
யோ.தீபா இயற்கை மருத்துவ துணைப் பேராசிரியர்ஹெல்த்
பிராணாயாமம் என்பது மூச்சுக்காற்றை இயல்பாகக் கட்டுப்படுத்தி நிதானமாக, கால அளவுடன் சுவாசிக்கும் ஒரு பயிற்சி. ஆசனங்கள் அனைத்துக்கும் மூலாதாரமாக விளங்கக்கூடியது பிராணாயாமம். சம்ஸ்கிருதச் சொல்லான பிராணயாமத்தில் உள்ள ‘பிராணன்’ என்பது உயிர்க்காற்று, ‘அயாமம்’ என்பது கட்டுப்படுத்துதல்.

கி.மு. 200-ம் ஆண்டில் பதஞ்சலி முனிவர் எழுதிய யோக சூத்திரத்தில், ‘ பிராணாயாமம் ஒரு வாழ்வியல் அறிவியல்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இன்றைய அவசர உலகத்தில் பிராணாயாமம் செய்வதால், மன அமைதி கிடைப்பதுடன் சோர்வு நீங்கிப் புத்துணர்ச்சி கிடைக்கும்; உடல் ஆரோக்கியம் மேம்படும்.
பிராணாயாமம் குறித்து விரிவாக அறிவதற்கு முன்னர் சுவாசம் குறித்து அறியவேண்டியது அவசியம். உயிர் வாழ சுவாசம் அவசியம். நன்றாகக் காற்றை உள்ளே இழுத்து வெளியே விடுவதே சுவாசம். ஆனால், நம்மில் எத்தனை பேர் சரியாக சுவாசிக்கிறோம் என்பதே கேள்விக்குறி. சுவாசம் என்பது மனநிலையைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி. நாம் எந்த மனநிலையில் இருக்கிறோம் என்பதைப் பொறுத்தே மூச்சுவிடுதல் மாறுபடும். மன அழுத்தம் அதிகமாக இருக்கும்போது வேகமாகவும் மேலோட்டமாகவும் மூச்சுவிடுவோம்.

மூச்சுவிடும்போது ஆக்சிஜன் உள்ளே இழுக்கப்பட்டு கார்பன் டை ஆக்ஸைடு வெளித்தள்ளப்படும். தன்னிச்சையான இந்தச் செயல்பாட்டின்போது, இதயத்துக்குச் செல்லும் ஆக்சிஜன் அங்கிருந்து மற்ற உறுப்புகளுக்கு அனுப்பப்படும். சில நேரங்களில், இந்தச் செயல்பாடு பாதிக்கப்பட்டு கார்டிசோல் உள்ளிட்ட ஹார்மோன்கள் சுரக்கத் தொடங்கும். இந்த ஹார்மோன்கள் மன அழுத்தத்தை உருவாக்க வாய்ப்புண்டு. அதனால் இதயத்துடிப்பு அதிகரித்து மூச்சு வாங்குவதுடன் தசைகள் இறுகிப்போய்விடும். செரிமான மண்டலம் செயலிழந்து போகவும் வாய்ப்பிருக்கிறது. இத்தகைய சூழலில் நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதி (சிம்பதெடிக் நெர்வஸ் சிஸ்டம் Sympathetic Nervous System) தூண்டப்பட்டு அது நிலை மாற வேண்டும். அதாவது, பாரா சிம்பதெடிக் ((Parasympathetic Nervous System) நிலைக்குப் போக வேண்டும். மாறாக, தூண்டப்படும் நரம்பு அதேநிலையில் நீடித்தால் இதய நோய், உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, தூக்கமின்மை போன்ற பிரச்னைகள் உருவாகும். இதுபோன்ற சூழலில், பிராணாயாமம் செய்வதால் இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.
பிராணாயாமம் என்பது ஓர் ஆழ்ந்த சுவாசப்பயிற்சி என்பதால், அது வாழ்நாளை அதிகரிக்க உதவும். ஆழ்ந்து சுவாசிக்கும் ஒரு விலங்கு ஆமை. ஒரு நிமிடத்தில் இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் மட்டுமே ஆமை சுவாசிக்கும். இதனால்தான் ஆமை 100 முதல் 200 ஆண்டுகள்வரை உயிர்வாழ்கிறது. ஆனால், நாய் வேகமாகவும் மேலோட்டமாகவும் மூச்சுவிடுவதால், அதன் வாழ்நாள் 8 முதல் 10 ஆண்டுகள் மட்டுமே இருக்கும்.

‘சூரிய பேதனா’ என்ற பிராணாயாமம் செய்தால், உடலில் வெப்ப ஆற்றல் அதிகரித்து மூச்சு மற்றும் மலம் வழியாக எளிதாகச் சளி வெளியேறும். குறிப்பாக சைனஸ், சளி தொடர்பான பிரச்னைகளும் மனச்சோர்வும் சரியாகும். சைனஸ், மூக்கடைப்பு போன்ற பிரச்னை உள்ளவர்கள் வாயால் சுவாசிப்பதை வழக்கமாகக்கொண்டிருப்பார்கள். ஆனால், மூக்கால் சுவாசிப்பதே சரியான முறை என்பதால், பிராணாயாமம் அவர்களுக்கு மூக்கால் சுவாசிக்க உதவும். இப்படி, மூக்கால் சுவாசிப்பதால் உள்ளே செல்லும் ஆக்சிஜன், சைனஸ் அறையில் உள்ள நைட்ரிக் ஆக்ஸைடை நைட்ரேட் ஆக மாற்றி நுரையீரலுக்கு அனுப்பும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரித்து உடலியக்கம் சிறப்பாகச் செயல்படும். மேலும், நைட்ரேட்டானது நுரையீரலில் உள்ள அல்வியோலி (Alveoli) என்ற மூச்சுச் சிற்றறையை விரிவடையச் செய்வதால் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்சிஜன் சீராகச் செல்லும். இதனால் மனச்சோர்வு, தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.
நாடிசுத்தி பிராணாயாமம் செய்தால் வலிகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும். கீமோதெரபி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு நாடிசுத்தி உள்ளிட்ட வேறு சில பிராணயாமங்கள் உறுதுணையாக இருக்கும். பிராணாயாமம் செய்வதால் மன அழுத்தம், படபடப்பு நீங்குவதுடன் இதய ஆரோக்கியம் மேம்படும்.
அடுத்த இதழில் பிராணாயாமத்தின் வகைகள் மற்றும் அவற்றின் பலன்கள் பற்றிப் பார்ப்போம்.
- எம்.மரியபெல்சின்