ஹெல்த்
Published:Updated:

கன்சல்ட்டிங் ரூம்

கன்சல்ட்டிங் ரூம்
பிரீமியம் ஸ்டோரி
News
கன்சல்ட்டிங் ரூம்

ஹெல்த்

கன்சல்ட்டிங் ரூம்

நான் மென்பொருள் துறையில் வேலை செய்கிறேன். கடந்த ஒரு மாத காலமாக, என் கண்களில் அரிப்பெடுக்கிறது. தேய்த்தால் சிவந்துவிடுகிறது. அவ்வப்போது கண்ணீர் வேறு வழிகிறது. இது என்ன பிரச்னை? தீர்வு என்ன?

- ராஜேஷ், துவரங்குறிச்சி.

கன்சல்ட்டிங் ரூம்

பெரும்பாலும் நோய்த்தொற்று காரணமாகவோ, ஒவ்வாமையாலோதான் கண்களில் அரிப்பு ஏற்படும். எதனால் ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து, அந்தச் சூழலைத் தவிர்க்க முயலுங்கள். ஒவ்வாமையின்போது வெளிப்படும் ஹிஸ்டமைன் (Histamine) என்ற ரசாயனம்தான் கண்ணில் அரிப்பை ஏற்படுத்தும். கண்ணை அடிக்கடி தேய்த்தால், அந்த ரசாயனம் அதிக அளவில் வெளியாகி, பிரச்னையின் தீவிரத்தை அதிகப்படுத்தும். கண்களைத் தேய்க்கும் முதல் சில நிமிடங்களுக்கு அரிப்பு சரியாவதுபோலத் தோன்றினாலும், அடுத்தடுத்த நிமிடங்களில் பிரச்னையின் தீவிரம் அதிகமாகும். 

மின் திரைகளை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கும், போதிய நேரம் தூங்காதவர்களுக்கும் இமைகளின் துடிப்பு குறையத் தொடங்கும். தேவையான அளவு உடலுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம், இந்தப் பிரச்னையைத் தடுக்கலாம். மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

- நவீன், கண் மருத்துவர்.

எனக்கு வயது 26. கடந்த இரண்டு வாரங்களாக வயிற்றில் அசௌகர்யமான உணர்வு; பலவீனமாக உணர்கிறேன். சோர்வாக இருக்கிறது. அதிகம் பசிக்கிறது. எவ்வளவு சாப்பிட்டாலும், உடல் எடை குறைகிறது. நண்பர் வயிற்றில் பூச்சி இருந்தால் இப்படிப்பட்ட அறிகுறிகள் தோன்றும் என்கிறார். உண்மைதானா... இதை எப்படித் தடுக்கலாம்?

- ந.தங்க சூர்யா, விருத்தாச்சலம்

கன்சல்ட்டிங் ரூம்

வயிற்றில் பூச்சி இருந்தால் பசியின்மை ஏற்படும். செரிமானச் சிக்கல், நெஞ்செரிச்சல் போன்றவையும் ஏற்படலாம். வயிற்றில் பூச்சி இருக்கிறதா என்பதை ‘மலப் பரிசோதனை’ மூலம் உறுதிசெய்துகொள்ளுங்கள். வயிற்றுப்பூச்சிகளில் நிறைய வகைகள் இருக்கின்றன. உங்களுக்கு எந்த வகைப் பூச்சியால் பிரச்னை என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ப மருத்துவரின் பரிந்துரையுடன் மாத்திரையை உட்கொள்ளவும்.

கன்சல்ட்டிங் ரூம்



வயிற்றில் பூச்சிகள் உருவாவதைத் தடுக்க இயற்கை மருந்துகள் இருக்கின்றன. குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சிகள் ஏற்படாமலிருக்க, அவ்வப்போது சுண்டைக்காய் சேர்த்த உணவுகளைக் கொடுக்கலாம். சுண்டைக்காய் வற்றலை நெய்விட்டு வறுத்துப் பொடியாக்கி, நீரில் கலந்து கொடுப்பது நல்லது. பாகற்காய், அகத்திக்கீரை போன்ற கசப்பு மற்றும் துவர்ப்புச் சுவை கொண்ட காய்கறிகள், பழங்கள், கீரைகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். பப்பாளிக்காயைப் பொரியலாகச் செய்தும் சாப்பிடலாம். நிலவாகைச் செடியின் இலையையும் பவுடராக்கி, நீரில் கலந்து கொடுக்கலாம். நிலவாகைப் பொடி நாட்டுமருந்துக் கடைகளிலேயே கிடைக்கும். 

வேப்பிலை வயிற்றுப்பூச்சிகளை முழுவதுமாக அழிக்கும்; அதை அப்படியே சாப்பிடலாம். வேப்பிலை, குப்பைமேனி தலா ஒரு கைப்பிடி எடுத்து, நீர்விட்டு அரைத்தும் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு சாறாக்கிக் குடிக்கலாம். அதிகபட்சம் 10 மி.லி உட்கொண்டால் போதுமானது.

- சந்திரமோகன், வயிறு மற்றும் குடல் சிகிச்சை நிபுணர், தமிழ்க்கனி, சித்த மருத்துவர்.

எனக்கு அடிக்கடித் தலைவலி வரும். தேநீர் குடித்ததும் வலி குறைந்துவிடும். சமீபகாலமாக, ஒருநாளில் ஐந்து முறையாவது தேநீர் குடித்துவிடுகிறேன். தேநீர் அதிகம் குடிப்பதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்கிறார்கள். அது உண்மையா? ஒரு நாளைக்கு எத்தனை முறை குடிக்கலாம்?

- க.செந்தில்குமார், கரூர்

கன்சல்ட்டிங் ரூம்

ஒரு நாளில், இரண்டு முறைக்கு மேல் தேநீரோ, காபியோ குடிக்கக் கூடாது. தேநீரிலிருக்கும் கஃபைன் என்னும் ரசாயனம், மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டி நம்மை அடிமையாக்கிவிடும். ஐந்து முறை தேநீர் குடிப்பதென்பது, ரத்த அழுத்தப் பிரச்னையை ஏற்படுத்தும். தேநீரிலிருக்கும் கஃபைன், சர்க்கரை போன்றவை இதயம், வயிறு மற்றும் குடல் தொடர்பான பிரச்னைகளை ஏற்படுத்தலாம். தூக்கமின்மை, பசியின்மை இருந்தால் தேநீர் குடிப்பதை உடனடியாகக் குறைத்துக்கொள்ளவும்.
 
- கோவர்த்தினி, ஊட்டச்சத்து நிபுணர்.

ங்கள் கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி: கன்சல்ட்டிங் ரூம், டாக்டர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.