
ஹெல்த்

`பட்ட காலிலேயே படும்’ என்பது பழமொழி. அடிபட்ட இடத்திலேயே அடிபடுவது, சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்த பிறகு, மீண்டும் அடிபட்டு மருத்துவமனைக்கே திரும்பிப் போவது... இத்தகைய நிகழ்வுகளை நிறைய பார்த்திருப்போம், அனுபவித்திருப்போம். வீட்டில் சில விஷயங்களில் கவனம் செலுத்தினால், திரும்ப அடிபடாமல் பார்த்துக்கொள்ளலாம். அவை...

தரை
தரை வழுக்கும் ஈரத்தன்மையில்லாமல் இருக்கும்படிப் பார்த்துக்கொள்ளவும். ஈரக் கால்களுடன் நடப்பதைத் தவிர்க்கவும். தேவையில்லாமல் தரையில் புத்தகங்கள், பத்திரிகைகள், உபகரணங்கள், மிதியடிகள் போன்றவை கிடக்காமலும் நாற்காலி, ஸ்டூல் போன்றவை இடைஞ்சலாக இல்லாமலும் பார்த்துக்கொள்ளவும். அப்போதுதான் நடப்பதற்கு இடையூறு இல்லாமலிருக்கும்.

குளியலறை

வழுக்கி விழுந்து, காயம்படத் தேவையான அத்தனை அம்சங்களும் நிறைந்திருக்கும் ஒரே இடம் குளியலறை. அதனால் எப்போதும் அங்கே கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. தரையின் வழுக்கும் தன்மை, ஈரத்தன்மையைக் குறைக்கப் பாய்கள், விரிப்புகள், குளிக்கும்போது ஷவர் சேர் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். குளியலறையின் இடவசதி, கழிப்பறையின் உயரம், குழாய்கள் அனைத்தும் எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்தாத வகையில் அமைந்திருப்பது நல்லது.

படிக்கட்டுகள்
பளிச்சென ஒளிரும் டேப் அல்லது பெயின்ட்டினால் படிக்கட்டுகளின் முனைகளை அடையாளமிடுங்கள். இது படி எங்கே இருக்கிறது என்று துல்லியமாகக் காட்ட உதவும். படிகள் வழுக்கும் தன்மை இல்லாத, மரத்தால் செய்யப்பட்டவையாக இருப்பது நல்லது. படிக்கட்டுகளின் ஓரமாகப் பிடித்துக்கொண்டு நடக்கும்விதமாககக் கைப்பிடி வசதி இருக்க வேண்டும். கைப்பிடிகள் பிடிமானமுள்ளவையாகவும் வழுக்காதவையாகவும் இருக்க வேண்டும்.

படுக்கையறை
படுக்கையறையில், இருட்டில் நடப்பதைத் தடுப்பதற்குக் குறைந்த வெளிச்சம் தரும் விளக்குகளைப் பயன்படுத்துங்கள். நீண்ட நேரம் படுத்திருந்துவிட்டு அல்லது உட்கார்ந்திருந்துவிட்டுத் திடீரென எழுந்திருக்கவோ, வேகமாக நடக்கவோ கூடாது. முதலில் கொஞ்சம் நிதானப்படுத்திக்கொண்டு அசைய வேண்டும். விளக்கு, போன் போன்ற அவசர காலத்தில் தேவைப்படும் பொருள்களைப் படுக்கையிலிருந்து கைக்கெட்டும் தொலைவில் வைத்திருங்கள்.

சமையலறை
சமையலறையில் அதிகம் பயன்படுத்தும் பொருள்களை எளிதாக எடுக்கும் விதமாக, கைக்கெட்டும் இடங்களில் வைக்க வேண்டும். அவற்றை எட்டாத உயரத்தில் வைத்து, எடுக்கும்போது சிரமப்பட்டுக்கொண்டிருக்கக் கூடாது. உயரத்திலுள்ள பொருள்களை எடுப்பதற்கு நாற்காலி, பெட்டிகள் போன்றவற்றில் ஏறக்கூடாது. பதிலாக ஏணியைப் பயன்படுத்தலாம். அது வலுவானதாக இருக்க வேண்டும்; இன்னொருவரின் உதவியோடு எடுப்பது நல்லது.

காலணிகள்
கடினமான தரையில் சாக்ஸ் அணிந்து நடப்பதைத் தவிர்க்கவும். வழுக்கும் தன்மையில்லாத தரையில் நடக்க, ஸ்லிப்பர்களே போதுமானவை. ஆனால் அவை, உறுதியான ரப்பரால் செய்யப்பட்டவையாக, ஹீல்ஸ் இல்லாததாக இருக்க வேண்டும். சர்க்கரை நோய் இருப்பவர்கள் அல்லது தொடுதலை உணரும் திறன் குறைவாக இருப்பவர்கள் பாதுகாப்பான காலணிகளை அணிய வேண்டியது அவசியம்.

தனிப்பட்ட பாதுகாப்பு
எங்கேயாவது விழுந்துவிட்டால் அல்லது அவசர உதவி தேவைப்பட்டால், பிறரை அழைப்பதற்கு வசதியாக அலாரம், செல்போன் போன்றவற்றை எப்போதும் பாக்கெட்டில் வைத்திருங்கள். தொடுதலை உணரும் திறன் குறைவாக இருப்பவர்கள் நடக்கும்போது ஊன்றுகோலைப் பயன்படுத்துவது நல்லது. கவனக்குறைவாக அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளை ஒரே நேரத்தில் செய்யக் கூடாது. உதாரணமாக, செல்போனில் பேசிக்கொண்டே படிக்கட்டில் ஏறக் கூடாது.
- ச.கலைச்செல்வன்