மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆறாவது மாதத்தில் குழந்தைக்கு சத்துமாவுக் கஞ்சி வேண்டாம்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 6

ஆறாவது மாதத்தில் குழந்தைக்கு சத்துமாவுக் கஞ்சி வேண்டாம்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 6
பிரீமியம் ஸ்டோரி
News
ஆறாவது மாதத்தில் குழந்தைக்கு சத்துமாவுக் கஞ்சி வேண்டாம்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 6

தனசேகர் கேசவலு குழந்தைகள்நல மருத்துவர்

பிறந்து ஐந்து மாதங்கள் வரை அம்மா மடியில் படுத்துக்கொண்டு கொலுசுக் கால்களை ஆட்டியபடி ‘ங்ஙா’ குடித்துக் கொண்டிருந்த குழந்தை இனி அரிசி, பருப்பு, காய்கறி என்று விதவிதமாக மம்மு சாப்பிடப் போகிறது. குழந்தைக்கு முதல் உணவாக என்னென்ன கொடுக்க வேண்டும்; எப்படிக் கொடுக்க வேண்டும்; என்னென்ன உணவுகளைக் கொடுக்கக்கூடாது; அதற்கு என்ன காரணம்? எல்லாவற்றையும் விரிவாகச் சொல்லட்டுமா?

குழந்தை நீர்த்தன்மை உணவான தாய்ப்பாலில் இருந்து திட உணவுக்கு மாறுகிற நேரம், அதன் வாழ்நாளில் மிக மிக முக்கியமானது. ஒவ்வோர் உணவாகத்தான் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.

ஆறாவது மாதத்தில் குழந்தைக்கு சத்துமாவுக் கஞ்சி வேண்டாம்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 6

முதல் உணவு எப்படி இருக்க வேண்டும்?

தாய்ப்பால் குடிக்கும்வரை குழந்தைகளின் வேலை ‘கடக் கடக்’ என்று விழுங்குவது மட்டும் தான். ஆனால், 6-வது மாதத்தில் குட்டீஸ்களுக்கு சுவை தெரிய ஆரம்பித்துவிடும் என்பதால், நீங்கள் கொடுக்கிற உணவை வாயில் வைத்து, உருட்டி, சுவைத்து விழுங்க ஆரம்பிப்பார்கள். அதனால் ஆறாம் மாதம் முதல் வாரத்தில் நீரைவிடக் கொஞ்சம் கெட்டியான அரிசிக் கஞ்சியை மசித்து, தாய்ப்பாலுடன் கலந்து தர வேண்டும்.

படுக்கவைத்து உணவு ஊட்டாதீர்கள்!

சில பாட்டிகள் குழந்தையை மடியில் போட்டுக் கொண்டு உணவு ஊட்டுவார்கள். இப்படிச் செய்யவே கூடாது. படுத்த நிலையில் இருக்கும்போது உணவுக் குழாய்க்குள் உணவைச் செலுத்த குழந்தைகள் சிரமப்படுவார்கள். மேலும், இதில், புரையேறும் ஆபத்தும் இருக்கிறது. யோசித்துப் பாருங்கள்... நம்மால் படுத்தபடி உணவை விழுங்க முடியுமா? அது எவ்வளவு சிரமமாக இருக்கும்? பின்னர் குழந்தையை மட்டும் அப்படிச் செய்யலாமா? எனவே, நாற்காலியிலோ அல்லது மடியிலோ குழந்தையை உட்கார வைத்துக்கொண்டு ஊட்டினால்தான் குழந்தையால் கஷ்டப்படாமல் அதன் முதல் உணவைச் சாப்பிட முடியும். குட்டிக் குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது மனதை நிறையச் செய்கிற ஓர் அனுபவம். அதைப் பொறுமையாகச் செய்யுங்கள். வெந்நீரில் போட்டு எடுத்த சின்ன டீஸ்பூனால் மட்டுமே குழந்தைகளுக்கு உணவு ஊட்டுங்கள்.

எவ்வளவு உணவு கொடுக்கலாம்?

குழந்தைகளின் சொப்பு வயிறு 50 முதல் 70 கிராம் எடை வரைதான் கொள்ளும். ‘ஒரே மாதத்தில் பிள்ளையைக் கொழுக் மொழுக் என்று ஆக்கிடறேன் பார்’ என்று அளவுக்கு மீறி உணவைத் திணிக்காதீர்கள். சாப்பாடு ஊட்ட ஆரம்பித்ததுமே பருப்பு சாதம், மோர் சாதம், காய் என்று விதவிதமாகத் தரக் கூடாது.

தாய்ப்பால் ஏற்கெனவே ஐந்து மாதங்கள் குழந்தைக்குப் பழக்கப்பட்ட உணவு. பாப்பாவுக்கு நீங்கள் புதிதாக ஊட்டிய உணவு அரிசிதான். இதை முதல் ஒரு வாரம் கொடுத்து வாருங்கள். இதற்குள் அரிசியானது பாப்பாவுக்கு ஏற்றுக்கொள்கிறதா என்று கண்டுபிடித்து விடமுடியும். பாப்பாவுக்கு அரிசி ஒவ்வாமை இருந்தாலும் கண்டுபிடித்துவிடலாம். அரிசியில் ஒவ்வாமை வருவதற்கு வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. இந்த விஷயத்தை ஒரு தகவலாக மட்டும்தான் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். பாப்பாவுக்குப் பச்சரிசி, புழுங்கல் அரிசி, கைக்குத்தல் அரிசி, பாஸ்மதி அரிசி, சிவப்பு அரிசி என்று எல்லா வகை அரிசிகளையும் கொடுக்கலாம். ஆனால், முதல் வாரத்தில் ஒரே வகை அரிசியை ஒரு வேளை மட்டும் அறிமுகப்படுத்துங்கள்.

ஆறாவது மாதத்தில் குழந்தைக்கு சத்துமாவுக் கஞ்சி வேண்டாம்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 6

* ஆறாம் மாதத்தின் இரண்டாம் வாரம், பாசிப்பருப்பு அல்லது துவரம்பருப்பைச் சாதத்துடன் வேகவைத்து, மசித்துத் தரலாம்.

* மூன்றாம் வாரம், நீர்க்காய்கறிகளை ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்துங்கள். தாய்ப்பால் குடிப்பது குறைகிற நேரத்தில் இப்படி நீர்க்காய்கறிகளைக் கொடுப்பதால் கஷ்டப்படாமல் டூ பாத்ரூம் போவார்கள்.

* அடுத்தது நம் நாட்டுப் பழங்கள் எல்லாவற்றின் சாற்றையும் கொடுக்க ஆரம்பியுங்கள். அப்படிக் கொடுக்கும்போது பழச்சாறு 50 மி.லி, தண்ணீர் 50 மி.லி எனக் கலந்து தர வேண்டும். ஃப்ரெஷ் ஜூஸ் ஜீரணிக்க நேரம் எடுக்கும் என்பதே காரணம்.

* நன்கு பழுத்த நம் பாரம்பர்ய வாழைப்பழங்களைக் கைகளால் மசித்து ஊட்டலாம். ஆப்பிளை இட்லிப் பாத்திரத்தில் ஆவியில் வேகவைத்து, தோலுரித்துக் கொடுக்கலாம்.

* முளைகட்டியப் பயறுகளை நன்கு வேகவைத்து அதன் தோல் வரைக்கும் மசிகிறபடி விரலால் நசுக்கி ஊட்டுங்கள். இதனையடுத்து, கேரட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு ஆகியவற்றை வேகவைத்து, தோலுரித்து, மசித்துக் கொடுங்கள்.

ஆறாவது மாதத்தில் குழந்தைக்கு சத்துமாவுக் கஞ்சி வேண்டாம்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 6


சத்துமாவுக் கஞ்சி கொடுக்கலாமா?

குழந்தையின் மணி வயிற்றுக்குள் இவ்வளவு புரதம் நிறைந்த கஞ்சி செரிப்பது மிகவும் கடினம். எனவே ஒன்பதாம் மாதத்தில் சத்துமாவுக் கஞ்சி வேண்டாமே!

உப்பு, சர்க்கரை, பசும்பால், பிஸ்கட்டும் வேண்டாமே!


உப்பும் சர்க்கரையும் அதிகம் சாப்பிட்டு வளர்வதே குழந்தைகளுக்குப் பிற்காலத்தில் டயபடீஸ் மற்றும் இதய நோய் வருவதற்குக் காரணம் என்று அறிவியல் சொல்கிறது.

சமீப வருடங்களில் டயபடீஸும் இதயக்கோளாறும் இருபதுகளிலேயே வருவதால் இந்த அறிவுரையைக் கொஞ்சம் சீரியஸாக எடுத்துக் கொள்ளுங்கள் அம்மாக்களே! ‘ஒரு வயசு வரைக்கும் உப்பும் சர்க்கரையும் சாப்பிடாத குழந்தை, அதன் பிறகு அவற்றைச் சாப்பிடுமா?’ என்று கேட்டால், ‘சாப்பிடும்’ என்பதுதான் என் பதில். சர்க்கரை என்றால் கருப்பட்டி, வெல்லம் எல்லாமே நோ. உப்பிலும் எந்த வகை உப்பும் கூடாது. இனிப்புச்சுவையைப் பழங்களின் மூலம் அறிமுகப்படுத்துங்கள். உப்புக்கு, நீர்க்காய்கறிகளில் இருக்கிற சோடியமும், தாது உப்புகளும் போதும்.

ஆறாம் மாதத்தில் என்னென்ன செய்வார்கள் குழந்தைகள்?

ஐந்தாவது மாதத்தில் கைகளில் பொருளை எடுக்கக் கற்றுக்கொண்ட குழந்தைகள், இந்த மாதம் கையில் எடுத்த பொருளை வாய்க்கு எடுத்துக் கொண்டு போக முடியும் என்பதைக் கண்டுபிடித்துவிடுவார்கள். ஒரு பொருளைக் கையில் பிடிப்பதற்கும் கற்றுக்கொள்வார்கள். அடுத்து, எடுத்த பொருளை வாய்க்குள் போட்டுக்கொள்வார்கள். அதனால், அவர்கள் தவழ்கிற பகுதிகளில் குழந்தைகளின் வாய்க்குள் போட்டுக் கொள்ளும்படியான சின்னச் சின்னப் பொருள்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். முக்கியமாகப் பட்டன் பேட்டரி.

பார்வைத் திறன், கேட்கும் திறன் அதிகமாகும். அறிமுகமில்லாதவர்களைக் கண்டு பயப்படுவார்கள். உதட்டைப் பிதுக்கிக்கொண்டு அழுவார்கள். மோஷன் போகும்போது அழுகிற பிரச்னை சரியாகிவிடும். இந்த மாதத்தில் இரவு நேரங்களில் அழகாக உறங்கி, உங்களையும் நிம்மதியாக உறங்கவிடுவார்கள்.

ஏழாம் மாதம் உங்கள் வீட்டு ஜூனியரை எப்படிக் கவனிக்க வேண்டும்? அடுத்த இதழில் சொல்கிறேன்.

(வளர்த்தெடுப்போம்!)

- ஆ.சாந்தி கணேஷ்