
அச்சம் தவிர்
`எவ்ளோ பெரிய மாத்திரை?’ என்று தேவயானி சொல்வதுபோல சொல்லத் தோன்றுகிறதா? இந்தச் சொல்லைச் சரியாகப் படிக்க வேண்டுமென்பதுகூட அவசியமில்லை. அடுத்த முறை இதைப் பார்த்தாலே உங்களுக்கு இந்தக் கட்டுரை நினைவுக்கு வந்துவிடும். இந்த ‘நீளமான’ போபியாவை உலகின் சுவாரஸ்யமான பயம் எனச் சொல்லலாம். நீளமா...ன சொற்களைக் கண்டால் வருவதுதான் இந்த பயம்.

நன்றாகப் படித்துக்கொண்டே செல்லும் மாணவனோ, மாணவியோ நீண்ட வார்த்தையைக் கண்டதும் சிறிது தயக்கம் காட்டுவதுண்டு. அவர்களுக்குத்தான் இந்த Hippopotomonstrosesquipedaliophobia. ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் `ஹிப்போபோடமைன்’ என்றால் அசுரன் என்று பொருள். அதிலிருந்து வந்ததுதான் இந்தப் பெயர். இது கற்பனையான பயமாகக் கருதப்பட்டாலும், இந்த போபியாவால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட வார்த்தைகளை எதிர்கொள்ளும்போது மனதளவில் பல கவலைகளையும் சந்திக்கிறார்கள்.

காரணங்கள்: பிறக்கும்போதே இந்த பயத்தோடு யாரும் பிறப்பதில்லை; சில எதிர்மறையான நிகழ்வுகள்தான் இந்த பயத்துக்குக் காரணம். பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை நீண்ட வார்த்தைகளைக் கண்டு திகைத்துப் போயிருக்கலாம். மூளையின் பகுதியான அமிக்டலா (Amygdala) அல்லது ஹிப்போகாம்பஸ் ஆபத்தான நிகழ்வுகளைப் பதிவுசெய்யும். எப்போதாவது நீண்ட வார்த்தைகளைப் பார்க்கும்போது அது எதிர்மறையான நிகழ்வுகளை நினைவுக்குக் கொண்டு வரும். அதுதான் பயமாக வெளிப்படும்.
அறிகுறிகள்: பொதுவான அறிகுறிகள் ஏதுமில்லை. ஒவ்வொருவருக்கும் மாறுபடும். நடுக்கம், அழுகை, அந்த இடத்தைவிட்டு ஓடுதல், தலைவலி, வேகமான இதயத் துடிப்பு, ஆழமற்ற சுவாசம், இது முட்டாள்தனமான பயம் என்றாலும் தன்னைத் தானே கட்டுப்படுத்த முடியாத நிலை போன்றவை சில அறிகுறிகள்.
சிகிச்சை: முதலில் நீண்ட வார்த்தைகளைப் பற்றிச் சிந்திப்பது, யோசிப்பது, கடைசியாகச் சொல்வது போன்று Exposure Therapy செய்யப்படுகிறது. பேச்சு சிகிச்சை, புலனுணர்வு சார்ந்த நடத்தை சிகிச்சைகளும், ஆழ்ந்த சுவாசம், ஓய்வு, தியானம் போன்ற சுய உதவிப் பயிற்சிகளும் இந்த பயத்தை எதிர்கொள்ள உதவி செய்பவை.
- இ.நிவேதா