ஹெல்த்
Published:Updated:

20 - 50 பரிசோதனைகள்... சிகிச்சைகள்!

20 - 50 பரிசோதனைகள்... சிகிச்சைகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
20 - 50 பரிசோதனைகள்... சிகிச்சைகள்!

வாணி ஷ்யாம் சுந்தர் மகப்பேறு மருத்துவர்ஹெல்த்

ரு தலைமுறை முன்னர்வரை தங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தாமல்தான் இருந்தார்கள் பெண்கள். இன்றைய பெண்கள், தங்கள் ஆரோக்கியமே குடும்பத்தின் ஆரோக்கியம் என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வழிகாட்டும்விதமாக, பெண்களுக்கு எந்தெந்த வயதுகளில் என்னென்ன பிரச்னைகள் வரலாம், அவற்றுக்கான பரிசோதனைகள் மற்றும் தீர்வுகள் குறித்து விளக்கமாகச் சொல்கிறார் மகப்பேறு மருத்துவர் வாணி ஷ்யாம் சுந்தர். 

20 - 50 பரிசோதனைகள்... சிகிச்சைகள்!


20 + வயது உடல் பருமனில் உஷார்!

பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம்:
இந்தப் பிரச்னை வந்தால் உடல் பருமன் பிரச்னையும் சேர்ந்து வரும். அல்லது உடல் பருமனாக இருப்பவர்களுக்கு பாலிசிஸ்டிக் பிரச்னை வரும். ஒன்றுக்கொன்று தொடர்பிருப்பதால், உடல் எடை கூட ஆரம்பித்துவிட்டால் ஸ்கேன் செய்து, சினைப்பைகளில் நீர்க்கட்டிகள் இருக்கின்றனவா என்று பார்க்கவும். உடல் பருமன், நீர்க்கட்டி... இரண்டில் ஒன்று வந்தாலும் அதற்கான சிகிச்சை, உணவு முறை, உடற்பயிற்சி என்று ஆரம்பித்துவிடுங்கள்.

20 - 50 பரிசோதனைகள்... சிகிச்சைகள்!



ஒழுங்கற்ற மாதவிடாய்: 20 வயதுகளில் இன்று பெரும்பாலான பெண்கள் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்படுகிறார்கள். 21 நாள்களுக்கு ஒருமுறை, 28 நாள்களுக்கு ஒருமுறை, 30 நாள்களுக்கு ஒருமுறை, 35 நாள்களுக்கு ஒருமுறை என்று ரெகுலரான கால இடைவெளியில் மாதவிடாய் வரவில்லை என்றால் மருத்துவ ஆலோசனையும், தேவைப்பட்டால் ஹார்மோன் பரிசோதனையும் செய்துவிடுங்கள். மாத்திரைகள் மூலமே இந்தப் பிரச்னையைக் குணப்படுத்திவிடலாம்.

உடல் பருமன்: ஜங்க் ஃபுட் சாப்பிடும் பழக்கம்தான் இதற்குக் காரணமாக இருந்தால், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை நிறையச் சாப்பிடுங்கள்.

உடம்பு பலவீனம்:
உடம்பு எடை போட்டுவிடுமோ என்ற அச்சத்தில் கூல்டிரிங்ஸ் குடித்து உடம்பைக் கெடுத்துக்கொள்பவர்களுக்கு வருகிற பிரச்னை இது. சத்தாகச் சாப்பிடுவது மட்டுமே தீர்வு.

வெள்ளைப்படுதல்: இதைப் பிரச்னை என்று எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. ஒருவேளை நிற மாற்றம், துர்நாற்றம் இருந்தால் கர்ப்பப்பையை ஸ்கேன் செய்து பார்க்கவும்.

பீரியட்ஸ் வலி: இதையும் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தாங்க முடியாத வலி என்றால், மகப்பேறு மருத்துவர் ஆலோசனையுடன் வலி நிவாரணி மாத்திரை உட்கொள்ளலாம். மாத்திரை வேண்டாம் என்பவர்கள், இயற்கை வைத்தியத்தை முயன்று பார்க்கலாம்.

30 வயதுகளில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அச்சுறுத்தல் இருப்பதால், 20 வயதுகளிலேயே அதற்கான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுங்கள்.

20 - 50 பரிசோதனைகள்... சிகிச்சைகள்!

30 + வயது குடும்ப பாரம் கடந்து ஆரோக்கியம் காக்க வேண்டும்!

* வீடு, கணவர், குழந்தைகள், வேலை என்று மன உளைச்சல் அதிகமாகிற வயது. அதனால்,  பிடித்த விஷயங்களின் பக்கம் மனதைத்  திருப்பி, உங்களை சந்தோஷமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.

* குடும்ப பாரத்தின் காரணமாக ஆரோக்கியத்தின் மீதான கவனம் குறையும். அது தவறு. சரிவிகித உணவு, உடற்பயிற்சி இரண்டும் அவசியம்.

20 - 50 பரிசோதனைகள்... சிகிச்சைகள்!

* தொடர்ந்து கருத்தடை மாத்திரை சாப்பிடுபவர்களுக்கு ஹார்மோனல் பிரச்னைகள் ஏற்படலாம். கர்ப்பப்பையின் வாயில் வைக்கப்பட்ட கருத்தடைச் சாதனம் உள்ளே நகர்ந்துவிடும் பிரச்னை ஏற்படலாம்.

* 20 வயதுகளில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி போடத் தவறியவர்கள், 30 வயதுகளில் அதைப் போட்டுக்கொள்ளலாம்.

* 35 வயதில் இருந்து பாப்ஸ்மியர் மற்றும் மேமோகிராம் பரிசோதனையை வருடந்தோறும் செய்துகொள்ள ஆரம்பிக்க வேண்டும்.

* உங்கள் குடும்பப் பெண்களில் 30 வயதுகளின் இறுதியிலேயே மெனோபாஸ் ஏற்பட்டுவிடும் மரபு யாருக்காவது இருந்திருந்தால், நீங்களும் மனதையும் உடலையும் அதற்குத் தயார் செய்துகொள்ளுங்கள்.

20 - 50 பரிசோதனைகள்... சிகிச்சைகள்!

40+ வயது மெனோபாஸ் அவஸ்தைகள்!

* பெரிமெனோபாஸ் (Perimenopause) நிலை ஆரம்பிக்கும். இதன் காரணமாக உடம்பு திடீரென வியர்த்துக்கொட்டுதல், படபடப்பு, சருமம் சுருங்குதல், முடிகொட்டுதல், ஒழுங்கற்ற மாதவிடாய் என விதவிதமான பிரச்னைகள் ஏற்படும். தாங்க முடியவில்லை என்றால், மருத்துவரைச் சந்தித்து ஹார்மோன் தெரபி எடுத்துக்கொள்ளலாம்.

* ரத்த அழுத்தம், டயாபடீஸ், தைராய்டு பிரச்னைகள்  ஏற்படலாம்.

* வருடம் ஒரு தடவை மாஸ்டர் ஹெல்த் செக்-அப் செய்துகொள்ள ஆரம்பிக்கவேண்டியது இந்தக் காலகட்டத்தில்தான்.

* பெரிமெனோபாஸ் மற்றும் தைராய்டு காரணமாக எலும்புகள் பலவீனமாக ஆரம்பிக்கும். அதனால், கால்சியம், மல்ட்டி வைட்டமின், இரும்புச்சத்து மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை பெற்று உட்கொள்ளலாம்.

20 - 50 பரிசோதனைகள்... சிகிச்சைகள்!

50 வயதுகளில்..! கர்ப்பப்பையில் கவனம்

* 40 வயதுகளில் வருடந்தோறும் செய்ய ஆரம்பித்த மாஸ்டர் ஹெல்த் செக்-அப்பை ஐம்பதுகளிலும் தொடர வேண்டும்.

* ஐந்து வருடங்களாக ஏற்படாமல் இருந்த பீரியட்ஸ் திடீரென ஏற்படலாம். அது கர்ப்பப்பைப் புற்றுக்கான அறிகுறியாக இருக்கலாம். பெல்விக் ஸ்கேன், பாப்  ஸ்மியர் பரிசோதனைகள் செய்து பிரச்னையை உறுதிப்படுத்தி, சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.

* மெனோபாஸுக்குப் பிறகு கர்ப்பப்பை சுருங்கிவிடும். ஆனால், சினைப்பைகள் மட்டும் சிலருக்கு வீங்க ஆரம்பிக்கும். இது சினைப்பைப் புற்றுநோயாக  இருக்கலாம். இது ஸ்கேனில் உறுதியானால், அறுவைசிகிச்சை செய்துகொள்ள வேண்டி வரும்.

* தசைகள் தளர்வடைவதால் கர்ப்பப்பை இறங்கும். மருத்துவ ஆலோசனையின்படி அதை உள்ளே தள்ளிவிடும் சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

- ஆ.சாந்தி கணேஷ்