ஹெல்த்
Published:Updated:

ஜீரோ ஹவர்! - 13

ஜீரோ ஹவர்! - 13
பிரீமியம் ஸ்டோரி
News
ஜீரோ ஹவர்! - 13

ஹெல்த்

டற்பயிற்சியின்போது ஏற்படும் காயங்களால் உடலைவிட அதிகம் பாதிக்கப்படுவது மனம்தான். உலகஅளவில் உடற்பயிற்சியைக் கைவிடுவதற்கான மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக இந்த மனக்காயங்கள் இருக்கின்றன. காயம் எதுவாக இருந்தாலும், காயம் பட்டவர் எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் அது ஏற்படுத்தும் பாதிப்பு ஒரே மாதிரியானது. இதுகுறித்து உலகம் முழுவதும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

ஜீரோ ஹவர்! - 13

காயங்களால் ஏன் நாம் உடற்பயிற்சிகளைக் கைவிடுகிறோம்?

* காயங்களால் உண்டாகும் மனச்சோர்வு

* பயிற்சியில் இடைவெளி ஏற்படுவது

* ஓய்வுக்காலத்தில் வளர்த்துக்கொள்ளும் சோம்பேறித்தனம்

இவைபோக காயங்களில் சிக்கிய கால கட்டத்தில் மனதில் உருவாகும்  தனிமை, எரிச்சல், உற்சாகமின்மை, கோபம் முதலான உணர்வுகள் ஏற்படுத்தும் பாதிப்புகளும் அதிகம்.

தோழி ஒருவர் சென்னை மாரத்தானுக்காக ஆறு மாதங்களாகத் தயாராகிக் கொண்டிருந்தார். பயிற்சி சிறப்பாகப் போய்க்கொண்டிருந்தபோது கணுக்காலில் வலி ஏற்பட்டது. இதற்காக மருத்துவரைச் சந்தித்தபோது, ‘சிறிய உள்காயம் இருக்கிறது, அது சரியாகும்வரை ஓய்வில் இருக்கவேண்டும்’ எனச் சொல்லிவிட்டார். ஒரு மாதம் ஓய்வு எடுக்க வேண்டிய சூழல். அப்படியானால், ‘ஆறு மாதப் பயிற்சிகளும் வீணாகிவிடுமே’ என்ற எண்ணம் அவரை மிகவும் பாதித்தது. ஒரு மாத ஓய்வு முடிந்தபோது அவர் திரும்பவும் பயிற்சியைத் தொடரவில்லை. அப்போது விட்டவர் இப்போதுவரை எத்தனைமுறை வலியுறுத்தியும் மீண்டும் பயிற்சிக்குத் திரும்பவில்லை.

ஜீரோ ஹவர்! - 13

இன்னொரு நண்பர், தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து யோகா பயிற்சி செய்ய ஆரம்பித்தார். முதுகில் சிறிய வலி ஏற்பட, ஓய்வில் இருக்க வேண்டியதாயிற்று. இந்த ஓய்வுக்காலத்தில் தினமும் நன்றாகத் தூங்கித்தூங்கி எழுந்து பழகிவிட்டார். அதிகாலையில் எழுந்து யோகப்பயிற்சிகள் செய்யும் பழக்கம் அவரை விட்டுப்போனது. மற்றுமொரு பிரச்னை, காயங்கள் இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் வெறித்தனமாகப் பயிற்சிகளை மேற்கொள்வது; அதுவும் தவறே. அப்படிச் செய்வதால் ஏற்கெனவே உண்டான காயங்கள் மேலும் பெரிதாகி  உடற்பயிற்சியே செய்யமுடியாமல் போகுமளவு பாதிப்பை அதிகப்படுத்தலாம். அடுத்தது, முறையற்ற சிகிச்சைகள். காயம் எப்படிப்பட்டது என்பதை அறிந்து அதற்கேற்ற சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளாமல் மேம்போக்காக எடுத்துக்கொண்டாலும் பாதிப்புகள் அதிகமாகலாம்.

ஜீரோ ஹவர்! - 13‘எலும்பில் சிறிய வலிதானே இருக்கிறது’ என்று கவனிக்காமல் விட்டுவிட்டு, பல நூறு கிலோமீட்டர் சைக்கிளிங் செய்து எலும்பின் விரிசலைப் பெரிதாக்கிக் கொண்டவர்கள் பலர் உண்டு. காயங்கள் ஏற்பட்டால் முதலில் அதற்குச்  சரியான சிகிச்சை பெற்றுக்கொள்வது நல்லது. எல்லாக் காயங்களும் குணமாகிவிடும் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.  குணமாகும்வரை இடைவெளி விடாமல், வேறு சில எளிய பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.  உசேன் போல்ட்...  ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பு காயத்தில் சிக்கி ஓடமுடியாமல் மூன்று மாதங்கள் ஓய்வில் இருக்கவேண்டிய சூழல். ஆனால் அவர் சும்மா உட்கார்ந்திருக்காமல் பயிற்சியாளரின் ஆலோசனைப்படி நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டார். இதன்மூலம் உடலைப் புத்துணர்வுடனும் உற்சாகமாகவும் வைத்திருந்தார். ஒலிம்பிக்கில் தங்கமும் வென்றார்!

காயங்கள் ஏற்படும் காலத்தில் நம்மை நாமே உற்சாகப்படுத்திக்கொள்ளும் வழிமுறைகளைக் கண்டுபிடித்துச் செய்யலாம். மாற்றுப் பயிற்சிகள் என்ன என்பதைக் கண்டறிவது, பொழுதுபோக்குகளை அதிகப்படுத்திக்கொள்வது, தியானம் செய்வது என நம்மை எது உற்சாகப்படுத்துகிறதோ அதைச் செய்யலாம்.  அப்படிச் செய்யும்போது காயங்கள் குணமானதும் பழைய உற்சாகத்துடன் களத்தில் இறங்குவோமே தவிர பயிற்சிகளைக் கைவிடமாட்டோம்!

நேரம் ஒதுக்குவோம்...

- வினோ