
ஹெல்த்
போட்டோஷாப் கொண்டு என்ன செய்ய முடியும்?
புகைப்படங்களைப் புதிய பொலிவுடன் மாற்ற முடியும். ‘வாவ்’ என்று வியக்கும் விதத்தில் அதில் கற்பனையைக் கலக்க முடியும். இல்லாததை இருப்பதாகவும், இருப்பதை இல்லாததாகவும் மாற்றி அமைக்க முடியும். இன்னும் பலவும் செய்ய முடியும். ஏன், போட்டோஷாப் கொண்டு ஏமாற்றி ஆட்சியையே பிடிக்க முடியும்.

ஜியோ ஜான் முல்லூர் (Jyo John Mulloor) என்பவருக்குக் கடந்த பதின்மூன்று வருடங்களாக போட்டோஷாப்தான் வாழ்க்கையே. ஆனால், அவர் அதில் செய்வதெல்லாம் கற்பனை வளம் மிகுந்த, ஆக்கப்பூர்வமான காரியங்கள் மட்டுமே. ஜியோ ஜான் கேரளாவைச் சேர்ந்தவர். பள்ளி, கல்லூரி எல்லாம் அங்கேதான் பயின்றார். ஒரு டிசைனராக தனது பணியை ஆரம்பித்தார். இப்போது துபாயில் விஷுவல் ஆர்ட்டிஸ்ட்டாக நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். பல முன்னணி பிராண்டுகளுக்கான விளம்பரங்களில் ஜியோ பணியாற்றியிருக்கிறார்.

அதைத் தவிரவும் ஜியோ ஜானின் கிரியேட்டிவான படைப்புகள், இணைய உலகில் பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. ‘ஷூக்களின் உணர்வுகள்’ என்று ஷூவை விதவிதமான மனித முகங்களோடு பொருத்தி அசத்தியிருக்கிறார். மூக்குக்கண்ணாடியின் லென்ஸ்களில் முதலை, ஆந்தை, கழுகு என்று விதவிதமான உயிரினங்களின் கண்களைப் பொருத்தி இவர் வெளியிட்ட டிசைன்கள் அபாரம். மனிதனின் தலையையே டிசைனாகக் கொண்ட இவரது ஹெல்மெட் கற்பனைப் படைப்பு செம வைரல்.
ஜியோ ஜானின் அக்கறையுடன் கூடிய அடுத்த கற்பனை இப்போது பலத்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது. அது மருத்துவம் சம்பந்தமானது மட்டுமல்ல, மனிதம் சம்பந்தப்பட்டதும்கூட. மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறோம் அல்லது யாரையாவது பார்க்கச் செல்கிறோம். அங்கே மிகவும் சுத்தமான சூழ்நிலை இருக்கலாம் அல்லது அழுக்கான ஓரிடமாகவும் அது இருக்கலாம். எப்படியிருந்தாலும் நோய்கள் பரவக்கூடாது என்பதற்காக முகத்தில் மாஸ்க் அணியச் சொல்வார்கள். மருத்துவர்களும் செவிலியர்களும் பச்சைநிற மாஸ்க் அணிந்தபடி அங்குமிங்கும் திரிவார்கள்.

அந்த மாஸ்க் அணிந்த மனிதர்களைப் பார்த்தாலே நோயாளிகளுக்கும் சரி, அந்தச் சூழலில் இருப்பவர்களுக்கும் சரி, கொஞ்சம் அசௌகரியமாகத்தான் இருக்கும். மனம் அசௌகரியமாக உணர, ஏதோ ஒரு படபடப்பு உள்ளுக்குள் அனிச்சையாக எழும். அந்த மாஸ்க், அசாதாரணமான சூழலையே பிரதிபலிக்கும் குறியீடாகத் தோன்றும். அந்த மாஸ்க்கில்தான் ஜியோ ஜான் தன் கற்பனையைச் சேர்த்திருக்கிறார். கோமாளியின் வாய் திறந்த சிரிப்பாக, மீசைக்கார மனிதராக, தாடிக்காரரின் புன்னகையாக, நாக்கு தொங்கும் நாய்க்குட்டியின் முகமாக, உதடுகள் குவித்து முத்தமிடும் பாவனையாக - விதவிதமான மாஸ்க் டிசைன்களை ‘The Care Mask’ என்ற தலைப்பில் வெளியிட்டிருக்கிறார் ஜியோ ஜான்.

இப்படி விநோதமான மாஸ்க் அணிந்திருக்கும் மனிதர்கள் மருத்துவமனையில் நடமாடினால் அந்தச் சூழலின் இறுக்கம் மறையும். நோயாளிகளின் மன அழுத்தம் குறையும். அவர்களுக்குள் நம்பிக்கை துளிர்க்கும். பயத்தில், அடம்பிடித்து அழும் குழந்தைகூட, சிரிப்புடன் மருந்தை வாங்கிக் குடித்துவிடும். இந்த மாஸ்க் என்பது மிகச்சிறிய விஷயம்தான். ஆனால், நல்ல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியது என்று தன் எண்ணத்தைப் பகிர்ந்திருக்கிறார் ஜியோ ஜான்.
நிஜம்தானே... நோயாளிகள் மீண்டு வருவது மருந்தினால் மட்டுமல்ல, அவர்களது மனோதிடத்தினாலும்தான். மருந்தால் தீராத வலிகூட, மனம்விட்டுச் சிரிக்கும்போது நீங்கிவிடுவதுண்டு. அந்த வகையில் இந்த மருத்துவ முகமூடிகள் நல்ல மாற்றங்களைத் தரவல்லவை. இனி, நீங்கள் மருத்துவமனைகளில் இப்படிப்பட்ட மாஸ்க் அணிந்த மனிதர்களைக் கண்டால் ஜியோ ஜானை நினைத்துக் கொள்ளுங்கள்.
-முகில்