ஹெல்த்
Published:Updated:

நல்லனவெல்லாம் தரும் நாட்டுக்காய்கறிகள்

நல்லனவெல்லாம் தரும் நாட்டுக்காய்கறிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
நல்லனவெல்லாம் தரும் நாட்டுக்காய்கறிகள்

நல்லனவெல்லாம் தரும் நாட்டுக்காய்கறிகள்

நல்லனவெல்லாம் தரும் நாட்டுக்காய்கறிகள்

`மேலை நாட்டுக் காய்கறிகளில் வைட்டமின்கள் அதிகமாக நிறைந்திருக்கின்றன’ என்று நம்மில் பலர் ஆங்கிலக் காய்கறிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். அதே நேரத்தில் நம் மண் மணத்தோடு, மகத்துவமும் நிறைந்த நாட்டுக்காய்கறிகளைப் பலரும் நினைத்துப் பார்ப்பதே இல்லை என்பதே உண்மை. நாட்டுக்காய்கறிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மருத்துவ குணம் கொண்டவை. பல நோய்களுக்கு நல்ல தீர்வைக் கொடுப்பவை.

நல்லனவெல்லாம் தரும் நாட்டுக்காய்கறிகள்

``இன்று பெரும்பாலான மக்களுக்கு கத்திரிக்காய் பொரியலும் கோவைக்காய் பொரியலும் தெரியாமலேயே போய்விட்டன. அதோடு, இப்போதிருக்கும் காய்கறிகளில் பெரும்பாலானவை வீரியரகக் காய்கறிகளாக மாற்றப்பட்டுவிட்டன. ஆனால், காய்கறிச் சந்தைகளில் எங்கோ ஓரிடத்தில் இன்னும் நாட்டுக்காய்கறிகள் விற்பனையாகிக்கொண்டுதான் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றிலும் அற்புதமான மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன’’ என்கிற சித்த மருத்துவர் வீரபாபு, நாட்டுக்காய்கறிகள் ஒவ்வொன்றின் சிறப்புகளையும் விளக்குகிறார்.

நல்லனவெல்லாம் தரும் நாட்டுக்காய்கறிகள்
நல்லனவெல்லாம் தரும் நாட்டுக்காய்கறிகள்

கத்திரிக்காய்

த்திரிக்காயில் குண்டுக் கத்திரி, முள்ளுக் கத்திரி என ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட ரகங்கள் உள்ளன. ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு மணமும் குணமும் உண்டு. அலர்ஜி இருப்பவர்கள் தவிர அத்தனை பேரும் நாட்டுக் கத்திரிக்காய் வகைகளைப் பயன்படுத்தலாம். இதன் விதைகள் சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைத்திருக்கும் தன்மைகொண்டவை. இது, குறைந்த கலோரியும் அதிக நார்ச்சத்தும் கொண்டது. உடல் எடையைக் குறைக்கவும், கொழுப்பைக் குறைக்கவும் உதவும். கத்திரியின் கருநீலத் தோலிலிருக்கும் பாலிபீனால்களில் கிடைக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், புற்றுநோய் வராமல் தடுக்கவும் உதவும்.

நல்லனவெல்லாம் தரும் நாட்டுக்காய்கறிகள்

வெண்டைக்காய்

`ஆ
பிஸ்’ எனும் ஒட்டு வெண்டையைத்தான் இன்று பெரும்பாலும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம். ஆனால், பாரம்பர்ய ரகமான கஸ்தூரி வெண்டை நரம்பை வலுப்படுத்தும் திறன்கொண்டது. இதுபோன்ற பலன்கள் ஆபிஸ் வெண்டைக்காயில் கிடைக்காது. பாரம்பர்ய ரகமான கண்ணாடி, கஸ்தூரி, சிவப்பு எனப் பல வகைகள் இருந்தன. அவையெல்லாம் இன்றைக்கு அழிவின் விளிம்பில் இருக்கின்றன. வெண்டைக்காய் உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுத்து, வயிற்றுப் புண்ணை நீக்கும். அதிகமாக உட்கொண்டால் மலச்சிக்கல், வாதம் ஆகியவற்றை உண்டாக்கும். இதை வதக்காமல், வேகவைத்துச் சாப்பிடுவது உடலுக்கு நன்மை தரும்.

நல்லனவெல்லாம் தரும் நாட்டுக்காய்கறிகள்

அவரைக்காய்

வரைக்காய் கொலஸ்ட்ராலைக் குறைத்து, உடலுக்குத் தேவையான புரதத்தையும், வைட்டமின் பி சத்தையும் தரும். அவரையிலிருக்கும் பிசின் (Guar Gum) வயிற்றுப்போக்கையும், ரத்தத்திலிருக்கும் கொழுப்பையும் குறைக்கும். அவரைக்காயின் விதை ஆண்மைக்குறைவுப் பிரச்னைக்கு நிவாரணம் தரும். இந்தக் காயைத் தொடர்ந்து பயன்படுத்தினால் பித்தம் அதிகரிக்கும்.

நல்லனவெல்லாம் தரும் நாட்டுக்காய்கறிகள்

வெள்ளைப் பூசணி

வெ
ள்ளைப் பூசணியில் கலோரி குறைவாகவும் நீர்ச்சத்து அதிகமாகவும் இருக்கிறது. இதிலிருக்கும் நீர்ச்சத்து, உடல் எடையைக் குறைக்க உதவும். அதோடு, உடலிலிருக்கும் நச்சு நீரை வெளியேற்றிவிடும். வெள்ளைப் பூசணிச் சாறு உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; பித்தப்பைக் கற்கள் வெளியேறவும் பயன்படும். இதில் வைட்டமின் பி, சி-யுடன் கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. இது, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலை குணப்படுத்த உதவும். நரம்பு மண்டலத்தைச் சீராக வைத்திருக்கும். குடல்களில் உள்ள புழுக்களை வெளியேற்ற உதவும். உடலுக்குக் குளிர்ச்சி என்பதால், கோடைக்காலத்தில் அதிகமாகச் சாப்பிடலாம். சிறுநீரகம், கல்லீரல், குடல் போன்ற முக்கிய உறுப்புகளைச் சுத்தம் செய்யும்.

நல்லனவெல்லாம் தரும் நாட்டுக்காய்கறிகள்

கோவைக்காய்

கொ
டி வகையைச் சேர்ந்த கோவையின் காய், இலை, தண்டு, கிழங்கு அனைத்துமே மருத்துவ குணம் கொண்டவை. இது உடல் சூட்டைத் தணிக்கும். கரப்பான் நோய்க்கு நல்ல தீர்வு தரும். ஆனால், கோவைக்காய் என்றால் பலரும் முகம் சுளிப்பதுண்டு. இது, கடைகளில் விலை மலிவாகக் கிடைக்கும் காய் வகைகளில் ஒன்று. இது சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இதை பச்சையாகவோ, கூட்டு, பொரியல் என சமைத்தோ சாப்பிடலாம்.

நல்லனவெல்லாம் தரும் நாட்டுக்காய்கறிகள்

சுரைக்காய்

சு
ரைக்காயில் வைட்டமின் பி மற்றும் சி சத்துகள் அதிகமாக உள்ளன. பாதங்களில் ஏற்பட்ட எரிச்சல் நீங்க, அந்த இடத்தில் சுரைக்காயின் சதைப் பகுதியை துணியில் வைத்துக் கட்டலாம். தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் கல் அடைப்பைப் போக்கும். இது உடல்சூட்டைத் தணித்து, உடலுக்குக் குளிர்ச்சி தரும். உடலிலிருக்கும் பித்தத்தையும் வெப்பநிலையையும் சமமாக வைத்திருக்க உதவுவதால் இந்தக் காயை `பித்த சமனி’ என்றும் சொல்வதுண்டு. இது சிறுநீர்ப் பெருக்கத்தைத் தூண்டி, சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். ஆண்மைக் குறைபாடு பிரச்னைக்குத் தீர்வு தரும்.

நல்லனவெல்லாம் தரும் நாட்டுக்காய்கறிகள்

பீர்க்கங்காய்

பீர்
க்கங்காயின் இலை, விதை, வேர் என அனைத்துமே மருத்துவ குணம் நிறைந்தவை. சர்க்கரை நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாக இதை உட்கொள்ளலாம். இது வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது என்பதால், இதிலிருக்கும் கனிமச் சத்துகள் உடல் சூட்டைப் போக்கி, சிறுநீர் எரிச்சலையும் போக்கும். சொறி, சிரங்கு இருக்கும் இடங்களில் இதன் இலைச்சாற்றைத் தடவினால் உடனடி நிவாரணம் கிடைக்கும். ஆனால் தொடர்ந்து சாப்பிட்டால் பித்தம் அதிகமாகும். பீர்க்கங்காய் இலைகளைச் சாறாக்கி, சிறிது நேரம் சூடுபடுத்தி, ஒரு டீஸ்பூன் வீதம் சில நாள்கள் சாப்பிட்டுவந்தால், சர்க்கரைநோய் கட்டுக்குள் இருக்கும்.

நல்லனவெல்லாம் தரும் நாட்டுக்காய்கறிகள்

முருங்கைக்காய்

மு
ருங்கையில் முட்டைக்கு இணையான புரதச்சத்து இருக்கிறது. பாலைவிட நான்கு மடங்கு கால்சியமும் இதில் உண்டு. முருங்கையில் வாழைப்பழத்தைவிட அதிகமாக பொட்டாசியம் இருக்கிறது. மற்ற கீரைகளைவிட இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. வைட்டமின் ஏ சத்துக் குறைபாட்டால் ஏற்படும் பார்வைக் குறைபாட்டையும் இது சரிசெய்யும். ஆரஞ்சைவிட அதிகமாக வைட்டமின் சி முருங்கையில் உண்டு. விந்தணுவைப் பெருக்குவதில் இதற்கு முக்கியப் பங்கு இருக்கிறது. உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முருங்கைக்கீரையை உணவில் தினமும் சேர்த்துக்கொள்ளலாம். சர்க்கரைநோய், சோர்வு, நரம்புத் தளர்ச்சி போன்றவற்றைக் கட்டுக்குள் வைத்திருக்க முருங்கை உதவும்.

நல்லனவெல்லாம் தரும் நாட்டுக்காய்கறிகள்

முள்ளங்கி

சி
றுநீரகக் கல் அடைப்பைப் போக்குவதில் முள்ளங்கிக்குப் பெரும் பங்கு உண்டு. இதில் சிவப்பு முள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி, மஞ்சள் முள்ளங்கி, சுவர் முள்ளங்கி என நான்கு வகைகள் உள்ளன. நாம் அதிகம் பயன்படுத்துவது வெள்ளை, சிவப்பு முள்ளங்கிகளைத்தான். சிவப்பு முள்ளங்கி சிறுநீரகத்துக்கு நல்லது. இதைப் பச்சையாக உட்கொண்டால் தொண்டையில் எரிச்சலை ஏற்படுத்தும். அதனால் வேகவைத்துச் சாப்பிடுவதே சிறந்தது. இது, தாகத்தைத் தணிக்கும் தன்மை கொண்டது. வயிற்றில் ஏற்படும் எரிச்சலுக்கும் இது சிறந்த நிவாரணி. முள்ளங்கிக்கீரையுடன் பருப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி, தசைவலி, நீர்க்கடுப்பு ஆகியவை கட்டுப்படும். பெண்களுக்கு ஏற்படும் மார்பக நோய்களுக்கும், மாதவிடாய்ப் பிரச்னைகளுக்கும் முள்ளங்கி நல்ல தீர்வு தரும்.

நல்லனவெல்லாம் தரும் நாட்டுக்காய்கறிகள்

சர்க்கரைவள்ளிக்கிழங்கு

ர்க்கரைநோய் உள்ளவர்கள் அளவாகச் சாப்பிடவேண்டிய கிழங்கு இது. இதிலிருக்கும் வைட்டமின் பி 6 கணையச் செல்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதிலும், கணையப் புற்றுநோயை வளரவிடாமல் தடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. சர்க்கரைவள்ளிக்கிழங்கு கெட்ட கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.

நல்லனவெல்லாம் தரும் நாட்டுக்காய்கறிகள்

சின்ன வெங்காயம்

சி
ன்ன வெங்காயத்திலிருக்கும் பொட்டாசியம், ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். வயிற்றுப்புண், வெள்ளைப்படுதல், கண் நோய் போன்ற பாதிப்புகளுக்கு நிவாரணம் தரும். கால்சியம், வைட்டமின் பி 6, வைட்டமின் சி, சல்பர் போன்ற சத்துகளை அதிகமாகக் கொண்டது. இதிலிருக்கும் ஃபிளேவனாய்டுகள் (Flavonoids) பாக்டீரியாவுக்கு எதிராகச் செயல்படுபவை. இதிலிருக்கும் வைட்டமின் பி6, மூளை, நரம்புகள், ரத்தக்குழாய்கள் ஆகியவை சிறப்பாகச் செயல்பட உதவும். கணையத்துக்கு உள்ளே இருக்கும் செதிலில் பசை அல்லது அழுக்கு சூழ்ந்திருந்தால் இன்சுலின் சுரக்காது. அதை இயல்பான நிலைக்கு மாற்றி, சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க சின்ன வெங்காயம் உதவும்.

நல்லனவெல்லாம் தரும் நாட்டுக்காய்கறிகள்

வெள்ளைப் பூண்டு

மூ
ன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல், இருமல், மலக் கிருமிகளால் ஏற்படும் தொற்று போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால், வெள்ளைப் பூண்டை அரைத்து அதில் துளி அளவை எடுத்து, அவர்களின் நாக்கில் தடவினாலே நிவாரணம் கிடைத்துவிடும். கழலை, மரு போன்றவற்றை நீக்குவதற்கும் பூண்டு கைகொடுக்கும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். தலையில் பூச்சிவெட்டு ஏற்பட்டு முடி உதிர்வதைத் தடுக்கவும் இது உதவும். பூண்டுத்தோல் 50 கிராம் எடுத்து, தேங்காய் எண்ணெயில் நன்கு வறுத்து, அதை அரைத்து, மறுபடியும் அதே எண்ணெயில் மைபோலக் கலந்து, பூச்சிவெட்டு இருக்கும் இடத்தில் தடவிவந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

நல்லனவெல்லாம் தரும் நாட்டுக்காய்கறிகள்

மரவள்ளிக்கிழங்கு

த்தத்திலிருக்கும் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்க இது உதவும். ஞாபகமறதி நோய் கட்டுக்குள் வர மரவள்ளிக்கிழங்கு உதவும். உடலிலிருக்கும் நீரின் சமநிலையைப் பாதுகாக்கும். இது எளிதில் செரிமானமாகும் தன்மை கொண்டது. மரவள்ளிக்கிழங்கு கஞ்சிவைத்துக் கொடுத்தால் குழந்தையின் எடை நாளடைவில் அதிகரிக்கும்.

நல்லனவெல்லாம் தரும் நாட்டுக்காய்கறிகள்

தக்காளி

ம் வீட்டு அன்றாடச் சமையலில் முக்கிய இடம் பிடித்திருப்பது தக்காளி. மலிவு விலையிலும் கிடைக்கும். திடீரென மலைபோல விலை உயர்ந்து மக்களைத் திக்குமுக்காடவும் செய்யும். புற்றுநோயை வராமல் தடுக்கவும், புற்றுநோய் இருந்தால் அதை மேலும் பரவாமல் தடுக்கும் தன்மையும் தக்காளிக்கு உண்டு. இதை பச்சையாகவும், சட்னி, தொக்கு எனப் பல வழிகளில் சமைத்தும் சாப்பிடலாம். எப்படிச் சாப்பிட்டாலும் தக்காளியின் நன்மை நமக்குக் கிடைத்துவிடும். இதை உணவில் சேர்த்துக்கொண்டால் பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் ஆகியவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

நல்லனவெல்லாம் தரும் நாட்டுக்காய்கறிகள்

வாழைக்காய்

வா
ழைக்காய் பசியை அடக்கும். இத்துடன் மிளகு, சீரகம் சேர்த்துச் சமைப்பது நல்லது. இதன் மேல் தோலை மெலிதாகச் சீவியெடுத்துவிட்டு உட்புறத் தோலுடன் சமைத்தால், தோலிலிருக்கும் சத்துகள் உடலுக்குக் கிடைக்கும். இதில் ஆப்பிளைவிட நான்கு மடங்கு அதிகப் புரதம், இரண்டு மடங்கு அதிக கார்போஹைட்ரேட், மூன்று மடங்கு அதிக பாஸ்பரஸ், ஐந்து மடங்கு அதிக வைட்டமின் ஏ, இரும்புச்சத்து இரு மடங்கு உள்ளன. வாழைக்காயைச் சிறிதளவு சாப்பிட்டாலே உடலுக்குத் தேவையான சக்தி கிடைத்துவிடும். இது ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும். இதிலிருக்கும் நார்ச்சத்து செரிமானத்துக்கு உதவும். இதிலுள்ள மாவுச்சத்து உடலுக்கு அதிக ஆற்றலைத் தரும்.

நல்லனவெல்லாம் தரும் நாட்டுக்காய்கறிகள்

பாகற்காய்

பா
கற்காய் செடியின் இலைகளை நீரில் கொதிக்கவைத்து, அதை தினமும் குடித்துவந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ரத்தத்திலிருக்கும் சர்க்கரையின் அளவைக் குறைக்கும். பாகற்காய் ஜூஸ் குடித்துவந்தால் கல்லீரல் பிரச்னைகள் நீங்கும். பாகற்காயிலிருக்கும் ஆன்டிஆக்ஸிடன்டுகள் உடலிலிருக்கும் நச்சுகளை வெளியேற்றும். மேலும் உடலின் வளர்சிதை மாற்றம் மற்றும் செரிமான மண்டலத்தின் செயல்பாடுகளை அதிகரிக்கச் செய்து, உடல் எடையைக்  குறைக்க உதவும். இதை உணவில் அதிக அளவில் சேர்த்து வந்தால் ஆஸ்துமா, இருமல், சளி ஆகியவை குணமாகும். வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துகள் பாகற்காயில் நிறைந்திருக்கின்றன. இதில் கலோரிகள் குறைவாக இருக்கின்றன.

நல்லனவெல்லாம் தரும் நாட்டுக்காய்கறிகள்

புடலங்காய்

நீ
ர்ச்சத்து அதிகமாக இருப்பதால், சூடான தேகம் கொண்டவர்கள் இதை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். உடலுக்குக் குளிர்ச்சி தரும். தொடர்ந்து புடலங்காய் சாப்பிட்டு வந்தால் தேகம் பொலிவடையும். இது எளிதில் செரிமானமாகி நல்ல பசியை ஏற்படுத்தும். இதில் அதிக அளவிலிருக்கும் தாதுச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் கரோட்டீன்கள் முடி மற்றும் சரும ஆரோக்கியத்தைக் காக்க உதவுபவை. வெயில் காலத்தில் புடலங்காயை உட்கொள்வது உடலுக்கு இதம் தரும். இது வாதம், பித்தம், கபம் பிரச்னைகளைத் தீர்க்கும்.

நல்லனவெல்லாம் தரும் நாட்டுக்காய்கறிகள்

பரங்கிக்காய்

தில் வைட்டமின் சி, ஈ, பீட்டாகரோட்டின், ரிபோஃபிளேவின், பொட்டாசியம், நியாசின், வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகியவை இருக்கின்றன. இது, பார்வைத்திறனை மேம்படுத்தும்; கிட்டப்பார்வை, தூரப்பார்வை குறைபாடுகளைச் சீராக்கும். உயர் ரத்த அழுத்த நோயாளிகள் அவசியம் உண்ணவேண்டிய காய் இது. புற்றுநோய் தாக்கும் வாய்ப்புகளைக் குறைக்கவும் உடல் எடை அதிகரிக்கவும் இது உதவும். உடல் தசைகளை வலுவாக்கும். சருமம் பொலிவாக இருக்க உதவும். இதய நோய்களைத் தடுக்கும். நல்ல தூக்கத்தைக் கொடுக்கும். கர்ப்ப காலத்தில் இதை உட்கொள்ளும் பெண்களின் கருவுக்கு ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.

நல்லனவெல்லாம் தரும் நாட்டுக்காய்கறிகள்

சேப்பங்கிழங்கு

வை
ட்டமின் ஏ, ஈ இருப்பதால் இது சருமத்துக்கு நல்லது. மேலும் வைட்டமின் ஏ, சி, ஈ, ஃபோலேட், மக்னீசியம், காப்பர் நிறைந்திருப்பதால், சருமப் புண்கள், காயங்கள், சருமப் பிரச்னைகள் நீங்க இதைச் சாப்பிடலாம். வாய் மற்றும் நுரையீரல் புற்றுநோயைத் தடுக்கும். முழங்கால், முழங்கைகளில் ஏற்படும் மூட்டு வீக்கத்தைக் கட்டுப்படுத்தும். அமினோ அமிலம், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஆகிய சத்துகள் இதில் இருக்கின்றன. பாலூட்டும் தாய்மார்களுக்குத் தேவையான சத்துகளைக் கொடுக்கும். பரங்கிக்காயைப்போலவே சேப்பங்கிழங்கும் உடல் எடையை அதிகரிக்கச் செய்யும். உடலிலுள்ள நச்சுகளையும் வெளியேற்றும் தன்மை கொண்டது. வயது மூப்பினால் ஏற்படும் பார்வைக்குறைபாட்டைத் தடுக்கும். உடலிலுள்ள தசைகள், எலும்புகளை வலுவாக வைத்திருக்கும். உயர் ரத்த அழுத்தத்தைச் சீராக்கும். இதய நோய்கள் வராமல் காக்கும்.

நல்லனவெல்லாம் தரும் நாட்டுக்காய்கறிகள்

வாழைப்பூ

ர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல தோழன் வாழைப்பூ. இதிலிருக்கும் இரும்புச்சத்து ரத்தச்சோகையைக் குணமாக்கும். மாதவிலக்கு நாள்களில் ஏற்படும் வயிற்றுவலியைத் தடுக்கும். பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட்டுவர, பால் அதிகமாகச் சுரக்க உதவும். கர்ப்பிணிகள் வாரம் இருமுறை சாப்பிட்டுவர, குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கும். கர்ப்பப்பை ஆரோக்கியமாகும். மாதவிடாய்ப் பிரச்னைகளையும் கர்ப்பப்பை நோய்களையும் சரிசெய்யும். சுவாசப்பாதை சீராகும். அல்சர் பிரச்னைகள் தீரும். மலச்சிக்கலைத் தீர்க்கும். இதிலிருக்கும் மக்னீசியம், உயர் ரத்த அழுத்தத்தைச் சீராக்க உதவும். சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

நல்லனவெல்லாம் தரும் நாட்டுக்காய்கறிகள்

இஞ்சி

ஞ்சியில் வைட்டமின் ஈ, மக்னீசியம் நிறைந்துள்ளன. வாந்திக்கு இஞ்சி சிறந்த நிவாரணி. பசியின்மை, ஏப்பம் போன்றவற்றையும் இது சரிசெய்யும்; வயிறு தொடர்பான புற்றுநோயைத் தடுத்து, குடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்; மலச்சிக்கலைப் போக்கும்; ஒற்றைத் தலைவலியையும் குறைக்கும்; சளி, தும்மல், இருமல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும்; நெஞ்சு எரிச்சலைச் சரிசெய்யும்; சுவாசப் பிரச்னைகளைச் சீராக்கும். உடல் எடையைப் பராமரிக்க உதவும். மாதவிலக்கு நேரங்களில் ஏற்படும் வலியைக் குறைக்கும். இது ஒரு சிறந்த நச்சுநீக்கி. இதிலிருக்கும் ‘ஜிஞ்சரால்’ எனும் சத்து, செரிமான மண்டலத்தைச் சீராக்கும்.

நல்லனவெல்லாம் தரும் நாட்டுக்காய்கறிகள்

கொத்தவரங்காய்

கு
றைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் இருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு இது சிறந்த உணவு. இது, கெட்ட கொழுப்பைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை வலுவாக்கும். உடலில் ரத்த உற்பத்தியைச் சீராக வைத்திருக்க உதவும். இதில் கால்சியம், பாஸ்பரஸ் அதிகமிருப்பதால், எலும்புகளை உறுதிப்படுத்தும். உடலிலுள்ள நச்சுகளை முழுதாக வெளியேற்றி, மலச்சிக்கலைத் தீர்க்கும். மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். இதில் வைட்டமின் ஏ, பி, கே, கால்சியம், இரும்புச்சத்து, ஃபோலேட், பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன. இதில் ஃபோலிக் அமிலம் நிறைந்திருப்பதால், கர்ப்பிணிகள் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

நல்லனவெல்லாம் தரும் நாட்டுக்காய்கறிகள்

வாழைத்தண்டு

பை
ட்டோகெமிக்கல்ஸ் சத்துகள் நிறைந்த வாழைத்தண்டு அல்சரைத் தடுக்கும். வைட்டமின் ஏ, பி 6, சி, ஃபோலேட்ஸ், நியாசின் ஆகியவையும் வாழைத்தண்டில் இருக்கின்றன. சிறுநீரகம், பித்தப்பை ஆகியவற்றில் உள்ள கற்களை இது கரைக்கும். ரத்தச்சோகை, நாள்பட்ட இதய நோய், நரம்பு மண்டலப் பிரச்னை உள்ளவர்களுக்கு வாழைத்தண்டு சிறந்தது. உயர் ரத்த அழுத்தம், அதிகப்படியான இதயத் துடிப்பு ஆகியவற்றைக் கட்டுக்குள் கொண்டுவந்து இதயத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். இதில் நார்ச்சத்து அதிகம். வைட்டமின் ஏ சத்து அதிகமாக இருப்பதால், கண்களுக்கும் மிகவும் நல்லது. இதில் உள்ள மக்னீசியம் சத்து, எலும்புகளை வலிமையாக வைத்திருக்க உதவும். கர்ப்பிணிகள் வாரம் ஒருமுறை இதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். உடலிலுள்ள தொற்றுகள், கழிவுகள் முற்றிலுமாக வெளியேறும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு வாழைத்தண்டு சிறந்த தீர்வு தரும்.

நல்லனவெல்லாம் தரும் நாட்டுக்காய்கறிகள்

மாங்காய்

மா
ங்காய் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்தி, கோடையில் ஏற்படும் பல்வேறு நோய்களின் தாக்குதல்களில் இருந்து உடலைப் பாதுகாக்கும். மாம்பழத்தில் கலோரிகளும் சர்க்கரையும் அதிகமாக உள்ளன. மாங்காயில் கலோரிகள் இல்லை. எனவே, எடையைக் குறைக்க நினைப்பவர்கள் மாங்காயைச் சாப்பிடலாம். அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் உள்ளவர்களும் மாங்காய் சாப்பிடலாம். கர்ப்பிணிகளுக்குக் காலையில் ஏற்படும் சோர்வு மற்றும் வாந்தியைக் குறைக்கும். மாங்காயிலிருக்கும் வைட்டமின் சி சத்து, ரத்த நாளங்களின் நீட்சித்தன்மையை அதிகரிக்கும்; புதிய ரத்த அணுக்களின் உற்பத்திக்கும் உதவும். கோடையில் வியர்வையின் மூலம் உடலிலிருந்து உப்புச்சத்து அதிகம் இழக்கப்படுவது தடுக்கப்படும்.

நல்லனவெல்லாம் தரும் நாட்டுக்காய்கறிகள்

மஞ்சள் கிழங்கு

ஞ்சள் கிழங்குகள் கார்ப்பு, கசப்புச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டவை. தமிழகமெங்கும், சமவெளிப் பகுதிகள் மற்றும் மலைச்சரிவுகளில் உணவு மற்றும் மருத்துவப் பயன்பாடுகளுக்காக இது பயிர் செய்யப்படுகிறது. இது கல்லீரலைப் பலப்படுத்தும். பசியை அதிகரிக்கும். குடல் வாய்வுக்கு நிவாரணம் கொடுக்கும். வீக்கம், கட்டி ஆகியவற்றைக் கரைக்கும் திறன்கொண்டது. மிகச்சிறந்த கிருமி நாசினி, மஞ்சள்.

மஞ்சள் கிழங்குகள், பளிச்சிடும் மஞ்சள் நிறத்துடனும் நறுமணத்தோடும் காணப்படும். உலர்ந்த கிழங்குகள்தான் அதிக மருத்துவப் பயனைக் கொண்டிருக்கும். மஞ்சள், வேப்பிலை ஆகியவற்றைச் சம எடை எடுத்து, அரைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் அம்மைக் கொப்பளங்கள், சேற்றுப் புண் ஆகியவை குணமாகும். மஞ்சளை அரைத்து சிரங்குகள், அடிபட்ட புண்கள் அல்லது கட்டிகளின் மேல் ஒரு வாரம் பூசி வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

நல்லனவெல்லாம் தரும் நாட்டுக்காய்கறிகள்

அத்திக்காய்

மூல நோய்க்கு அத்திக்காய் சரியான நிவாரணி. அத்திக்காயில் வைட்டமின் சி, சுண்ணாம்பு மற்றும் இரும்புச்சத்து ஆகியவை அதிகமாக இருக்கின்றன. மூல நோய் இருப்பவர்கள் மாதம் ஒரு நாளாவது அத்திக்காய் அவியல் சாப்பிட வேண்டும். இதனால் மலக்குடல் முழுமையாகச் சுத்தமாகும்.

நல்லனவெல்லாம் தரும் நாட்டுக்காய்கறிகள்

பலாக்காய்

பால்வினை நோய்களைக் கட்டுப்படுத்தி, உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் பலாக்காய். இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமாக இருக்கிறது. வாத நோய், செரிமானக் கோளாறு இருப்பவர்களுக்குப் பலாக்காய் மிகவும் ஏற்றது. ஆல்கஹால் போன்ற நச்சுகளின் எச்சங்களை அறவே முறிக்கும் தன்மை கொண்டது.

நல்லனவெல்லாம் தரும் நாட்டுக்காய்கறிகள்

நாட்டுக்காய்கறிகள் வாங்கும்போது இவற்றையெல்லாம் கவனியுங்கள்!

சமைத்த உணவு சுவையாக இருக்க வேண்டுமென்றால், காய்கறிகள் சிறப்பானவையாக இருக்க வேண்டும். காய்கறிகள் வாங்கும்போது கவனிக்கவேண்டியவை...

முருங்கைக்காய்: கரும்பச்சை நிறத்தில், சற்று உருண்டையாக இருக்கும் முருங்கைக்காயாகப் பார்த்து வாங்க வேண்டும். பட்டையாக இருந்தால் உள்ளே சதை இருக்காது என்பதால் அதைத் தவிர்க்கவும். இரு முனைகளைப் பிடித்து லேசாக முறுக்கினால் முருங்கை வளைந்து கொடுக்க வேண்டும். அதுதான் இளசான காய். முறுக்கும்போது மளமளவென்று சத்தம் கேட்டால், அது முற்றல். தவிர்த்துவிடவும்.

நல்லனவெல்லாம் தரும் நாட்டுக்காய்கறிகள்

முள்ளங்கி: காய் நீண்டு, தலைப்பகுதியிலிருக்கும் காம்பு நிறம் மாறி வாடிவிடாமல் பச்சையாக இருக்க வேண்டும். நகத்தால் லேசாகக் கீறிப் பார்க்கும்போது தோல் மென்மையாக இருந்தால் அது இளசு, சமைக்க உகந்தது.

கத்திரிக்காய்:
ஓட்டை இருந்தால் உள்ளே புழு இருக்கும் என்பதால், சிறு ஓட்டைகூட இல்லாமல் நல்லதாகப் பார்த்து வாங்க வேண்டும். காம்பு நீண்டிருந்தால் காய் இளசாக இருக்கும். காம்பு குச்சிபோல இருந்தால் காய் முற்றல் என்று அர்த்தம். முழுக்க ஒரே நிறத்தில் பளபளவென்று இருப்பது நல்ல காய். பச்சை நிறத்திலிருக்கும் கத்திரிக்காய் மீது வெள்ளை வரிகள் இருந்தால் அது கசக்கும்.

நல்லனவெல்லாம் தரும் நாட்டுக்காய்கறிகள்

வாழைக்காய்: காம்பு ஒடிந்த இடத்தில் வெள்ளையாக இருக்கிறதா என்று பார்த்து வாங்குவது நல்லது. வாங்கி வந்த பிறகு சுத்தமாகக் கழுவிவிட்டு, தண்ணீரில் போட்டு வைத்தால், வாடாமலும் பழுக்காமலும் இருக்கும்.

வெண்டைக்காய்: பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். நுனியை உடைத்தால் படக்கென்று உடைய வேண்டும், அதுதான் பிஞ்சு. உடையாமல் வளைந்தாலோ, இரண்டாகப் பிளந்தாலோ அல்லது காம்பு சுருங்கியிருந்தாலோ அது முற்றல்.

சேனைக்கிழங்கு:
நீண்டிருக்கும் கிழங்கு சுவை தராது. உருண்டையாக இருப்பதாகப் பார்த்து வாங்கவும். மேலே கீறிப் பார்த்தால், உள்ளே வெள்ளையாக இருந்தால் நல்ல கிழங்கு.

நல்லனவெல்லாம் தரும் நாட்டுக்காய்கறிகள்

பீர்க்கங்காய்: பார்ப்பதற்குப் பச்சைப் பசேல் என்று இருப்பதை வாங்க வேண்டும். மேலும் அடிப்பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுவதும் ஒரே அளவில் இருக்கும்படிப் பார்த்து வாங்க வேண்டும். காயின் மேல் நரம்புகள் எடுப்பாகவும் வெள்ளைப் புள்ளிகளும் இருந்து காம்பு வறண்டிருந்தால் முற்றல் என்று அர்த்தம்.

மாங்காய்: தேங்காயைக் காதருகே வைத்துத் தட்டிப் பார்ப்பதுபோல மாங்காயையும் தட்டிப் பார்க்கலாம். அப்படித் தட்டினால் சத்தம் வந்தால் அந்த மாங்காயில் கொட்டை சிறியதாக இருக்கும்; சதைப்பகுதி நிறைந்திருக்கும்.

நல்லனவெல்லாம் தரும் நாட்டுக்காய்கறிகள்

அவரைக்காய்: ஒவ்வொரு காயையும் தொட்டுப் பார்க்கவும். அதில் விதைகள் பெரியதாக இருக்கும் காய்களைத் தவிர்க்கவும். இளசாக இருக்கும் காய்களில் விதைகள் சிறியதாக இருக்கும், நார் அதிகம் இருக்காது.

கோவைக்காய்:
முழுக்கப் பச்சையாக இருக்க வேண்டும். இளம் சிவப்பு, மஞ்சள் நிறக் காய்களை வாங்க வேண்டாம். அது பழுக்கும் நிலையில் இருக்கும் என்பதால் ருசி இருக்காது.

- துரை நாகராஜன்

நல்லனவெல்லாம் தரும் நாட்டுக்காய்கறிகள்

டலையும் உள்ளத்தையும் நல்வழிப்படுத்தும் வழிகள், உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சிகள் முதலிய வாழ்வியல் முறைகளை அறியவும், மருத்துவ உலகின் ஆச்சர்யங்களை விரல்நுனியில் தெரிந்துகொள்ளவும் ‘டாக்டர் விகடன்’ சோஷியல் நெட்வொர்க்கிங் பக்கங்களில் இணைந்திடுங்கள்.