாதிக்கப்படுகிறார்கள். இதற்குப் பலவகையான சிகிச்சைகள் உள்ளன.

சிகிச்சைகள்

* அறுவை சிகிச்சை

* ரேடியேஷன் தெரபி

* கீமோ தெரபி

* இம்யூனோ தெரபி

* டார்கெட்டட் தெரபி

* ஹார்மோன் தெரபி

* ஸ்டெம்செல் தெரபி

* மருந்துகள்

புற்றுநோய்க்கான சிகிச்சைகள்தான் அதிக வலியைக் கொடுக்கக்கூடியவை. அதற்காக நோயாளிகளுக்குத் தொடர்ந்து வலி நீக்கும் மாத்திரைகள், மயக்க மருந்துகளைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். புற்றுநோய் செல்கள் வளர வளர, அவை பக்கத்திலிருக்கும் செல்களுக்கு அழுத்தத்தைக் கொடுப்பதால், தாங்கமுடியாத வலி ஏற்படும்.முற்றிய புற்றுநோய் செல்கள் சம்பந்தப்பட்ட உறுப்பை அரித்துவிடும். அதனால் தாங்கமுடியாத அளவுக்கு வலி ஏற்படும். புற்றுநோய் வளர வளர வலி நீக்கும் மருந்துகள், மயக்க மருந்துகளின் அளவை அதிகரிக்க வேண்டியிருக்கும்.

வலிகளைக் குறைக்க, வலியை ஏற்படுத்தும் நரம்புகளைக் கண்டறிந்து அவற்றைச் செயலிழக்கச் செய்வார்கள். வலியை உணரமுடியாதவாறு மூளை, தண்டுவடம் ஆகிய பகுதிகளில் அறுவை சிகிச்சை செய்வார்கள். 24 மணிநேரமும் மயக்க மருந்துகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்தால்தான் வலியைக் குறைக்க முடியும்’’ என்கிறார் சரவணன்.

வலியின் மொழி அறிவோம்!

எலும்பு மற்றும் தசை வலிகள்

எலும்பு, தசைகள், சவ்வுகளால் ஏற்படும் வலிகளுக்கான தீர்வுகள் பற்றி விவரிக்கிறார் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் ஹேமந்த் குமார்.

வலியின் மொழி அறிவோம்!``தலை முதல் கால் வரையுள்ள எலும்புகள், தசைகள், சவ்வுகளில் அடிபட்டால் வலி உண்டாகும். காயங்கள், கட்டிகளில் சீழ்ப்பிடித்து, எலும்புகளில் தொற்று ஏற்பட்டாலும் கடுமையான வலி ஏற்படலாம். தசைகள் உராய்வது, மூட்டுகள் தேய்வடைவது போன்ற காரணங்களாலும் வலி ஏற்படலாம்.மூட்டுகள் தேய்வடைவதால் லேசான வலி (Dull Pain) வரும்.

எலும்புப் புற்றுநோய், எலும்பில் கட்டிகள் ஏற்பட்டால் மோசமான வலி வரலாம்.

பெரும்பாலும், எந்தப் பகுதியில் பிரச்னை ஏற்பட்டுள்ளதோ அந்த இடத்தில்தான் வலி ஏற்படும். ஆனால், சிலநேரம் வலியும் பாதிப்பும் வெவ்வேறு இடங்களில் இருக்கும். இந்த வகை வலிகளைக் குறைக்க, காரணத்தைக் கண்டுபிடித்த பிறகே சிகிச்சையைத் தொடங்கமுடியும். டிஸ்க் பிரச்னை (Disk Problem) இருந்தாலும் வலி இருக்கும். தண்டுவடம், கழுத்து ஆகிய பகுதிகளில் சவ்வு விலகியிருந்தால் கால்களுக்கு வரும் நரம்புகளில் அழுத்தம் ஏற்படும். அந்த நரம்பு எங்கெல்லாம் செல்கிறதோ, அந்தப் பகுதி முழுவதும் வலி ஏற்படும்.

அதிகமான உடலுழைப்பு, அதிக உடற்பயிற்சி செய்தாலும் எலும்புகளில் உராய்வு ஏற்பட்டு வலி வரலாம். ஓய்வாக இருக்கும்போது வரும் வலி, வேலை செய்யும்போது வரும் வலி என இரண்டுவிதமான வலிகள் உள்ளன. ஓய்வாக இருக்கும்போதும் தொடர்ந்து எலும்புகளில் வலி இருந்தால், சீழ்ப்பிடித்திருக்கலாம், அல்லது எலும்புப் புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். வேலை செய்யும்போதோ, நடக்கும்போதோ கைகால் மூட்டுகளில் வலி இருந்தால், எலும்புகள் தேய்ந்திருக்க வாய்ப்புள்ளது. இது பொதுவாக வயதானவர்களுக்கு ஏற்படும். இந்த வலி, ஓய்வில் இருக்கும்போது வராது.

எலும்பில் சீழ்ப்பிடிப்பதற்கான காரணங்கள்

எலும்புகளில் ஏற்படும் பாதிப்புகளில் மிக அதிகமான வலியைக் கொடுக்கக்கூடியது இதுதான். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்

15 வயதுக்குள்ளான சிறுவர்களுக்குக் காது, தொண்டை மற்றும் சருமத்தில் சீழ்ப்பிடிக்கலாம். அந்தச் சீழ் கொஞ்சம் கொஞ்சமாக எலும்புகளுக்குப் பரவி மஜ்ஜையில் தொற்றை உண்டாக்கிவிடும். திடீரெனக் காய்ச்சலுடன், பாதிக்கப்பட்ட பகுதியில் கடுமையான அளவுக்கு வலி ஏற்படும். 40 வயதைக் கடந்தவர்களுக்குச் சிறுநீரக பாதிப்பு, சர்க்கரை நோய் இருந்தால் எலும்பில் அடர்த்தி குறைந்துவிடும். அதன் காரணமாக எலும்புகளில் சீழ்ப்பிடித்துக் கடுமையான வலி ஏற்படலாம். நடக்க முடியாமலும் போகலாம்.

குழந்தைகளுக்கு ஏற்படும் எலும்பு தொடர்பான வலிகள்

வலியின் மொழி அறிவோம்!பொதுவாக, குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் எலும்புகளில் பிரச்னை ஏற்பட அதிக வாய்ப்புண்டு. வேறு உறுப்புகளில் சீழ்ப்பிடித்து, எலும்புகளில் தொற்று ஏற்பட்டால் காய்ச்சலுடன் மூட்டு, இடுப்புப் பகுதிகளில் வலி ஏற்படலாம். எலும்பு வளர்ச்சி சரியாக இல்லையென்றாலும், குழந்தைகளுக்கு வலி வரலாம். குழந்தைகள் மிக அதிகமாக விளையாடும்போது மூட்டுகளில் உள்ள எலும்புகள், குருத்தெலும்புகளில் சிரமம் ஏற்பட்டு, மூட்டுவலி உண்டாகும். சில குழந்தை களுக்குக் கால்கள் வளைந்திருப்பதாலும் வலி உண்டாகலாம். இந்தப் பிரச்னைகள் அனைத் தையும் சிகிச்சைகளால் குணப்படுத்திவிடலாம்.

பெண்களுக்கு ஏற்படும் வலிகள்

பெண்களுக்குப் பிரசவத்துக்குப் பிறகு இடுப்பு, கால் மூட்டுகளில் வலி இருக்கும். கர்ப்பமாக இருக்கும்போது, முதுகுத் தண்டுவடம் வளைவதாலும் பிரசவத்தின்போது தசைகள், எலும்புகள், சவ்வுகளில் அழுத்தம் ஏற்படுவதாலுமே வலி ஏற்படுகிறது. ஆண்களுடன் ஒப்பிட்டால் பெண்களுக்குக் கால் மூட்டின் கோணத்தில் சிறிய மாற்றம் இருக்கும். இது அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும். இதனால், பெண்களுக்கு மூட்டு எலும்புத் தேய்மானம் அதிகமாக இருக்கும். 40 வயதுக்கு மேலுள்ள பெரும்பாலான பெண்களுக்கு மூட்டு வலி ஏற்படும். மாதவிடாய் நின்ற பெண்களின் உடலில் கால்சியம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். எலும்புகளின் அடர்த்தியும் குறைந்துவிடும். 60 வயதை நெருங்கும்போது எலும்புகள் எளிதாக உடையும் தன்மையில் இருக்கும். சிறு தவறான அசைவுகூட எலும்புகள் உடையக் காரணமாகிவிடும். இதற்கு கால்சியம், ஹார்மோன் மாத்திரைகள், மருந்துகள் மூலம் சிகிச்சையளிக்கலாம்.

முதியோருக்கு ஏற்படும் வலிகள்

முதுமையில் எலும்புகள் தேய்மான மடைவதால், மூட்டுகள், இணைப்பு எலும்பு களில் கடுமையான வலி ஏற்படும். இதுபோன்ற பிரச்னைகளுக்கு, மூட்டுமாற்று அறுவை சிகிச்சை உள்பட பல நவீன சிகிச்சைகள் வந்துள்ளன’’ என்கிறார் ஹேமந்த் குமார்.

உடலை வருத்தும் மேலும் சில வலிகள் குறித்து அடுத்த இதழில் பார்க்கலாம்.

- மு.இளவரசன், ஜி.லட்சுமணன்

வலியின் மொழி அறிவோம்!

பின் பாக்கெட்டில் பர்ஸ்?

ஆண்களில் பலரும் பர்ஸை பேன்ட்டின் பின் பாக்கெட்டில் வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக் கிறார்கள். சரியாக அந்த இடத்தில்தான் சியாட்டிகா (Sciatica) எனும் நரம்பு காலுக்குச் செல்கிறது. பர்ஸை பேன்ட்டின் பின் பாக்கெட்டில் வைத்தபடி வாகனங்களில் உட்கார்ந்து பயணிக்கும்போதும், தொடர்ந்து பல மணி நேரம் உட்கார்ந்தபடி வேலை செய்யும்போதும்,   சியாட்டிகா நரம்பு அழுத்தத்துக்கு உள்ளாகும். இதனால் நாளடைவில் இடுப்பு வலி, கால் வலி ஏற்படலாம். இதை `பேக் பாக்கெட் சியாட்டிகா ‘ (Back Pocket Sciatica) அல்லது `வாலெட் சியாட்டிகா’ (Wallet Sciatica) என்கிறார்கள்.

ஃபைப்ரோமையால்ஜியா  பெண்களைத் தாக்கும் வலி நோய்!

வலி என்பது நோயின் அறிகுறி. ஆனால், வலியே நோயாக இருந்தால்? ஆமாம். ‘ஃபைப்ரோமையால்ஜியா’ (Fibromyalgia) என்பது ஒருவித வலி நோய். ‘ஃபைப்ரோமையால்ஜியா’ என்ற கிரேக்க வார்த்தைக்கு ‘தீராத தசைவலி’, ‘நாள்பட்ட வலி’ என்று பொருள். ஆரம்பத்தில் வேறு நோயின் அறிகுறியாகக் கருதப்பட்டது இந்நோய். 1990-ம் ஆண்டில், அமெரிக்க மூட்டுவலிக் கல்வி  நிறுவனம் ‘ஃபைப்ரோமையால்ஜியா’வை ஒரு நோயாக அறிவித்தது. தற்போது, உலக அளவில் 3 முதல் 6 சதவிகிதம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  90 சதவிகிதம் பேர் பெண்கள். எனவே, இது, ‘பெண்களுக்கான வலி நோய்’  என்று அறிவிக்கப்பட்டது. 

மார்பு, கை, கழுத்து உள்பட குறிப்பிட்ட 18 இடங்களில் ஊசியால் குத்துவதுபோல, சுளீரென வலி எடுக்கும். இந்நோயை, ரத்தப் பரிசோதனைகள், எக்ஸ்ரே, ஸ்கேன் பரிசோதனைகளால் கண்டறிய முடியாது. வலி நிவாரண மருத்துவரால், மட்டுமே கண்டறிய முடியும். அவரது ஆலோசனையின்பேரில் உடற்பயிற்சி மற்றும் அவசியமான வாழ்க்கைமுறை மாற்றங்களைச் செய்ய வேண்டும். அத்துடன், செரட்டோனின் சுரப்பைத் தூண்டும் மாத்திரைகள், தசைவலியைக் குறைக்கும் மாத்திரைகளைச் சாப்பிடலாம். இந்த நோய்க்கு ‘ட்ரிக்கர் பாயின்ட் இன்ஜெக் ஷன்ஸ்’ (Trigger Point Injections) மூலமும் நிவாரணம் பெறலாம்.