
தன்னம்பிக்கை
`ஊனம் ஒரு தடை அல்ல...’ என்பதற்கு, பலருடைய வாழ்க்கை நமக்கு உதாரணமாக இருக்கின்றன. தனது பலத்தை உணர்ந்த எவரும், பலவீனங்களால் சோர்ந்துபோக மாட்டார்கள். அதற்கு நல்லதோர் உதாரணம், 20 வயது திவ்யா!

பிறக்கும்போதே திவ்யாவுக்கு இடது பக்கக் கண் இருக்க வேண்டிய இடம் இமைகளால் மூடியிருந்தது. சில வருடங்களுக்கு முன்னர் செயற்கைக் கண் பொருத்தியிருக்கிறார் திவ்யா. வலது பக்க விழியிலும் முழு பார்வைத்திறன் கிடையாது. புற்றுநோய் விழிப்பு உணர்வுக்காக நடத்தப்பட்ட 150 கி.மீ ‘பிங்கத்தான்’ மாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடி, சாதனை படைத்திருக்கிறார் திவ்யா.
திவ்யாவுக்குச் சொந்த ஊர், செங்கல்பட்டு. ஏழ்மையான குடும்பம். பிறவியிலேயே இமை மூடியிருந்த திவ்யாவின் விழிகளைப் பார்த்துவிட்டு ‘குடும்பத்தில் யாரோ ஒரு மூதாதைக்கு இப்படி இருந்திருக்கலாம்... அதன் விளைவு, திவ்யாவைப் பாதித்திருக்கிறது’ என்றார்கள் மருத்துவர்கள். மருத்துவ மொழியில் இதை, ‘அனோப்தால்மஸ்’ (Anophthalmos) என்கிறார்கள்.

பார்வையில் குறைபாட்டை உணர்ந்து உடைந்துபோன திவ்யாவை, அவரின் அம்மா சோபிதான் உற்சாகப்படுத்தி, அவருக்கான வெளிச்சத்தைக் காட்டினார். சிறு வயதிலிருந்தே ஓட்டத்தின் மீது தீரா ஆர்வம். அதுதான் இப்போது அவருக்கு அடையாளமாகியிருக்கிறது. இப்போது ராணிமேரி கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் படித்துவருகிற திவ்யா, தன் குறையை முன்னிறுத்தி வருந்திக்கொண்டிருக்காமல் இலக்கு நோக்கி ஓடிக்கொண்டேயிருக்கிறார்.
“அம்மாதான் வெளிச்சம், பார்வை... எல்லாம். தங்கச்சி எட்டாவது படிக்கிறா. தம்பி நாலாவது. அம்மா, வீட்டு வேலை செஞ்சுதான் எங்களுக்குச் சோறு போடுது. ‘எந்தச் சூழல்லயும் படிப்பை மட்டும் விட்டுடாதே... அதுதான் உனக்குப் பார்வை’னு அம்மா சொல்லும். நிறைய ஓட்டப் போட்டிகள்ல ஜெயிச்சிருக்கேன். ப்ளஸ் டூவுக்குப் பிறகு என்ன செய்யப்போறோம்ங்கிற பயத்துல இருந்தப்பதான் அனிதா மேடத்தைப் பார்த்தேன். இப்போ நான் `பிங்கத்தான்’ போட்டியில 150 கி.மீ ஓடினதுக்குக் காரணம் அவங்கதான்.
100 மீட்டர், 200 மீட்டர் தூரம் ஸ்பிரின்ட் ரன்னரா ஓடிப் பழகினவ நான். மாரத்தானுக்கு வேற மாதிரி பயிற்சி தேவை. ஒன்றரை மாசம் அந்தப் பயிற்சியை எடுத்தேன். குறைவான நேரத்துல வேகமா ஓடுறதுக்கும், நீண்ட நேரம் மெதுவா ஓடுறதுக்கும் வித்தியாசம் இருக்கு. வேகமா ஓடிப் பழகிட்டு, மெதுவா ஓடுறப்போ நிறையக் கஷ்டப்பட்டேன். பாண்டிச்சேரியில தொடங்கி சென்னை வரைக்கும் ஓடிய ஏழு பேர்ல ஒருத்தியா வந்தது மகிழ்ச்சியா இருக்கு...” பெருமிதத்தோடு சொல்கிறார் திவ்யா.
“மற்ற வீரர்களுக்கும் திவ்யாவுக்கும் அடிப்படையிலேயே வித்தியாசம் இருக்கு. மற்றவர்களோட வெளிச்சத்துல நான்கில் ஒரு பங்குதான் இவளுக்கு. ஆனா, எல்லா சராசரி வீரர்களையும் ஜெயிச்சிருக்கா. மாரத்தான் போட்டியில ஓட மனோபலமும் உடல்பலமும் வேணும். ரெண்டுமே திவ்யாகிட்ட நிறைஞ்சிருக்கு. அவ பெரிய ஆளா வருவா...” கண்கள் கலங்கப் பேசுகிறார் திவ்யாவை மாரத்தான் வீராங்கனையாகத் தயார்படுத்திய அனிதா ஸ்ரீநாத்.
“புற்றுநோய் விழிப்புஉணர்வை ஏற்படுத்துறதுக்காக மாரத்தான்ல ஓடுனது எனக்கு நிறைய நம்பிக்கையைக் கொடுத்திருக்கு. ஒலிம்பிக்ல ஓடி இந்தியாவுக்காக ஜெயிக்கணும். அதுக்கு இன்னும் கடுமையா உழைக்கணும்; நிச்சயமா உழைப்பேன்.”
புன்னகை மாறாமல் கூறுகிறார் திவ்யா!
- சி.வெற்றிவேல்