ஹெல்த்
Published:Updated:

டாக்டர் நியூஸ்!

டாக்டர் நியூஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
டாக்டர் நியூஸ்!

தகவல்

ம்மைச் சுற்றியிருக்கும் காற்று தூய்மையாக இல்லாவிட்டால் பல பிரச்னைகள் வரக்கூடும்; அந்தப் பட்டியலில் புதிதாகச் சேர்ந்திருப்பது, நீரிழிவு நோய்.

காற்றுக்கும் நீரிழிவுக்கும் தொடர்பிருக்கும் என்று நாம் கற்பனையிலாவது சிந்தித்திருப்போமா? ஆனால், இதற்கு மறுக்கமுடியாத சான்று இருக்கிறது என்கிறார் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜியாத் அல்-அலி. காற்றில் உள்ள சிறு தூசுத்துகள்கள், புகை போன்றவை நுரையீரலில் நுழைவதுபோலவே ரத்தத்திலும் கலந்து பல உடல்பாகங்களுக்குச் செல்கின்றன, அதனால் இதுபோன்ற பிரச்னைகள் வரக்கூடும் என்று நம்பப்படுகிறது. சென்ற ஆண்டில்மட்டும் உலகெங்கும் சுமார் 32 லட்சம் பேருக்குக் காற்று மாசு காரணமாக நீரிழிவு நோய் வந்திருக்கிறதாம்.

தொழில்நிறுவனங்கள் இப்போதைய காற்று மாசு விதிமுறைகளைத் தளர்த்தவேண்டும் என்கின்றன; ஆனால் உண்மையில் அவற்றை இன்னும் கடுமையாக்கவேண்டும் என்கிறார் டாக்டர் ஜியாத். ‘இதய நோய், பக்கவாதம், நுரையீரல், சிறுநீரகப் பிரச்னைகளுக்கெல்லாம் காற்று மாசு காரணமாக இருக்கிறது’ என்கிறார் நியூயார்க்கைச் சேர்ந்த டாக்டர் ஃபிலிப் லான்ட்ரிகன்.

டாக்டர் நியூஸ்!

லகெங்கும் போதைமருந்துப் பிரச்னை பெரிதாகிக் கொண்டிருக்கிறது. இளைஞர்களை இந்தத் தீய பழக்கத்திலிருந்து விடுவிப்பது எப்படி என்று பலர் பலவிதமாகச் சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்; புதிய உத்திகளை முயன்றுகொண்டிருக்கிறார்கள்.

அவ்வகையில் சமீபத்திய உத்தி, கடைகளின் கழிப்பறைகளில் நீல விளக்குகளைப் பொருத்துவது. விளக்குக்கும் போதைமருந்துக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கிறீர்களா? சம்பந்தம் இருக்கிறது!

பெரும்பாலான இளைஞர்கள் போதைமருந்துகளை ஊசிமூலம் ஏற்றிக்கொள்வதற்குத் தனிமையான ஓரிடத்தை நாடுகிறார்கள். அதற்கு மிக வசதியாக இருப்பவை, கழிப்பறைகள். அங்கே யாரும் அவர்களைக் கவனிக்கமுடியாது, தடுக்கமுடியாதல்லவா?

கடைகளில் உள்ள கழிப்பறைகளில் நீல விளக்குகளைப் பொருத்திவிட்டால், நரம்பைக் கண்டறிந்து ஊசி போடுவது சிரமமாகிவிடும். அதனால், போதைமருந்தின் பயன்பாடு குறையும் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால், இந்த விளக்குகளால் வேறுமாதிரியான பிரச்னைகள் வரக்கூடும் என்று எச்சரிப்பவர்களும் இருக்கிறார்கள், போதைமருந்தை ஏற்றிக்கொண்டே தீரவேண்டும் என்று வெறியோடு இருப்பவர்கள் எக்குத்தப்பாக எங்கேயாவது குத்திக்கொண்டுவிட்டால் ஆபத்தல்லவா?

இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு, வெளியிலுள்ள விளக்கைத் திருத்துவதில்லை, முறையான சிகிச்சை, ஆலோசனைமூலம் உள்ளேயிருக்கும் விளக்கைச் சரிசெய்வதுதான்!

டாக்டர் நியூஸ்!

டந்த சில ஆண்டுகளில், உடல்தகுதி பற்றிய விழிப்பு உணர்வு அதிகமாகியிருக்கிறது. பலர் ‘ஒருநாள்விடாம வாக்கிங் போறேன்’ என்று பெருமையுடன் சொல்கிறார்கள்.

ஆனால், வாக்கிங் மட்டும் போதாது’ என்று இங்கிலாந்து பொதுநலத்துறை எச்சரிக்கிறது. ‘நடைப்பயிற்சி நல்லதுதான்; ஆனால், அதனால் உங்களுடைய தசைகள் வலுவடைவதில்லை, அதற்கு நீங்கள் வேறுவிதமான உடற்பயிற்சிகளைச் செய்தாக வேண்டும். அதுதான் முழுநலத்தை உறுதிசெய்யும்.

இதற்கு எந்த மாதிரி உடற்பயிற்சிகளைச் செய்யவேண்டும்?

டாக்டர் நியூஸ்!



Strength and Balance Exercise எனப்படும் வலிமையைப் பெருக்குகிற, சமநிலையை மேம்படுத்துகிற உடற்பயிற்சிகளை வாரத்துக்குச் சுமார் 150 நிமிடங்கள்வரை செய்வது நல்லது என்கிறார்கள். எடுத்துக்காட்டாக, தாய்-ச்சி, எடைதூக்குதல் போன்றவை.

‘இதுக்காக ஜிம்முக்குப் போகணுமா?’ என்று யோசிக்கிறவர்கள் வேறு சில எளிய விஷயங்களைப் பின்பற்றலாம், அதன்மூலம் உடல் வலுவேறுமாம்:

* விளையாடலாம், குறிப்பாகப் பந்து விளையாட்டு, டென்னிஸ், இறகுப்பந்து போன்ற மட்டைவீச்சு ஆட்டங்கள்.

* நடனமாடலாம், அநேகமாக எல்லாவகை நடனங்களும் நல்ல உடற்பயிற்சிகள்தாம்.

* இயன்றவரை மின்தூக்கியைத் தவிர்த்துப் படிகளில் ஏறி, இறங்கலாம்.

* தினமும் 30 விநாடிகள் ஒற்றைக்காலில் நிற்கலாம்.

* கடையில் வாங்கும் பொருள்களை வண்டியில் வைக்காமல் கையால் தூக்கியபடி வீட்டுக்குக் கொண்டுவரலாம்.

* யோகாசனம் செய்யலாம்.

டாக்டர் நியூஸ்!

வேலைநேரம் என்பது, உலகம் முழுக்கச் சராசரியாக வாரத்துக்கு 40 மணி நேரம். அதற்குமேல் யாராவது உழைத்தால், அதை 'ஓவர்டைம்', அதாவது, கூடுதல் பணிநேரம் என்பார்கள். சில நேரங்களில் இது அவர்கள்மீது திணிக்கப்படுகிறது, சில நேரங்களில் அவர்களே இதனை விரும்பி ஏற்றுக்கொள்கிறார்கள், அதன்மூலம் கிடைக்கும் கூடுதல் வருமானம் அவர்களுடைய குடும்பத்துக்கு உதவியாக இருக்கிறது. ஆகவே, அதே அலுவலகத்திலோ வெளியில் இன்னோரிடத்திலோ வேலை பார்க்கிறார்கள்; அக்கம்பக்கத்துப் பிள்ளைகளுக்கு மாலைநேரத்தில் பாடம் சொல்லித்தந்து சம்பாதிப்பதுகூட 'ஓவர்டைம்'தான்.

சமீபத்தில் கனடாவில் இந்த ‘ஓவர்டைம்' பற்றி ஓர் ஆய்வு நடத்தப்பட்டது; அதில் ஒரு விநோதமான கண்டுபிடிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்: பெண்கள் வாரத்துக்கு 5மணிநேரம் கூடுதலாக வேலை செய்தால், அவர்களுக்கு நீரிழிவு நோய் வருகிற வாய்ப்பு 62% அதிகமாம். ஆண்களுக்கு அப்படியில்லையாம்!

ஏன் அப்படி?

பொதுவாக, `Unpaid Work' எனப்படும் சம்பளமில்லாத வேலையைப் பெண்கள் அதிகம் செய்கிறார்கள். எடுத்துக்காட்டாக, வீட்டைத் தூய்மைப்படுத்துவது, பாத்திரம் தேய்ப்பது, துணிதுவைப்பது... இவற்றோடு அலுவலகத்தில் ஓவர்டைமும் சேர்ந்துகொள்வதால் அவர்களுடைய மன அழுத்தம் அதிகரித்து, ஹார்மோன்களின் சமநிலை கெட்டுப்போகிறதாம், ரத்தச் சர்க்கரையளவு பாதிக்கப்படுகிறதாம்.

என்ன செய்யலாம்?

முடிந்தால், ‘ஓவர்டைமை'த் தவிர்க்கலாம்; அது சாத்தியமில்லை என்றால், உடலைக் கவனித்துக்கொள்வதற்காகச் சரிவிகித உணவு, உடற்பயிற்சி, போதுமான அளவு தூக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்தலாம். வீட்டுவேலைகளுக்குக் குடும்பத்தில் பிறருடைய உதவியைக் கேட்கலாம். அனைவரும் பகிர்ந்துகொண்டு வேலைகளைச் செய்தால் பெண்ணின் அழுத்தம் குறையும், ஆரோக்கியம் அதிகரிக்கும்.

- என். ராஜேஷ்வர்