ஹெல்த்
Published:Updated:

டாக்டர் நியூஸ்!

டாக்டர் நியூஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
டாக்டர் நியூஸ்!

தகவல்

`கால்பந்து' என்று அழைத்தாலும், அந்த விளையாட்டில் பங்கேற்கிறவர்கள் அவ்வப்போது தலையால் பந்தை அடிப்பதுண்டு. ஆங்கிலத்தில் இதை ‘Heading' என்கிறார்கள். இதுவரை விளையாட்டின் ஒரு பகுதியாகக் கருதப்பட்ட Heading, இப்போது தீவிர விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது. `கனமான கால்பந்தை, தலையால் அடிக்கடி மோதுவதன் மூலம் மனித மூளை பாதிப்புக்குள்ளாகக்கூடும்’ என்கிறார் மூளை பாதிப்புகள் மருத்துவ நிபுணர் டாக்டர் பென்னெட் ஒமாலு (Bennet Omalu). 

டாக்டர் நியூஸ்!

இந்த பாதிப்புகள் உடனே தெரியாமலிருக்கலாம்; ஆனால், தொடர்ந்து தலையால் பந்தை மோதிக்கொண்டே இருந்தால், பின்னாள்களில் அவர்களுக்கு மூளை சார்ந்த குறைபாடுகள் வருகிற வாய்ப்பு இருக்கிறதாம். இதற்குச் சான்றாகத் தொழில்முறையில் கால்பந்து விளையாடிய பல வீரர்களுடைய முதுமைக்காலப் பிரச்னைகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள். குறிப்பாக, `பதினெட்டு வயதுக்குள் இருக்கிற யாரும் கால்பந்தைத் தலையால் மோதவே கூடாது’ என்கிறார் டாக்டர் பென்னெட். இதைப் பள்ளிக்கூடங்கள் உடனே கவனிக்க வேண்டும்!

‘நான் எப்பவும் ஆன்லைன்ல இருப்பேன். யார் எனக்கு ஈமெயில் அனுப்பினாலும் உடனடியா பதில் அனுப்பிடுவேன்' என்று பெருமையாகச் சொல்கிறவர்கள் பலர். அவர்களைப் பார்த்து மற்றவர்களும் அடிக்கடி அலுவல் மின்னஞ்சலைப் பார்ப்பது, அவற்றுக்கு உடனுக்குடன் பதில் அனுப்புவதை வழக்கமாக்கிக்கொள்கிறார்கள். பல நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களிடம் இது போன்ற உடனடி பதிலை எதிர்பார்க்கின்றன. ஆனால், `இப்படி எந்நேரமும் அலுவல் மின்னஞ்சல்களைப் பார்ப்பது, பதில் அனுப்புவது, அது தொடர்பான அழுத்தம் போன்றவை ஊழியர்களுடைய மனநலனை பாதிக்கக்கூடும்’ என்கிறது ஒரு சமீபத்திய ஆய்வு. அதாவது, வழக்கமான வேலை நேரத்துக்குப் பிறகும் மின்னஞ்சல்களைப் பார்த்தாக வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருப்பவர்கள் பதற்றக் குறைபாடுகளுக்கு ஆளாகிறார்களாம்; அவர்களுடைய வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருப்பதில்லையாம்.

டாக்டர் நியூஸ்!



இந்தப் பிரச்னை அவர்களோடு நிற்பதில்லை; இந்த ஊழியர்களுடைய மனைவி அல்லது கணவனுக்கும் அது தொற்றிக்கொள்கிறதாம்; அவர்களுடைய மகிழ்ச்சி, ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறதாம். மிக முக்கியமான வேலையாக இருந்தாலன்றி, அலுவலகத்துக்கு வெளியில் அதைப் பற்றிச் சிந்திக்காமலிருப்பதுதான் நல்லது. ஒருவேளை உங்கள் நிறுவனம் அதை எதிர்பார்க்கிறது என்றால், இந்த ஆய்வைப் பற்றி அவர்களிடம் பேசுவது நல்லது. அப்போதும் அவர்கள் கேட்கவில்லையென்றால், வேலையை மாற்றிக்கொள்வதுதான் உடலுக்கும் மனத்துக்கும் நல்லது. ஊழியர்கள்தான் நிறுவனங்களுடைய முதல் சொத்து. அவர்களுடைய மனநலனை பாதிக்கும் இதுபோன்ற எதிர்பார்ப்புகளை நிறுவனங்கள் மாற்றிக்கொள்ள முன்வர வேண்டும்!

டாக்டர் நியூஸ்!

ருத்துவப் படிப்பு என்றால் செலவு அதிகம் என்பார்கள்; ஆனால், நியூயார்க் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரி அண்மையில் தன்னுடைய கல்விக் கட்டணத்தை முழுமையாகத் தள்ளுபடி செய்து அசத்தியிருக்கிறது. இதன்படி, இந்தக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் யாரும் கல்விக் கட்டணம் செலுத்தவேண்டியதில்லை; அவர்களுடைய கல்வித் தகுதி, பொருளாதார நிலையைப் பொறுத்து இது மாறாது; எல்லாருக்கும் மருத்துவக் கல்வி இலவசம்!

இதற்காக நியூயார்க் பல்கலைக்கழகம் 600 மில்லியன் டாலர் நிதி திரட்டிக்கொண்டிருக்கிறது. இதில் பெரும் பகுதி ஏற்கெனவே திரட்டப்பட்டுவிட்டது. `இந்த முயற்சியின் மூலம், மருத்துவக் கல்வியை இன்னும் பலதரப்பட்ட மாணவர்களுக்குக் கொண்டுசெல்ல இயலும்' என்கிறார் இந்தக் கல்லூரி வாரியத்தின் தலைவர் கென்னெத் லங்கோன். ‘இந்த முயற்சியை எடுத்திருக்கும் முதல் அமெரிக்க மருத்துவக் கல்லூரி இதுதான் என்பதால், நாடு முழுவதும் மருத்துவக் கல்வியை மாற்றியமைப்பதற்கு இது ஒரு தூண்டுதலாக இருக்கும் என்று நாம் நம்புவோம்’ என்கிறார் கென்னெத்.

டாக்டர் நியூஸ்!

செல்போன், டேப்லெட் திரைகளைத் தொடர்ந்து பார்ப்பதால் கண்ணுக்குப் பாதிப்பு ஏற்படும் என்பது பெரும்பாலானோருக்குத் தெரியும். ஆனால், எந்த அளவுக்கு பாதிப்பு இருக்கும் என்பது தெளிவாகத் தெரியாததால், ஏதோ நம்பிக்கையில் இஷ்டம்போல் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

அண்மையில் டொலெடோ பல்கலைக்கழகத்தில் (The University of Toledo) நிகழ்த்தப்பட்ட ஓர் ஆய்வில், இன்றைய தொலைபேசிகள், தொடுகணினிகள் மற்றும் தொலைக்காட்சிகளின் திரைகள் வெளிவிடும் நீல வெளிச்சம், கண்ணின் ஒளி நுண்ணுணர்வுள்ள செல்களில் நச்சு மூலக்கூறுகளை உருவாக்கலாம், கண் பார்வையை பாதிக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் பொருள், இந்தத் திரைகளைத் தொடர்ந்து நெடுநேரம் பார்த்தால், பலவிதமான கண் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதுதான். சில செல்போன் தயாரிப்பாளர்கள் `Blue Light Filter' எனப்படும் வடிகட்டித் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், பெரும்பாலான திரைகளில் இந்த வசதி இன்னும் வரவில்லை. ஆகவே, இயன்றவரை இவற்றின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்வதுதான் பார்வைக்கு நல்லது.

ந்தியாவில் பொதுவாக உடல்சார்ந்த பிரச்னைகளுக்குதான் மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது. மிகச் சில நிறுவனங்கள்தாம் மனப் பிரச்னைகளுக்கான காப்பீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கின்றன. இதனால், காப்பீடு பெற்றவர்களுக்கு ஏதேனும் மனம் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட்டால், அவர்கள் தங்களுடைய சொந்தப் பணத்தைத்தான் செலவழிக்க வேண்டியிருக்கும். இது எல்லாருக்கும் சாத்தியமாவதில்லை.

நாட்டின் காப்பீட்டுத்துறையை வழிநடத்தும் IRDAI சமீபத்தில் இது குறித்து ஒரு முக்கியமான ஆணையை வெளியிட்டிருக்கிறது. இதன்படி, காப்பீட்டு நிறுவனங்கள் மனநலச் சிகிச்சைகளுக்கும் காப்பீடு வழங்கும் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும். இதன் மூலம் மனநலப் பிரச்னைகளைப் பற்றியும் அவற்றுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளைப் பற்றியும் மக்களிடையே விழிப்பு உணர்வு அதிகரிக்கும். சிகிச்சைச் செலவுகள், மருந்துச் செலவுகள், மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுதல் போன்றவற்றுக்குக் காப்பீடு வழங்கப்படுவதால், சிலர் செலவுக்கு பயந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளாமலேயே வாழ்கிற நிலை மாறும்.

- என்.ராஜேஷ்வர்