ஹெல்த்
Published:Updated:

தொற்று நோய்களின் உலகம்!

தொற்று நோய்களின் உலகம்!
பிரீமியம் ஸ்டோரி
News
தொற்று நோய்களின் உலகம்!

ஹெல்த் - 17வி.ராமசுப்பிரமணியன் தொற்றுநோய் சிறப்பு மருத்துவர்

‘காசநோய்க்கு,  தொடர்ந்து ஆறு மாதங்கள் மாத்திரைகள் சாப்பிட வேண்டும்’ என்று கடந்த இதழில் பார்த்தோம். ‘அந்த மாத்திரைகளால் பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறதா’ என்றால், ‘நிச்சயம் இருக்கிறது’ என்றுதான் சொல்வேன். காசநோய் என்பது எல்லாவற்றையும்விடக் கொடூரமானது. அதை குணப்படுத்த, சில பக்கவிளைவுகளை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

தொற்று நோய்களின் உலகம்!

சரி, காசநோய் மாத்திரைகளால் என்னென்ன பக்கவிளைவுகள் ஏற்படும்?

அலர்ஜி ஏற்படலாம். உடலில் அரிப்பை உண்டாக்கலாம். பார்வையில் பாதிப்பு ஏற்படலாம். இதெல்லாம், புதிய மருந்துகள் உடலில் சேர்வதால் ஏற்படும் பொதுவான பக்கவிளைவுகள். காசநோய்க்காக நான்குவிதமான மாத்திரைகளைச் சேர்த்துச் சாப்பிடவேண்டியிருக்கும். ஒவ்வொரு மாத்திரைக்கும் தனித்தனியான பக்கவிளைவுகள் உண்டு.  `ரிஃபாம்பிசின்’ (Rifampicin) என்ற மாத்திரை சிவப்பு நிறத்தில் இருக்கும். அதைச் சாப்பிடுவதால் சிறுநீர், சிவப்பு நிறத்தில் போகலாம். வியர்வையும் சிவப்பு நிறத்தில் வெளியேற வாய்ப்பிருக்கிறது. வெள்ளை பனியன் போட்டிருந்தால், வியர்வைபட்டு சிவப்பாகிவிடும். குமட்டலும் இருக்கும். இதெல்லாம் மாத்திரையை உடம்பு ஏற்றுக்கொள்ளும் காலம் வரைதான். நீண்ட நாள் குமட்டல், வாந்தி இருந்தால் நிச்சயம் எச்சரிக்கையாக வேண்டும். கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு மஞ்சள்காமாலை வர வாய்ப்பிருக்கிறது. இதை, ‘டிரக் இண்டியூஸ்டு ஹெபடைட்டிஸ்’ (Drug Induced Hepatitis) என்று சொல்வோம். மஞ்சள்காமாலையின் அறிகுறியாகக்கூட வாந்தி ஏற்படலாம்.

‘பைராஸினமைடு’ (Pyrazinamide) என்ற மாத்திரையும் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். இது உடலில் யூரிக் ஆசிட் அளவை அதிகப்படுத்தும். யூரிக் ஆசிட் அதிகமானால் உடல் இணைப்புகளில் சேர்ந்து கீல்வாதம் (Gout) ஏற்படலாம்.

தொற்று நோய்களின் உலகம்! ஐசோனையஸிடு (Isoniazid) மாத்திரையும் சில பக்கவிளைவுகளை உருவாக்குவதுண்டு. இது, நரம்புகளில் ‘பெரிபெரல் நியூரோபதி’

(Peripheral Neuropathy) என்ற பாதிப்பை உண்டாக்கும். இது ஒருவகை வைட்டமின் குறைபாடு. இதைத் தவிர்க்கத்தான் காசநோய் மாத்திரைகளோடு வைட்டமின் பி 6 மாத்திரைகளையும் சேர்த்துக் கொடுப்பதுண்டு. 

 ‘ஈத்தேம்பூடால்’ (Ethambutol) மாத்திரை, நிறக்குருடு பாதிப்பை ஏற்படுத்தலாம்.  அபூர்வமாக, சிலருக்குப் பார்வையிழப்பும் ஏற்படலாம். ஆறு மாதங்களுக்கு மேல் இந்த மாத்திரையைச் சாப்பிட நேரும்போது பார்வைப் பரிசோதனை செய்துகொள்ளவேண்டியது அவசியம். சிறுநீரக பாதிப்போடு காசநோய் இருப்பவர்கள், இந்த மாத்திரையைச் சாப்பிடும்போது கவனமாக இருக்க வேண்டும். 

தொற்று நோய்களின் உலகம்!

இந்தப் பக்கவிளைவுகள் பற்றிப் பெரும்பாலும் எந்த மருத்துவரும் சொல்வதில்லை. அதற்குக் காரணம் இருக்கிறது. பக்கவிளைவுகள் பற்றிச் சொன்னால் நம் மக்கள் மாத்திரை சாப்பிடுவதையே தவிர்த்துவிடுவார்கள். அதற்காகவே, அது பற்றிப் பேசாமல் தவிர்ப்போம். ஆனால், அலோபதி மருத்துவத்தில் பக்கவிளைவுகள் இயல்புதான். நம் இலக்கு, காசநோயை விரட்டுவது. காசநோயை குணப்படுத்தாவிட்டால், நோயாளி பலருக்கு அதைப் பரப்புவார். மிக எளிதாகப் பரவும் நோய் என்பதால் கட்டுப்படுத்துவது சிரமமாகிவிடும். அதனால், கண்டிப்பாக மாத்திரைகளைச் சாப்பிட்டே ஆக வேண்டும்.

பக்கவிளைவுகள் ஏற்படும்பட்சத்தில், அதைச் சரிசெய்ய சில மாத்திரைகள் தருவார்கள். அதற்கு குணமாகாவிட்டால், பக்கவிளைவை ஏற்படுத்தும் மாத்திரையைத் தவிர்த்துவிட்டு, அதற்கிணையான இரண்டாம் நிலை மாத்திரையைப் பரிந்துரைப்பார்கள். ஆக, எல்லாப் பிரச்னைக்கும் தீர்வு இருக்கிறது.

 மருத்துவம் ஒளிவு மறைவில்லாமல் இருக்க வேண்டும்.  நோயாளியையும் மருத்துவரையும் இணைக்கும் ஒற்றை இழை, நம்பிக்கை. தேவைப்படும் இடத்தில் சில விஷயங்களை நோயாளியிடம் மறைக்கத்தான் வேண்டும். ஆனால், பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளவும் வேண்டும். அதற்காகவே பக்கவிளைவுகள் பற்றி விரிவாகச் சொன்னேன்.

பக்கவிளைவுகளுக்கு பயந்து காசநோய் சிகிச்சையை நிறுத்திவிடக் கூடாது. அது தேசத்துக்குச் செய்யும் பாதமாகிவிடும் என்பதை மறக்கக் கூடாது.

- களைவோம்...