குட் நைட்!

'இருட்டான கானகம் போகப் போறேன்
சுருக்கா போக வழியுண்டா ஏகமஞ்சி

கண்ணைக் கொண்டுவந்து காலுல வையுடா
கருக்கிருட்டும் விலகி நிக்கும் பாதை விரியுண்டா’
- இது ஒரு பழம் பாடல். இந்தத் தொடருக்கும், இந்தப் பாட்டுக்கும் என்ன சம்பந்தம்? கடைசியில் சொல்கிறேன்.
பொதுவாக, குழந்தை வளர வளர அதன் பெற்றோர் ஒவ்வொன்றையும் சொல்லித் தருகிறார்கள். வாழ்வின் எல்லாவற்றையும் நாம் கற்றுக்கொள் கிறோம். ஆனால், செக்ஸைப் பற்றி யாரும் சொல்லித்தருவது இல்லை. அப்படி சொல்லித் தருவதில் அநாகரிகத்தை அட்வான்ஸ் இல்லாமல் குடிவைப்பது போல நினைக்கிறோம்.
வாழ்க்கையின் இருட்டுப் பக்கமாகவே நினைக்கிறார்கள் செக்ஸ் வாழ்க்கையை. அதனால்தான் அதைப் பற்றி சொல்லித்தரும் விஞ்ஞானபூர்வ வழிகாட்டியே இங்கே இல்லாமல் போய்விட்டது.
'நான் படித்த புத்தகத்தில்
சாந்தி இல்லையே...
அந்த அனுபவத்தை சொல்லித் தர
பள்ளி இல்லையே?’
- என்று பிலாக்கணம் வைக்கும் பிரஸ்டீஜ் பத்மநாபன்கள் நிறைய இருக்கிறார்கள்.
நம்முடைய முன்னோர்கள் இல்லறத்தில் ஈடுபட்டார்கள், பல குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள். ஆனால், அவர்களுடைய தாம்பத்ய வாழ்க்கை இனிமையானதாக இருந்ததா? செக்ஸில் எந்தவிதமான திருப்தியும் இல்லாமலேயே குழந்தை பெற்றுவிட முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
##~## |
செக்ஸ்பற்றி விலங்குகளுக்கு யார் சொல்லித் தந்தது என்கிற கேள்வியும் உண்டு. எந்தச் சிங்கமும் வலையபட்டி மேளம் முழங்க... சின்ன மௌலானா நாகஸ்வரம் வாசிக்க... ஊரைக் கூட்டி கல்யாணம் கட்டிக்கொள்வது இல்லை. விலங்குகள் சினையுறும் காலத்தில் (Breeding) மட்டுமே அவற்றுக்குரிய ஹார்மோன் சுரக்கும். அப்போது மட்டும் செக்ஸில் ஈடுபட்டு... அத்துடன் 'சுபம்’ போட்டுவிடும். அப்படி ஈடுபடும்போது உறவு, நட்பு, குட்டி என்றுகூட பார்க்காது; எதுவும் எதனுடனும் கூடும். ஆனால், மனிதன் விலங்கு அல்லவே. மனிதனுக்கு ஆயுளின் அந்தி வரை ஹார்மோன்கள் சுரந்துகொண்டே இருக்கும்.
மனிதன் சந்ததி உருவாக்கத்துக்கு மட்டும் செக்ஸில் ஈடுபடவில்லை. உடல் சுகத்துக்காகவும், உறவைப் பலப்படுத்திக்கொள்ளவும்கூட ஈடுபடுகிறார்கள். குழந்தைக்காக மட்டுமே செக்ஸ் என்றால்... குழந்தைகள் பிறந்த பிறகும்கூட ஏன் மீண்டும் மீண்டும் அதில் ஈடுபட வேண்டும்.
‘Sex is the most intimate form of interpersonal, non-verbal communication’ என்பார்கள். அதாவது, 'உன் மீது அன்பாக இருக்கிறேன்’ என்று சொல்லாமல் உணர்த்துவதுதான்... செக்ஸ்!
இன்னும் சிலர், 'சொல்லித் தெரிவது இல்லை மன்மதக் கலை’ என்பார்கள். பொய்யின் வாசலுக்குப் பொன் கதவு போட்ட கதை இது. உண்மையில் சொல்லித் தெரிவதுதான் மன்மதக் கலை. புதுமணத் தம்பதிகளுக்கும், இனிமேல் திருமணம் செய்துகொள்ள இருப்போருக்குமே... இந்தத் தொடர்.
முதலில் சொன்ன பாடலுக்கு வருகிறேன். 'கண்ணைக் கொண்டு வந்து காலுல வையுடா’ என்று காட்டுக்குள் நுழைய தைரியம் நெய்து தருவதைப் போல... இந்த 'குட் நைட்’ தொடர் ஒளிகாட்டும்!
- இடைவேளை