
டி.நாராயண ரெட்டி செக்ஸாலஜிஸ்ட்ஹெல்த்
செக்ஸ்... ஒவ்வொருவரும் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டிய படுக்கையறைப் பாடம். குழந்தைக் காகவும் இன்பத்துக்காகவும் மட்டும் தானா செக்ஸ்? வேறு காரணங்கள் இருக்கின்றனவா? பூமியில் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு செல் உயிர்கள் தோன்றின. அவற்றில் ஆண்-பெண் பேதம் கிடையாது. `ஏசெக்ஸுவல்’ (Asexual) என்ற முறையில்தான் அவை இனப்பெருக்கம் செய்தன. அதாவது, ஒரு செல் பிரிந்து இரண்டு செல்களாவதே ஏசெக்ஸுவல் இனப்பெருக்கம். பல நுண்ணுயிர்கள் இன்றும் அப்படித்தான் இனப்பெருக்கம் செய்கின்றன. இதை `காப்பி அண்டு டிவைடெட்’ (Copy and Divided) என்று சொல்வார்கள். இதுதான் மிக எளிமையான இனப்பெருக்க முறை.

மனிதர்களைப் பொறுத்தவரை, இணையைத் தேடி, காதலித்து, திருமணம் செய்து, உடலுறவில் ஈடுபட்டுக் குழந்தைகள் பெற்றுக்கொள்வது கடினமான, காலம் தாழ்த்தும் செயல். இவ்வளவு கடினமான ஆண்-பெண் உடலுறவை உயிரினங்கள் தேர்வு செய்ததற்கான காரணம் என்ன, அதற்கான அவசியம் என்ன? உடலுறவு என்பது வெறும் உடல் சார்ந்த விஷயம் மட்டுமல்ல; அன்பு, காதல், உணர்வு, ஸ்பரிசம், குடும்பம் என காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். கணவன் - மனைவி இடையே சண்டை வந்தால், பெரும்பாலும் சமாதானம் செய்வதும் தாம்பத்ய உறவே.
1886-ம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான அகஸ்ட் வீஸ்மேன், ``செல்கள் பிரிந்து நடக்கும் இனப்பெருக்கத்தில் ஒரு முக்கியமான பிரச்னை இருக்கிறது. தாய் செல்லுக்கு இருக்கும் மரபு ரீதியான நோய்கள், பிரச்னைகள், சேய் செல்லுக்கும் கடத்தப்படும். இரண்டு தனித்தனி உயிர்களின் மாறுபட்ட டி.என்.ஏ.க்கள் ஒன்றிணைந்து, ஓர் உயிரை உருவாக்கும் போது மரபு நோய்கள் கடத்தப்படுவது குறைக்கப்படுகின்றன’’ என்று கூறினார். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஸ்டெர்லிங் என்ற ஆராச்சியாளர், ``ஒரு நோய் வந்தால், அதைத் தடுக்கும் ஆற்றல், ஆண்-பெண் உடலுறவின் மூலம் பிறக்கும் உயிரினங்களுக்கே அதிகமாக இருக்கிறது’’ என்கிறார்.

ஹவாயைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் எலைன் ஹேட்ஃபீல்ட் (Elaine Hatfield), ``ஓர் ஆணும் பெண்ணும், ஒருவரை ஒருவர் பார்த்து, நேசித்து, குழந்தை பெற்றுக்கொள்ளும்போது அவர்களின் சந்ததிகளின் ஆயுள் நீடிக்கும்’’ என்கிறார். என்னென்ன காரணங்களுக்காக செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக, 2010-ல் `Sexuality and Culture’ என்ற இணையதள ஆய்வு ஒன்றை நடத்தினார்கள். இந்த ஆய்வில் பங்கு பெற்றவர்களின் பதில்கள் வெவ்வேறு விதமாக இருந்தன. நல்ல மனநிலைக்காக, சோகத்தைக் குறைக்க, கடமைக்காக, தன்னம்பிக்கையை அதிகரிக்க, தன் இணை மேலுள்ள காதல், அன்பின் தேவைக்காக, இணையிடமிருந்து இன்பம் பெறுவதற்காக, ஆர்வத்துக்காக.... இப்படிப் பல பதில்கள். இதில் வெகு சிலரே குழந்தைக்காக என்று சொல்லியிருந்தார்கள்.

டெக்ஸாஸ் பல்கலைக்கழக ஆய்வொன்று, ஆண்-பெண் உறவுக்கான காரணத்தை நான்காகப் பிரித்திருக்கிறது. அவை உடல் ரீதியான காரணங்கள்; உணர்வை மையமாகக் கொண்ட காரணங்கள்; சுயநலத்துடன் உறவில் ஈடுபடுவது; கணவனும் மனைவியும் விரும்பி உறவில் ஈடுபடுவது. பொதுவாக, ஆண்கள் உடல் ரீதியான இன்பத்துக்காகவே செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள். ஆனால், பெண்கள் உறவுக்காகவும், தன் காதலை வெளிப்படுத்து வதற்காகவும் செக்ஸ் வைத்துக்கொள்கிறார்கள்.
செக்ஸ் ஏன் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை முதலில் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். கணவன் மனைவி தாம்பத்ய உறவில் பிரச்னை வருவதற்கு மூல காரணமே செக்ஸ் தான். செக்ஸ் பற்றி எவ்வளவு தெரிகிறது என்பதே, திருமண வாழ்க்கையின் இன்பதுன்பங்களைத் தீர்மானிக்கிறது. செக்ஸ் பற்றி முழுவதுமாகத் தெரிந்துகொண்டால், தாம்பத்ய வாழ்க்கை தித்திக்கும்!
(இன்னும் கற்றுத் தருகிறேன்...)
- மு.இளவரசன்