
ஹெல்த்
வயது வித்தியாசமின்றி எல்லோருக்கும் இருக்கிறது மறதி. நினைவாற்றலை மேம்படுத்தும் எளிய வழிகள் சிலவற்றைத் தெரிந்துகொள்வோமா?

பயன்படுத்து அல்லது தூக்கி எறி!
தசையைப் போலத்தான் செயல்படுகிறது மூளை. எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு வலுவடையும். புதிது புதிதாகக் கற்றுக் கொள்வது, வழக்கமான செயல்களை மாற்றிக்கொள்வது, அனல்பறக்கும் விவாதங்களில் ஈடுபடுவது, பயணம் செய்வது, இசைக்கருவியை வாசிப்பது... இவையெல்லாம் மூளைக்குப் புதிய இணைப்புகளை ஏற்படுத்தி அது சிறப்பாகச் செயல்பட உதவும்.
கார்போஹைட்ரேட் கைகொடுக்கும்

`கார்போஹைட்ரேட் இருக்கும் உணவுகளை உட்கொள்ளும் முதியவர்கள் நினைவாற்றல் செயல்பாடுகளுக்கான சோதனைகளில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள்’ என்கிறது கனடா நாட்டு ஆய்வு ஒன்று. இருந்தாலும், இந்த கார்போஹைட்ரேட் பழங்கள், காய்கறிகள், முழுத் தானியங்கள் மூலமாகக் கிடைக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்... இவைதாம் மூளைக்கு குளூகோஸை மெதுவாகக் கொண்டு செல்லும். சர்க்கரை சேர்த்த கேக்குகளும் ஐஸ்க்ரீம்களும் உடனடி ஆற்றலை வழங்கினாலும், அதைத் தொடர்ந்து மந்தநிலையும் கவனக்குறைவும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. வாரம் ஒரு முறை, எண்ணெய்ச் சத்துள்ள மீன்களைச் சாப்பிடுவது மூளைக்கு நல்லது.
ஒரு நேரத்தில் ஒரு வேலை மட்டுமே!
ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் செய்தால் குழப்பங்களைத் தவிர்க்கலாம். பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்தால் நினைவாற்றலும் கவனமும் குலைந்துபோகும். ஒருவர் உங்களுக்கு அறிமுகமாகிறாரா... அவர் பெயரைக் கேட்டதும், ஒரு விநாடி கழித்து அந்தப் பெயரைச் சத்தமாகச் சொல்லுங்கள். படிப்பதோ, உட்கார்ந்து வேலை செய்வதோ எந்த வேலையையும் அமைதியான இடத்தில் செய்து பழகுங்கள். மனதில் விஷயங்களைத் திரும்பவும் சொல்லிப் பார்க்கும் திறனை இரைச்சல் குறைத்துவிடும்.
குமாரு... யாருப்பா இவரு?
ஒருவர் உங்களுக்கு அறிமுகமாகும்போது, அவருடைய பெயரை நன்றாக உள்வாங்கிக்கொள்ளுங்கள். `காத்தரின்’ என்ற பெயரா? `K’-யில் ஆரம்பிக்குமா, ‘C’-யில் ஆரம்பிக்குமா?’ என்று கேட்டுவைத்துக் கொள்ளுங்கள். ஒருவரின் பெயரை நினைவில் வைத்துக்கொள்வதற்கு உதவும் வகையில் ஏதாவது ஒரு அடையாளம் போட்டுக்கொள்ளுங்கள் ( `கீதாவா... அட... என் சின்ன வயசு பெஸ்ட் ஃப்ரெண்டோட பேராச்சே அது’ என்கிற மாதிரியான அடையாளங்கள்). அவரோடு உரையாடும்போது விடைபெறும்வரை அவர் பெயரை அடிக்கடி பயன்படுத்துங்கள்.
- ப.பொன்னுச்சாமி