மற்ற எபிசோடுகள்
Published:Updated:

எட்டாவது மாதம் எட்டு வைக்கும் நேரம்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 8

எட்டாவது மாதம் எட்டு வைக்கும் நேரம்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 8
பிரீமியம் ஸ்டோரி
News
எட்டாவது மாதம் எட்டு வைக்கும் நேரம்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 8

தனசேகர் கேசவலு குழந்தைகள்நல மருத்துவர்

தொட்டிலில் தூங்கவைப்பது, கட்டிலில் படுக்கவைப்பது, வாக்கரில் வைத்து எடுப்பது என, ஏழாம் மாதம்வரைக்கும் குழந்தைகள் என்பவர்கள், பெற்றோர் தங்கள் இஷ்டப்படி கையாள்கிற குட்டி பொம்மைகள்தாம். எட்டாவது மாதத்திலிருந்துதான் குழந்தை வளர்ப்புக்கான ரியல் டாஸ்க்கை அம்மாக்கள் சந்திக்கப் போகிறீர்கள். ‘என் பிள்ளை பயங்கர வாலு; என் பொண்ணு சேட்டைக்காரி’ என்று அம்மாக்கள் செல்லமாக அலுத்துக்கொள்ள ஆரம்பிப்பது இந்த எட்டாம் மாதத்தில் இருந்துதான்.

எட்டாவது மாதம் எட்டு வைக்கும் நேரம்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 8

எட்டாம் மாதத்தில் என்னென்ன செய்வார்கள்?

அம்மாவின் தலைமுடி, அப்பாவின் மீசை, பாட்டியின் தலையில் இருக்கிற கொண்டை ஊசி, சில நேரங்களில் பாட்டியின் தலையைக்கூட விளையாட்டுப் பொருள்களாகவே பார்க்க ஆரம்பிப்பார்கள் பொடிசுகள். அதுவரை பூமி தொடாத பிள்ளையின் பாதங்கள் தரையில்படும். சுவரைப் பிடித்துக்கொண்டு எழுந்து நிற்பார்கள். அலமாரியில் இருப்பதையெல்லாம் கீழே இழுத்துப் போடுவார்கள். சில வாண்டுகள் கட்டிலைப் பிடித்துக்கொண்டு ‘தைய தக்கா’ என்று டான்ஸ் ஆடும். சில சுட்டிகள் உட்கார்ந்தபடியே எம்பி எம்பிக் குதிக்கும்; முட்டி போட்டுக்கொண்டு நகர ஆரம்பிக்கும். வேலைக்குப் போய்விட்டு வரும் அம்மாவையும் அப்பாவையும் பார்த்த நொடியில் உட்கார்ந்த இடத்திலேயே துள்ளுவார்கள்.

சதுரம், செவ்வகம், வட்டம் என்று விதவிதமான வடிவங்களில் இருக்கிற பொருள்களைத் தொட்டுப் பார்த்து விளையாட ஆசைப்படுவார்கள். அவையும் கலர் கலராக இருந்தால் குஷியாகிவிடுவார்கள். குறிப்பாக, நகர்கிற பொருள்களைப் பிடிக்கப் பார்ப்பார்கள். அது கரப்பான்பூச்சியாக இருந்தாலும் அதன் கதி அதோகதிதான். இவற்றால், சில பிரச்னைகளையும் இழுத்துப் போட்டுக்கொள்வார்கள். பார்ப்பதெல்லாம் இவர்களுக்கு விளையாட்டுப் பொருள்களாகத்தான் தெரியும் என்பதால், குழந்தைகளின் விளையாட்டுச் சாமான்களை உஷாராகக் கவனிக்கவேண்டியது வீட்டில் உள்ள பெரியவர்களின் பொறுப்பு.

எட்டாவது மாதம் எட்டு வைக்கும் நேரம்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 8



உங்கள் குழந்தை இந்தச் சேட்டை எதுவும் பண்ணவில்லை என்றால் பதற வேண்டாம். உங்கள் பாப்பாவின் வளர்ச்சி சற்று நிதானமாக இருக்கிறது, அவ்வளவுதான்.

பேதியாவது பல் முளைப்பதாலா?

சில பிள்ளைகள் தவழ்வார்கள், சில பிள்ளைகள் பார்க்கிற பொருள்களையெல்லாம் கைகளால் தொடுவார்கள் என்று சொன்னேன் அல்லவா? அப்போது, குழந்தைகளின் கைகளில் அழுக்கு, தூசு எல்லாம் படும். அந்தக் கையை அப்படியே வாயில் கொண்டுபோய் வைப்பார்கள். விளைவு, பேதியாகும். ‘பல் முளைக்குது, அதான் பேதியாகுது’ என்பார்கள் பாட்டிகள். ஏழாம் மாதத்திலோ, அது எட்டாம் மாதத்திலோ குழந்தைகளுக்குப் பல் முளைக்க ஆரம்பிக்கிற வயதில்தான் கையில் கிடைப்பதையெல்லாம் எடுத்து வாயில் போடுவார்கள். வயிற்றில் தொற்று ஏற்பட்டு, பேதியாக ஆரம்பிக்கும். பல் முளைப்பதால் பேதியாகிறது என்பது உண்மை கிடையாது.

உணவுப் பழக்கத்தை மாற்றவேண்டிய நேரமிது!

பருப்பு சாதம், பால் சாதம், இட்லி என்று குட்டிப் பாப்பாவின் மெனு கார்டும் குட்டியாக இருந்தால், அவர்களுக்கு போரடிக்க ஆரம்பித்துவிடும். சாப்பிட மறுப்பார்கள். திரவ உணவுகள் சாப்பிட விரும்புவார்கள். அதனால் புதுப்புது உணவுகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். அதிகமான தாய்ப்பால் சுரப்பு இருப்பவர்கள் தோசையை, சப்பாத்தியைத் தாய்ப்பாலில் ஊறவைத்துக் கொடுக்கலாம்.

எட்டாவது மாதம் எட்டு வைக்கும் நேரம்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 8

இரண்டு வயது வரை குழந்தையின் மூளை வளர்ச்சி வேகமாக இருக்கும் என்பதால், இரும்புச்சத்துள்ள உணவுகள் தர வேண்டும். எட்டாம் மாதத்தின் முதல் வாரம் வெள்ளைக்கரு, அடுத்த வாரம் மஞ்சள் கரு, மூன்றாம் வாரம் இரண்டும் சேர்த்து... அடுத்து சிக்கன், மட்டன் என்று நன்கு வேகவைத்துத் தரலாம்.

 ஓட்டுடன் இருக்கிற இறால் மற்றும் நண்டை இப்போது தர வேண்டாம். வஞ்சிரம், சுறா மாதிரி மீன்களை இட்லித்தட்டில் வேகவைத்து அல்லது காரமில்லாத மசாலாவில் வறுத்துக் கொடுக்கலாம்.

சைவ உணவுகள் என்றால் உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, சப்பாத்தி, பூரி, பனீர், சீஸ், சேனைக்கிழங்கு, உப்பில்லாத வெண்ணெய், கோவா எனத் தரலாம். இந்தப் பருவத்தில் குழந்தைகள் உணவுகளைக் கையில் பிடித்துச் சாப்பிட விரும்புவார்கள் என்பதால், கிழங்கு வகைகளை நீள வாக்கில் நறுக்கி, வேகவைத்தோ அல்லது எண்ணெயில் வறுத்தோ கொடுங்கள்.

நட்ஸ், பாப்பாவின் தொண்டையில் சிக்கிக்கொள்ளலாம் என்பதால் கவனம். வைட்டமின் டிராப்ஸை மருத்துவர் ஆலோசனையின் கீழ் தொடர்ந்து கொடுங்கள்.

காய்ச்சல் வந்தால் ஆசன வாயில் மாத்திரை வைக்கலாமா?


தாராளமாக வைக்கலாம். ஒரு குழந்தையின் தலைப்பகுதிதான் வெப்பத்தைக் கிரகிக்கிற மற்றும் தணிக்கிற இடம். அதனால், அந்த இடம் சூடாகத்தான் இருக்கும். அதைவைத்துக் குழந்தைக்குக் காய்ச்சல் என்று முடிவு கட்டாதீர்கள். வயிற்றைத் தொட்டுப் பாருங்கள் அல்லது தெர்மாமீட்டரால் செக் பண்ணுங்கள்.

காய்ச்சலுக்கு பாரசிட்டமால்தான் மருந்து. அதில் சொட்டு மருந்து, சிரப், ஊசி, வாய் வழியாகப் போடுகிற மாத்திரை அல்லது ஆசனவாயில் வைக்கும் மாத்திரை எனப் பல வகைகள் இருக்கின்றன. வாய் வழியாக பாரசிட்டமால் தரும்போது, அது உணவுடன் சேர்ந்து கரைந்து, கல்லீரலுக்குப் போய், அங்கிருந்துதான் ரத்த நாளங்களுக்குச் செல்லும். பிறகுதான் காய்ச்சல் குணமாகும். ஆனால், ஆசன வாய் என்பது ரத்த நாளங்கள் மிகுந்த பகுதி. அந்த இடத்தில் அதற்கென்று உருவாக்கப்பட்ட மாத்திரையை வைத்தால், உடனே மருந்து வேலை செய்து காய்ச்சல் வேகமாகத் தணியும். இதனால் எந்தத் தீங்கும் வராது. ஜுரம் மிக மிக அதிகமாக இருக்கும்போது மருத்துவமனையில் உரிய பரிசோதனைகளுக்குப் பிறகு குழந்தையின் ஆசன வாயில் வைக்கப்படும் இந்த மாத்திரை.

(வளர்த்தெடுப்போம்...)

- ஆ.சாந்தி கணேஷ்

படம்: மதன்சுந்தர்

எட்டாவது மாதம் எட்டு வைக்கும் நேரம்! - ஆனந்தம் விளையாடும் வீடு - 8

ருட்டு, பவர் கட், பெரிய சைஸ் பொம்மை இதற்கெல்லாம் இந்த மாதத்தில் பயப்படுவார்கள்.  வெளிச்சமும் அம்மாவின் அணைப்பும்தான் இதற்குத் தீர்வு.