ஹெல்த்
Published:Updated:

நிலம் முதல் ஆகாயம் வரை... - பெருங்குடல் நீர் சிகிச்சை

நிலம் முதல் ஆகாயம் வரை... - பெருங்குடல் நீர் சிகிச்சை
பிரீமியம் ஸ்டோரி
News
நிலம் முதல் ஆகாயம் வரை... - பெருங்குடல் நீர் சிகிச்சை

யோ.தீபா இயற்கை மருத்துவ துணைப் பேராசிரியர்ஹெல்த்

டலில் தங்கியிருக்கும் கழிவுகள்தான் பல நோய்களுக்குக் காரணம். அந்தக் கழிவுகளை அகற்றப் பயன்படும் சிகிச்சையே பெருங்குடல் நீர் சிகிச்சை. ஒரு கருவியுடன் இணைக்கப்பட்ட டியூப், ஆசனவாய் வழியாகப் பெருங்குடல்வரை உள்ளே  விடப்பட்டு, லேசான அழுத்தத்துடன்  தண்ணீர் செலுத்தப்படும். அந்தத் தண்ணீர் குடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை அகற்றும்.  நம் உடலானது, உணவில் உள்ள சத்துகளை கிரகிப்பதுடன், பல்வேறு வழிகளில் கழிவுகளை வெளியேற்றும் பணியையும் செய்கிறது. காற்று, வியர்வை, மலம்  என பல்வேறு வகைகளில் கழிவுகள் வெளியேறுகின்றன. இயற்கையான முறையில் நமது உடலே கழிவுகளை வெளியேற்றிவிடும் என்றாலும், அவ்வப்போது அதில் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளன.

மலச்சிக்கல் ஒரு மனிதனின் இயக்கத்தை முற்றிலும் முடக்கிப்போட்டுவிடும். மனிதனின் இயல்பான செயல்பாட்டுக்குக் கழிவுகள் முறையாக வெளியேற வேண்டியது அவசியம். கழிவுகள் உடலிலேயே தங்கும்பட்சத்தில், கிருமிகள் உற்பத்தியாகி அவை ரத்தத்தில் கலந்துவிடும். அதனால், சருமப் பிரச்னைகள் ஏற்படும். எலும்புகள்  வலுவிழக்கும் வாய்ப்புகளும் உண்டு. பெருங்குடல் நீர் சிகிச்சை, கழிவுகளை முற்றிலும் அகற்றிவிடுவதால் கிருமிகள் உற்பத்தியாவது தடுக்கப்படுகிறது. மேலும், ஒட்டுமொத்தச் செரிமான மண்டலமும் சீராகும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

நிலம் முதல் ஆகாயம் வரை... - பெருங்குடல் நீர் சிகிச்சை

குடலில் தங்கியிருக்கும் கழிவுகளை அகற்ற இயற்கை மருத்துவத்தில் இன்னொரு சிகிச்சையும் உண்டு.  அதற்கு,  ‘எனிமா சிகிச்சை’  பெயர். இதுவும் பெருங்குடல் நீர் சிகிச்சையைப் போன்றது தான். ஆசனவாயில் சிறு கருவியைப் பொருத்தி அதன்வழியாகக் குடலுக்குள் நீரைச் செலுத்திச் செய்யப்படும் இந்தச் சிகிச்சை மூலமும் கழிவுகளை வெளியேற்ற முடியும். இந்தச் சிகிச்சையில் வெறும் நீர் மட்டுமல்லாமல் மூலிகைகளும் பயன்படுத்தப்படுகின்றன. எனிமா சிகிச்சை மூலம் குடலில் உள்ள கழிவுகள் மட்டுமின்றி,  ரத்தத்தில் உள்ள கழிவுகளும் அகற்றப்படும். மூலிகைகளைப் பயன்படுத்துவதால் குடலில் தங்கியுள்ள இறுகிப்போன கழிவுகளும் அகற்றப்பட்டு ஆரோக்கியம் மேம்படும்.

நிலம் முதல் ஆகாயம் வரை... - பெருங்குடல் நீர் சிகிச்சை


‘எனிமா’ சிகிச்சையில், சம்பந்தப்பட்டவரின் உடல்நிலைக்கேற்ப காபி, எப்சம் சால்ட் எனப்படும் மக்னீசியம் சல்பேட் (Magnesium Sulphate), எலுமிச்சைச் சாறு, பால் ஆகியவற்றை  நீருடன் சேர்த்துக் குடலுக்குள் செலுத்திச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கற்றாழை, மஞ்சள், வேப்பிலை, வெள்ளைப்பூண்டு, முடக்கத்தான், வாதநாராயணன், குப்பைமேனி போன்றவற்றின் சாறுகளையும் நீருடன் சேர்த்தும் எனிமா சிகிச்சை கொடுக்கலாம்.

காபிப்பொடியை (இன்ஸ்டன்ட் காபி வேண்டாம்) நீரில் போட்டுக் கொதிக்க வைத்து வெதுவெதுப்பான நிலையில் ஆசனவாயின் உள்ளே செலுத்தி எனிமா சிகிச்சை எடுத்துக் கொண்டால் கல்லீரலில் தேங்கியிருக்கும் நச்சுகள் அகற்றப்படும். தயிர் எனிமா எடுத்துக் கொள்வதால் ஆசனவாயில் ஏற்படும் எரிச்சல், மூலநோய், கடுமையான மலச்சிக்கல் நீங்கும். வீட்டில் தயாரிக்கும் தயிராக இருக்க வேண்டியது அவசியம். எலுமிச்சைச் சாறு பயன்படுத்தி எனிமா எடுத்தால் குடலில் உள்ள கழிவுகள் மிக எளிதாக வெளியேற்றப்படும்.  புத்துணர்ச்சி கிடைக்கும். நீருடன் மூன்றில் ஒரு பங்கு எலுமிச்சைச் சாறு சேர்த்து எனிமா சிகிச்சை கொடுக்க வேண்டும்.

நிலம் முதல் ஆகாயம் வரை... - பெருங்குடல் நீர் சிகிச்சை

வெள்ளைப்பூண்டுடன் எப்சம் சால்ட் சேர்த்துச்  சிகிச்சை அளிக்கவேண்டும். மூன்று பல் பூண்டைச் சிறிதாக நறுக்கி 350 மில்லி நீர் விட்டு ஐந்து நிமிடம் கொதிக்கவைத்து இறக்கி, இரண்டு டீஸ்பூன் எப்சம் சால்ட் சேர்க்க வேண்டும். வெதுவெதுப்பான நிலையில் இந்தக் கலவையால் எனிமா கொடுக்கலாம். இதன்மூலம் குடலில் இருக்கும் கிருமிகள் அழிக்கப்படும். சரும நோய்களும் குணமாகும். வெறும் உப்பை நீரில் கரைத்தும் சிகிச்சை அளிக்கலாம். ஒரு லிட்டர் நீரில் கைப்பிடி உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து வெதுவெதுப்பான சூட்டில் பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் சிறுநீர்ப்பையில் காணப்படும் தேவையற்ற நீர் மற்றும் உப்புகள் வெளியேறும். ஆண்டுக்கு ஒருமுறை இந்தச் சிகிச்சை எடுத்துக் கொண்டால் சிறுநீரகக் கோளாறுகள் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.

வேப்பிலையை நீரில் போட்டுக் கொதிக்கவைத்து எனிமா சிகிச்சை எடுத்துக்கொண்டால் சோரியாசிஸ், எக்ஸிமா  போன்ற சரும நோய்களிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ளலாம். மஞ்சள் பயன்படுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதுடன் கிருமிகள் வளர்வது தடுக்கப்படும். இஞ்சியைப் பயன்படுத்தி எனிமா கொடுத்தால்  தலைவலி, வாத நோய் குணமாகும். வீக்கங்கள் கரையும்.  கற்றாழை, குடலின் மென்மைத்தன்மையை மேம்படுத்த உதவும். பெருங்குடல் நீர் சிகிச்சை, எனிமா சிகிச்சை இரண்டையும் தகுதிவாய்ந்த மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே செய்யவேண்டும். சுயமாகச் செய்யக்கூடாது.

அடுத்த இதழில் டயட் தெரபி பற்றிப் பார்ப்போம்.

- எம்.மரியபெல்சின்